இங்கிலாந்து அரசாங்கம் சட்டப்பூர்வமாக வேலைக்காக இங்கிலாந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விசா வழங்குவதை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்கு பணிக்காக வருபவர்கள் அங்கேயே குடியேறுகிறார்கள். இதை குறைப்பதற்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் குடியேறுபவர்களை குறைக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெள்ளை அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக இங்கிலாந்துக்கு வருபவர்களுக்கு கடப்பிதழ் வழங்கும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து வருவதற்காக கடப்பிதழ் கேட்டு விண்ணப்பிப்பவர்களில் திறமையான பட்டதாரிகளுக்கு கடப்பிதழ் வழங்கவும் திறமை குறைந்தவர்களுக்கு குறிப்பிட்ட வரம்புகளை நிர்ணயிக்கவும் அதில் முன்மொழியப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் வெளிநாட்டு குற்றவாளிகளை அங்கிருந்து வெளியேற்றுவதை எளிதாக்கும் வகையில் நாடு கடத்தல் மற்றும் வெளியேற்றுதல் விதிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
