கடந்த பாராளுமன்ற தேர்தலில் அநுர அரசிடம் வடக்கின் தமிழ் தேசியம் ”அடகு”வைக்கப்பட்டதை பயன்படுத்தி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மூலம் வடக்கின் தமிழ் தேசியத்தை ”அடக்கம்” செய்யத் திட்டமிட்ட தேசிய மக்கள் சக்தி வடக்கு மக்களின் தமிழ் தேசிய அலையில் அள்ளுண்டு போயுள்ளதுடன் வடக்கில் தமிழ் தேசியக்கட்சிகளுக்கு கிடைத்த பேராதரவு மூலம் வடக்கில் தமிழ் தேசியம் மரணிக்கவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது”
கே.பாலா
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்காக நடந்து முடிந்த தேர்தலில் ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ”திசைகாட்டி”சின்னத்தில் போட்டியிட்டு தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் உள்ள 12 ஆசனங்களில் 5 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றமை மூலம் தமிழ் தேசியக் கொள்கையிலிருந்து வடக்குத் தமிழர் ”திசை”மாறிவிட்டதாகவும் ”தடம்”புரண்டு விட்டதாகவும் தமிழ் தரப்பினரால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு மக்களிடம் தேசிய மக்கள் சக்தி சம்மட்டி அடி வாங்கியுள்ளதுடன் வடக்கு தமிழர்களிடம் தமிழ் தேசியம் மரணிக்கவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் அடங்கலாக 339 உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8287 ஆசனங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களினால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு தமிழர் வாக்குகளை பெற்றுக் கொண்டே அவர்களை அழிக்கும் ,ஆக்கிரமிக்கும் ,அடையாளங்களை இல்லாதொழிக்கும் ,ஏமாற்றும் வேலைகளில் ஈடுபட்டமைக்கு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம் பெற்றது. 8287 ஆசனங்களுக்காக 75,589 வேட்பாளர்கள் போட்டியிட்டநிலையில் இந்த தேர்தலில் வாக்களிக்க 17,156,338 பேர் தகுதிபெற்றிருந்தனர். ஆனால் வாக்களிப்பில் மக்கள் அக்கறை காட்டாத நிலையில் காலையிலிருந்து மந்த கதியிலேயே வாக்களிப்பு இடம்பெற்றது. இதற்கமைய காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிக்கு முடிவடைந்த நிலையில் நாடளாவிய ரீதியில் 65 வீத வாக்களிப்பே இடம்பெற்றிருந்தது.
அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித்தேர்தலில் 79.46 வீத வாக்களிப்பும் பாராளுமன்றத்தேர்தலில் 68.93 வீத வாக்களிப்பு இடம்பெற்ற நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான இந்த தேர்தலில் 65 வீத வாக்களிப்பே இடம்பெற்றது.அதிலும் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பில் வடக்கு மாகாண மக்கள் பெரிதும் அக்கறை காட்டாத நிலை காணப்பட்டது. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா ,மன்னார் என 5 தேர்தல் மாவட்டங்கள் உள்ள நிலையில் கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்களிப்பு வீதத்தை விடவும் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டது.
இதற்கமைய கடந்த பாராளுமன்றத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 69வீத வாக்களிப்பு இடம்பெற்ற நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 56.6 வீத வாக்களிப்பே இடம்பெற்றுள்ளது. இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலில் 62 வீத வாக்களிப்பும் இம்முறை 61 வீத வாக்களிப்பும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலில் 63 வீத வாக்களிப்பும் இம்முறை 61.32 வீத வாக்களிப்பும் வவுனியா மாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலில் 65வீத வாக்களிப்பும் இம்முறை 59.56 வீத வாக்களிப்பும் மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில்70வீத வாக்களிப்பும் இம்முறை 70.15வீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளது.
இதில் வடக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமே கடந்த பாராளுமன்றத்தேர்தலைவிடவும் சற்று அதிகமான வாக்களிப்பு வீதம் பதிவானதுடன் இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பில் வடக்கில் அதி கூடிய வாக்களிப்பு வீதம் பதிவான மாவட்டமாகவும் மன்னார் மாவட்டம் உள்ளது. அதேவேளை மிகவும் குறைந்த வாக்களிப்பு வீதம் பதிவான மாவட்டமாக யாழ் மாவட்டம் உள்ளது.வாடாக்கில் இவ்வாறு வாக்களிப்பு வீதம் குறைவடைந்தாலும் வாக்களித்த மக்கள் கடந்த முறை விட்ட தவறை மீண்டும் செய்யாது தமிழ் தேசியத்திற்கு வாக்களித்து தமிழரை தமிழ் தேசியக்கட்சிகளே ஆள வேண்டும் என்ற செய்தியை மீண்டும் உலகிற்கு தெரிவித்துள்ளதுடன் தமிழ் தேசியத்திற்கும் புது இரத்தம் பாய்ச்சியுள்ளனர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியிடம் வடக்கு மக்களினால் ”அடகு”வைக்கப்பட்ட தமிழ் தேசியத்தை எவ்வாறு அவர்கள் உளூராட்சிசபைகளுக்கான தேர்தலில் மீட்டு எடுத்துள்ளனர் என்பதனைப் பார்ப்போம்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசியமக்கள்சக்தி 6 ஆசனங்களைக் கொண்ட யாழ்.-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 80,830 வாக்குகளைப்பெற்று 3 ஆசனங்களையும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 39894வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்களையும் என வடக்கு மாகாணத்தில் 120724 வாக்குகளை ப்பெற்று 5 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. அதேவேளை யாழ்.-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி 63,327 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 27,986 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் ஊசி சின்னத்தைக் கொண்ட சுயேச்சைக்குழு 27,855 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றின. அதேவேளை வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி 32,232 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் இலங்கை தமிழரசுக்கட்சி 29,711 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் அகில ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 21,102 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் இலங்கை தொழிலாளர் கட்சி 17,710 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றின.
