விஜய்யை காண்பதற்காக சில தொண்டர்கள் மரக்கிளைகள் மீதும், வாகனங்கள் மீதும் ஏறி நின்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரை சென்றுள்ளார். 14 வருடங்களுக்கு பிறகு விஜய் இன்று மதுரைக்கு சென்றுள்ளார். முன்னதாக மதுரைக்கு வரும் விஜய்யை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் காலையிலேயே த.வெ.க. தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், கட்சி தொடங்கிய பின் விஜய் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “நான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறேன். வேறொரு சந்தர்ப்பத்தில் மதுரைக்கு வரும்போது நமது கட்சி சார்பாக உங்களை நான் சந்திப்பேன். யாரும் எனது வாகனத்தை பின்தொடர்ந்து வர வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்து சேர்ந்தார். அங்கு அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் குவிந்தனர். மதுரை விமான நிலையத்தில் விஜய்யை கண்டதும் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை அவருக்கு வரவேற்பு அளித்தனர். விஜய்யை காண அதிக அளவில் கூட்டம் கூடியதால் மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பிரசார வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார். மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்ல இருக்கிறார். விஜய்யை காண்பதற்காக சில தொண்டர்கள் மரக்கிளைகள் மீதும், வாகனங்கள் மீதும் ஏறி நின்றனர். தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே விஜய்யின் வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது. தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக தனது வாகனத்தை பின்தொடர வேண்டாம் என தொண்டர்களிடம் விஜய் கேட்டுக் கொண்டார். இருப்பினும் கொடைக்கானல் செல்லும் விஜய்யின் வாகனத்தை அவரது ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.