உக்ரைன் ட்ரோன் தாக்குதல் காரணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவின் 4 விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ரஷியாவில் மாஸ்கோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகள் மீது உக்ரைன் 100க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியது. இதில் பலவும் இடைமறித்து அழிக்கப்பட்டதாக மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் மாஸ்கோவைச் சுற்றியுள்ள நான்கு விமான நிலையங்களும் தற்காலிகமாக விமானங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரஷியாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, உக்ரைனின் எல்லையிலும் ரஷ்யாவின் உள்பகுதியிலும் டிரோன்கள் தாக்குதல் நடந்துள்ளதால் மற்ற ஒன்பது பிராந்திய ரஷிய விமான நிலையங்களும் தற்காலிகமாக செயல்படுவதை நிறுத்திவிட்டன. டிரோன் தாக்குதலில் குர்ஸ்க் பகுதியில் இரண்டு பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஆளுநர் அலெக்சாண்டர் கின்ஷ்டீன் தெரிவித்தார். மேலும் வோரோனேஜ் பகுதியில் சில சேதங்கள் பதிவாகியுள்ளன. இரண்டாம் உலகப் போரில் வெற்றி தினத்தைக் குறிக்கும் வகையில் மே 8 முதல் 10 வரை மாஸ்கோவில் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்காக 3 நாள் போர் நிறுத்தத்திற்கு புதின் அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த போர் நிறுத்தத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்த நிலையில் இந்த டிரோன் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
