உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் கிடைத்த பின் முல்லைத்தீவில் இருந்து ஒரு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார் “முல்லைத்தீவு ரவிகரனோடு, கிளிநொச்சி சிறீயரோடு” என்று. அதற்கு கிளி நொச்சியைச் சேர்ந்தவரும் முன்பு பிரதேச சபை உறுப்பினராக இருந்தவரும், இப்பொழுது சுதந்திரனுக்கு தீவிர விசுவாசியுமான ஒருவர் பதில் எழுதினார் “யாழ்ப்பாணம் சுமந்திரனோடு“என்று.
இந்த மூன்று கருத்துக்களும் கட்சியின் ஆதரவாளர்களுடைய கருத்துக்களாக இருந்தாலும் அவை தமிழ் அரசியலில் குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தை ஓரளவுக்குக் காட்டுபவை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரையிலும் இரண்டு முடிவுகளைத் தெளிவாக உணர்த்தியுள்ளன. முதலாவது, அவை ஒற்றுமையின்மையை பிரதிபலிக்கின்றன. இரண்டாவது ஒற்றுமைப்பட்டால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன.
தேர்தல் முடிவுகளின்படி தமிழரசுக் கட்சி பரவலாக வெற்றி பெற்றிருக்கிறது. அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. வடக்குக் கிழக்காக கிளைகளைக் கொண்டுள்ள, வடக்குக் கிழக்காக கீழ்மட்டத் தொண்டர் வலையமைப்புகளைக் கொண்டுள்ள, ஒப்பீட்டளவில் பெரிய கட்சி அது.எனவே அது அதிக ஆசனங்களை வெல்லும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. எனினும் அதிக சபைகளை அவர்களால் கைப்பற்ற முடியுமா இல்லையா என்பது இக்கட்டுரை எழுதப்படும் வரையிலும் உறுதிப்படுத்த முடியவில்லை. தேர்தல் முடிந்த கையோடு கட்டுரை எழுதப்படுகிறது
கிளிநொச்சியில் சிறீதரன் பெற்ற வெற்றி அங்கு அவர் எவ்வளவு பலமாக உள்ளார் என்பதனைக் காட்டியுள்ளது. அதாவது சிறீதரன் தன் பலத்தை அங்கே நிரூபித்திருக்கிறார். அதற்கு வேறு ஒரு விளக்கமும் உண்டு. சுமந்திரனுக்கு தன்னுடைய பலம் என்ன என்பதனை சிறீதரன் அங்கே காட்டியிருக்கிறார். அது போலவே கட்சியின் செயலாளராக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கி கடுமையாக உழைத்த சுமந்திரனும் ஏனைய சபைகளில் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த ஆசனங்களைத் தொகுத்துக் காட்டி தமிழரசுக் கட்சி தமிழர் தாயகத்தில் முன்னணியில் நிற்கிறது என்று கூறுகிறார். அந்த வெற்றிக்கு அவரே மறைமுகமாகப் பொறுப்பேற்கிறார்.அதன்படி கட்சியின் வெற்றி அவருடைய வெற்றியும் தான். அதாவது தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரனின் பிடியை தேர்தல் முடிவுகள் மேலும் பலப்படுத்தியிருக்கின்றன என்று பொருள்.
ஆயில் கட்சிக்குள் இரண்டு தலைமைப் போட்டியாளர்களின் பிடியும் பலமாக இருப்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன. எனவே இரண்டு அணிகளும் தொடர்ந்தும் கட்சியை இரண்டாக வைத்திருக்கப் போகின்றனவா? கட்சி நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்கு வரப்போவதில்லையா?
இந்தப் பிரிவுகளின் விளைவாகத்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அந்தப் பின்னடைவிலிருந்து கற்றுக் கொண்டதனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு புதிய கூட்டை உருவாக்கியது. அந்தக் கூட்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கிறது. சில சபைகளைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் அது தமிழரசுக் கட்சியின் இடத்தைக் கைப்பற்றக்கூடிய ஒரு வெற்றி அல்ல. எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி தமிழ் அரசியலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா? தமிழ்க் கட்சிகள் கிடைத்த வெற்றியில் இருந்து கற்றுக்கொள்ளுமா?
தேர்தல் அரசியலுக்குள்ளால் பார்த்தால் தமிழரசுக் கட்சி அதன் வெற்றியை கொண்டாடும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கொண்டாடும். ஒற்றுமையின் பலத்தை முன்னணி இப்பொழுது சுவைக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த ஒற்றுமையை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்து செல்வார்களாக இருந்தால் இதைவிடப் பலமான ஒரு கூட்டை அவர்கள் கட்டி எழுப்பலாம்.