இவ்வாறான நிலையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தேசியமக்கள் சக்தி யாழ்.-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 67167 வாக்குகளைப் பெற்று கடந்தமுறை பெற்ற வாக்குகளிலிருந்து 13663 வாக்குகளை இழந்ததுடன் எந்தவொரு சபையையும் கைப்பற்றவில்லை.அதேபோன்று வன்னி தேர்தல் மாவட்டத்தில் 41651 வாக்குகளைப்பெற்றது.இதன்மூலம் வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 108818 வாக்குகளைப்பெற்றுள்ளது. இது பாராளுமன்றத்தேர்தலில் பெற்ற 120724 வாக்குகளை விடவும் 11936 வாக்குகள் குறைவாகும் .
தேசியமக்கள் சக்திக்கு சென்ற வாக்குகள் இவ்வாறு குறைவடைந்த நிலையில் தமிழ் தேசியக்கட்சிகளுக்கான வாக்குகள் இம்முறை பெருமளவில் அதிகரித்துள்ளன. இதற்கமைய பாராளுமன்றத்தேர்தலில் வடக்கில் 93038 வாக்குகளை ப்பெற்றிருந்த தமிழரசுக்கட்சி இந்த தேர்தலில் 162137 வாக்குகளைப்பெற்றுள்ளது. இது கடந்த முறை பெற்ற வாக்குகளைவிடவும் 69099 வாக்குகள் அதிகம். அதேபோன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கடந்த முறை வடக்கில் 35478 வாக்குகளைப்பெற்றிருந்த நிலையில் இம்முறை 64119 வாக்குகளைப்பெற்றுள்ளது. இது கடந்த முறை பெற்ற வாக்குகளைவிடவும் 28641 வாக்குகள் அதிகம்.தமிழ் தேசிய ஜனநாயக கூட்டமைப்பு கடந்த முறை 43615 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் இம்முறை 71278 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கடந்த முறை பெற்ற வாக்குகளைவிடவும் 27663 வாக்குகள் அதிகம்.
இதன்மூலம் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முக்கியமான தமிழ்த்தேசிய கட்சிகளான தமிழரசுக்கட்சி ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ,ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆகிய வடக்கில் மொத்தமாக 172131 வாக்குகளைப்பெற்றிருந்த நிலையில் இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கில் மொத்தமாக 297534 வாக்குகளைப்பெற்றுள்ளன. இது இவர்கள் கடந்த முறை பெற்ற வாக்குகளைவிடவும் 125403 வாக்குகள் அதிகம்.
அதேபோன்று பாராளுமன்றத்தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தமிழரசுக்கட்சி 257813 வாக்குகளைப்பெற்றிருந்த நிலையில் உள்ளூராட்சி சபைக்களுக்கான தேர்தலில் 307,657 வாக்குகளைப்பெற்றுள்ளது. இது 49844 வாக்குகள் அதிகம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்றத்தேர்தலில் 39,894 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் உள்ளூராட்சி சபைக்களுக்கான தேர்தலில்70,944 வாக்குகளைப் பெற்றுள்ளது . இது 31050 வாக்குகள் அதிகம்.ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தேர்தலில் 65,382வாக்குகளைப்பெற்றிருந்த நிலையில் உள்ளூராட்சி சபைக்களுக்கான தேர்தலில் 89,177 வாக்குகளைப் பெற்றுள்ளது.இது 23795 வாக்குகள் அதிகம்.
ஈ.பி.டி.பி பாராளுமன்றத் தேர்தலில் 24,300 வாக்குகளைபெற்றிருந்த நிலையில் இம்முறை 20,000 வாக்குகள் வரையே பெற்றுள்ளது. . அதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள்சக்தி வடக்கில் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் 47508 வாக்குகளைப் பெற்ற நிலையில் இந்த தேர்தலில் 35893 வாக்குகளைப் பெற்றுள்ளதன் மூலம் 11615 வாக்குகளை இழந்துள்ளது. இதேபோன்று கடந்த பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தேசிய கூட்டணி,மற்றும் சுயேச்சைக்குழுக்களின் வாக்குகள் இம்முறை தமிழ் தேசியக்கட்சிகளுக்கே சென்றுள்ளன. இந்த வாக்குகள் தான் தமிழ் மக்களின் தமிழ் தேசிய உணர்வை மீண்டும் நிரூபித்துள்ளன