செல்வம் அடைக்கலநாதன் எம். பி.எச்சரிக்கை
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(2-05-2025)
ஜனாதிபதி அல்லது ஜே.வி.பி அரசாங்கமோ இனவாதத்தை அழிப்பதாக அவர்கள் கருதினால் அல்லது பயங்கரவாதமாக இதனை கருதினால் அது அவர்களின் தவறு என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.ஆகவே இனப்பிரச்சினை இருக்கின்றது.அதனை தீர்க்கும் கடமையும், பொறுப்பும் இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றது.
இனவாதத்தை ஒழிப்போம் என்று மீண்டும் எங்கள் மீது எமது மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொண்டு இந்த அரசாங்கம் எங்கள் மீது அடக்குமுறையை திணிக்கின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குமாக இருந்தால் இந்த அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
-மன்னாரில் வைத்து 2ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை மாலை ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் நிர்ணயிக்கக் கூடிய ஒரு சக்தியாக திகழும்.மன்னார் நகர சபை உள்ளடங்களாக அனைத்து சபைகளிலும் யாருடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுப்போம்.
குறிப்பாக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளுடன் எமது கலந்துரையாடல்கள் இடம் பெறும்.அவர்களுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை அலங்கரிக்கும் நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.
தேசியத்துடன் இருக்கின்ற தமிழ் கட்சிகள் ஓரணியில் திரள கூடிய அஸ்திவாரமாக அமையும்.அந்த வகையில் இந்த ஒற்றுமை என்பது மாகாண சபை தேர்தல் வந்தாலும் கூட குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை எதுவாக இருந்தாலும் ஒற்றுமையாக நாங்கள் செயல்படக்கூடிய ஒரு சூழலை மக்கள் ஆதரிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உள்ளது.
உள்ளூராட்சி சபைகளில் ஒற்றுமை வெளிப்படுகின்ற போது தொடர்ச்சியாக நாங்கள் சேர்ந்து பயணிக்கக்கூடிய சில நேரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என பயணிக்கக்கூடிய ஒரு அஸ்திவாரத்தை இடுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை நாங்கள் இதனால் ஏற்படுத்தி கொள்ள முடியும். மன்னார் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிர்ணயிக்கின்ற ஒரு சக்தியாக இருக்கும்.
என்.பி.பி. நாட்டின் பல பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.அவர்கள் இனவாதத்தை ஒழிப்பதாக தெரிவிக்கின்றார்கள்.அதற்காக பாரிய சட்டங்களை கொண்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.
எங்களுடைய இனம் இந்த நாட்டிலே சுதந்திரமாக தமது நிலத்தில் வாழக்கூடிய அனைத்து உரித்துக்களையும் கொண்ட இனமாக தமிழினம் இருக்கின்றது.
குறிப்பாக வடக்கு கிழக்கில் பூர்விகத்தை கொண்ட ஒரு பிரதேசமாக இருந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் எமது இனத்திற்கு ஏற்படுத்துகின்ற அநீதிகளை தட்டிக்கேற்கின்ற வகையில் ஜனநாயக போராட்டங்கள்,ஆயுதப் போராட்டங்கள் இடம் பெற்றது.
அதற்கான தியாகங்களை எமது இளைஞர் யுவதிகள்,பொதுமக்கள் எல்லோறும் தியாகம் செய்துள்ள வரலாறு இன்றைக்கும் உள்ளது.இந்த வரலாற்றின் தன்மைதான் ஐ.நா. சபை வரைக்கும் கதவை தட்டி உள்ளது என்பது உண்மை.
எனவே பயங்கரவாத தடைச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது.நாங்கள் இனத்தின் பால் எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளையும் எங்கள் தேசத்தை கட்டிக் காக்கின்ற வகையில் எமது உரிமைகளை நாங்கள் தக்க வைக்கின்ற வகையிலும்,நாங்கள் ஒரு தனித்துவமான இனம் என்பதை கூறிக் கொள்ளும் வகையிலும் எங்களுடைய போராட்டங்கள் அமைந்துள்ளது.
அந்த வகையில் ஜனாதிபதி அல்லது ஜே.வி.பி அரசாங்கமோ இனவாதத்தை அழிப்பதாக அவர்கள் கருதினால் அல்லது பயங்கரவாதமாக இதனை கருதினால் அது அவர்களின் தவறு என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஆகவே இனப்பிரச்சினை இருக்கிறது.அதனை தீர்க்கும் கடமையும்,பொறுப்பும் இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றது.
இனவாதத்தை ஒழிப்போம் என்று மீண்டும் எங்கள் மீது எமது மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொண்டு இந்த அரசாங்கம் எங்கள் மீது அடக்குமுறையை திணிக்கின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குமாக இருந்தால் இந்த அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கை விடுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும்.
எனவே அரசாங்கம் எமது இனப்பிரச்சினை தீர்வுக்கு கவனம் செலுத்த வேண்டும். அதை தட்டிக் கழிக்கும் வகையில் இனப்பிரச்சினையை ஒழிப்போம் என்பதை ஏற்க முடியாது.என அவர் மேலும் தெரிவித்தார்.