மிதவாத அரசியலில் புனிதமான கூட்டுக்கள் எவையும் கிடையாது. எல்லாமே தந்திரோபாயக் கூட்டுக்கள்தான். கொள்கைத் தெளிவு உடைய தரப்புகள் தலைமைப் பொறுப்புகளில் இருந்தால் போதும். அதில் யாரை இணை த்துக் கொண்டாலும் அந்தக் கூட்டு கொள்கை வழியில் முன் செல்லும். இங்கு பிரச்சனை தலைமைப் பொறுப்பு யாரிடம் இருக்கிறது என்பதுதான். எனவே முன்னணி அது உருவாக்கியிருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையை அடுத்தடுத்த கட்டங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்கு உரிய புதிய உபாயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
பருத்தித்துறையில் நடந்த முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கஜேந்திரகுமார் இந்த தேர்தல் ஏன் தமிழ் மக்களின் தலைவிதையைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தல் என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்திருந்தார். அவருடைய விளக்கத்தின்படி நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றிகளை வைத்து என்பிபி தமிழ் மக்கள் தனக்கு ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்று உலகப்பரப்பில் சொல்லி வருகிறது. இந்நிலையில் அந்த வெற்றியை உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் உறுதிப்படுத்துவார்களாக இருந்தால் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளை விட்டு நீங்கி என்பிபியின் பக்கம் வந்துவிட்டார்கள்.எல்லாரும் இலங்கையர்கள் என்ற என்பிபியின் கோஷத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று அது வியாக்கியானப்படுத்தப்படுத்தும். அதாவது தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக, தேசிய இனமாகக் கருதவில்லை என்று என்பிபி கூறுவது மீண்டும் ஒரு தேர்தலில் உறுதிப்படுத்தப்பட்டு விடும். என்றபடியால் இத்தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கும் தீர்ப்பு தமிழ்த் தேசியத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பது என்ற பொருள்பட கஜேந்திர குமார் உரையாற்றியிருந்தார்.
ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எவ்வாறு தமிழ்த் தேசியத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக மாறியது?
அதற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் பொறுப்பு. பொருத்தமான வீரத்தில் அதாவது பொருத்தமான தேர்தலில் பொருத்தமான முடிவுகளை அவர்கள் எடுக்கத் தவறினார்கள். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னிறுத்திய அணியச் சேர்ந்த ஒரு சிவில் சமூக செயல்பாட்டாளர் கூறுவது போல அவர்கள் “சரியான நேரத்தில் பிழையான முடிவுகளை எடுத்தார்கள். பிழையான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தார்கள்“.
ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் பொருத்தமான முடிவை எடுத்து இருந்திருந்தால் அங்கிருந்து அவர்கள் வெற்றி பெறத் தொடங்கி இருந்திருப்பார்கள். அந்த வெற்றியானது தமிழரசு கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவையும் வெற்றிகரமாகக் கையாண்டு இருந்திருக்க முடியும்.
ஆனால் பொது வேட்பாளரின் விடயத்தில் முன்னணி தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்புக் காட்டியது. பொது வேட்பாளரை ஆதரித்தவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று பட்டம் சூட்டியது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் பொது வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகள் தேசியத் தன்மை மிக்கவை என்று கூறியது.
இப்பொழுது முன்னணி உருவாக்கி வைத்திருக்கும் கூட்டுக்குள் முன்பு பொது வேட்பாளரை முன்னிறுத்திய தரப்புகள் தான் இணைந்திருக்கின்றன. அவர்கள் கொள்கைத் தெளிவு உடையவர்கள். கூட்டுக்கு வெளியே இருப்பவர்கள் கொள்கைத் தெளிவற்றவர்கள் என்று முன்னணி கூறக்கூடும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், ஜனாதிபதித் தேர்தலில் சரியான ஒரு முடிவை எடுத்து இருந்திருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் வாக்குகள் அப்படிப் பார தூரமாகச் சிதறும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது. சுயேட்சைகள் அந்த அளவுக்கு கிளம்பும் ஒரு நிலைமை வந்திருக்காது. அதன் விளைவாகத்தான் தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்கள் கிடைத்தன தமிழரசு கட்சிக்கு குடா நாட்டுக்குள் ஒரு ஆசனமும் கிடைக்காமல் போனது.
