தி.மு.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மக்களின் அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும், அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமலும் இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமலும், மக்களின் பல்வேறு அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றாமலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமலும் இருந்து வரும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர வலியுறுத்தியும் சென்னை புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 7-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் பள்ளிக்கரணை பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டிடம் அருகில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையிலும், சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.பி. கந்தன் முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.