எனவே தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தருணங்கள் இதற்கு முன்னரும் வந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த நிர்ணயகரமான தருணங்களைச் சரியாக எடை போட்டு, பொருத்தமான முடிவுகளை எடுக்கத் தவறியது. தங்களைக் கொள்கைப் புனிதர்களாக அவர்கள் எப்பொழுதும் கூறிக் கொண்டார்கள்.ஆனால் மிதவாத அரசியலில் கொள்கைப் புனிதம் என்பதே நடைமுறையில் கிடையாது. 100% சுத்தமானது, 22 கரட் தங்கம் என்றெல்லாம் மிதவாத அரசியலில் பேச முடியாது. இருப்பவற்றில் தரமானது, இருப்பவற்றில் தூய்மையானது, இருப்பவற்றில் பொருத்தமானது, என்றுதான் எதையும் தேர்ந்தெடுக்கலாம். கூர்ப்பின் விதியும் அதுதான். தக்கன பிழைக்கும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தக்க ஒரு முடிவை எடுத்திருக்கிறது. தக்க ஒரு கூட்டை உருவாக்கியிருக்கிறது. இந்தக் கூட்டை எதிர்காலத்தில் அடுத்தடுத்த கட்டங்களுக்கும் விரிவுபடுத்துவார்களாக இருந்தால் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவினால் எதிர்காலத்தில் அந்தக் கட்சிக்குள் ஏற்படக்கூடிய விளைவுகளையும் அவர்கள் வெற்றிகரமாகக் கையாளலாம்
குறிப்பாக,யாழ்.மாநகர சபையை பொறுத்தவரையிலும் அங்கே எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அது ஒரு குறியீட்டு வெற்றி. யாழ்ப்பாணம் எனப்படுவது தமிழ் மக்களின் பண்பாட்டுத் தலைநகரங்களில் ஒன்று. அந்த மாநகர சபையில் யார் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது ஒரு குறியீடு. அந்த நகர முதல்வருக்கு அதிகம் முக்கியத்துவம் உண்டு. ஆனால் அவ்வளவு முக்கியத்துவம் மிக்க அந்த நகர சபையை திருப்திப்படும் பெரும்பான்மையோடு கைப்பற்ற எந்த கட்சியாலும் முடியவில்லை என்பது தமிழ் ஒற்றுமையின்மையின் விளைவு தான்.
குறைந்தபட்சம் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் தங்களுக்கு இடையே போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கை எதற்காவது போயிருக்கலாம். அவ்வாறான உடன்படிக்கை ஒன்றைச் செய்யுமாறு பல்வேறு தரப்புக்களும் அவர்களுக்கு வலியுறுத்தினார்கள். ஆனால் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை
தமிழரசுக் கட்சி, தான் தனித்து நின்று வெல்லும் என்று கருதியது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொள்கைக் கூட்டு மட்டுமே என்று கூறியது. விக்னேஸ்வரனின் கட்சிக்குள் மணிவண்ணன் முதன்மை பெற்றிருப்பதனால் அக்கட்சியானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நெருங்கிவர முடியவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதை நெருங்கி வர முயற்சிக்கவில்லை. சங்குக் கூட்டணிக்குள் சந்திரகுமாரை இணைத்துக் கொண்டதனால் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள் அந்தக் கூட்டுக்குள் இணைய யோசித்தன
இப்படிப்பட்டதோர் பின்னணியில் சில கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையும் தமிழரசுக் கட்சிக்கு வாய்ப்பாக அமைந்தது. முன்னணிக்கும் ஓரளவுக்கு வாய்ப்பாக அமைந்தது.
யாழ்.மாநகர சபையில் மான் கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பொழுது அக்கட்சியை சேர்ந்தவர்கள் மறைமுகமாக வீட்டுக்கு வாக்களிக்குமாறு கேட்டார்கள். சைக்கிளுக்கு அல்ல. ஏனெனில், மான் கட்சிக்குள் மணிவண்ணன் இருப்பதால் அக்கட்சி கஜேந்திரகுமாரை ஆதரிக்கவில்லை. அதுபோல தமிழ்த் தேசிய பேரவைக்குள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் வேட்பு மனுக்கள் நல்லூர் பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்ட பொழுது அக்கட்சியானது தன் ஆதரவாளர்களிடம் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டது. மான் கட்சிக்கு அல்ல. ஏனென்றால் மணிவண்ணனுக்கும் ஐங்கரநேசனுக்கும் இடையில் உடன்பாடு இல்லை. அர்ஜுனாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட போது அவர் தனது ஆதரவாளர்களிடம் சைக்கிளை ஆதரிக்குமாறு கேட்டிருந்தார். இவ்வாறாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதனால் குறிப்பிட்ட கட்சிகள் தமது ஆதரவாளர்கள் திசை காட்டிய நோக்கிச் செல்வதைத் தடுக்கும் ஒரு விடயத்தில் கட்சிகளுக்கு இடையே ஒருவித புரிந்துணர்வு இருந்தது. ஆனாலும் அங்கேயும் கட்சிகளுக்கு இடையிலான பகை மற்றும் போட்டிகளின் அடிப்படையில்தான் யாரை ஆதரிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்ற வெற்றிகளின் பின்னணியிலும் தோல்விகளின் பின்னணியிலும் ஒற்றுமையின்மைதான் உண்டு. கடந்த 15 ஆண்டுகால தமிழரசியலில் ஏற்பட்டிருக்கும் தேக்கத்துக்கும் அதுதான் காரணம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்பிபிக்கு கிடைத்த வெற்றிகளுக்கும் அதுதான் காரணம். இந்தத் தேர்தல் தமிழ் மக்களின் தலைவிதையை தீர்மானிக்கும் ஒரு தேர்தல் என்று கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதற்கும் அதுதான் காரணம். எனவே, தமிழ்த் தேசியக் கட்சிகள் தோல்விகளிலிருட்னது மட்டுமல்ல உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றிகளிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும்.