அண்மையில் நடைபெற்ற மத்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வெற்றிபெற்ற லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு வைபவம் கடந்த 12ம் திகதி திங்கட்கிழமையன்று காலை ஒட்டாவா மாநகரில் நடைபெற்றது. இதில் பிரதமராக மார்க் கார்னி அவர்களும் மேலும் 30 அமைச்சர்களும் பதவியேற்றார்கள். இதில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் பழங்குடியினர் விவகார அ மைச்சராக பணியாற்றிய ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பதவியேற்றார்.
அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தனது இளம் வயதில் கனடாவில் குடியேறி இங்கு கல்வி கற்று பின்னர் பல்கலைக்கழகப் பட்டங்களையும் சட்டத்துறை பட்டத்தையும் பெற்று தொடர்ந்து அரசியலில் புகுந்தார். அதற்கு முன்னர் கனடாவின் தமிழர் சமூகம் சார்ந்த பல அமைப்புக்களிலும் முக்கிய பதவிகளை வகித்து சேவையாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடாவின் புதிய மத்திய அமைச்சரவையில் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் அமைச்சர் என்ற வகையில் பின்வரும் பொறுப்புக்களையும் அதிகாரங்களையும் கொண்டிருப்பார் என்பதும் கவனிக்கத்தக்கதாகும். தமிழர் ஒருவர் கனடாவில் இந்த பொறுப்புக்கள் வாய்ந்த அமைச்சராகப் பணியாற்றுவது உலகத் தமிழர்களும் பெருமை தேடித்தரும் விடயமாகும்.
முக்கிய பொறுப்புகள்:
அவசரநிலை மேலாண்மை:
கனடாவில் அவசரகால நிர்வாகத்திற்கு பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர் வழிநடத்துகிறார், மத்திய அரசிற்குள் அடங்கும் அமைப்புகளை ஒருங்கிணைத்து மாகாணங்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் பணிபுரிகிறார். பல்வேறு அவசரநிலைகளிலிருந்து தயாராக, பதில் மற்றும் மீட்பு ஆகியவை இதில் அடங்கும்.
பொது பாதுகாப்பு:
பொது பாதுகாப்பு விஷயங்களுக்கான மத்திய கூட்டாட்சி அமைப்பான பொது பாதுகாப்பு மற்றும் அவசரகாலத் திணைக்களத்திற்கு அமைச்சர் பொறுப்பு.
தேசிய பாதுகாப்பு:
பயங்கரவாதம் மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட அச்சுறுத்தல்களிலிருந்து கனேடியர்களைப் பாதுகாப்பதில் அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார், மேலும் மத்திய அரசின் கீழ் வரும் துறைகள் மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள முகவர் நிறுவனங்களின் பணிகளை மேற்பார்வை செய்வதும் அமைச்சரின் கடமையாகும்
கனடாவின் மத்திய அமைச்சின் கீழ் வரும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களும் சபைகளுமான
றோயல் கனடிய மவுண்டட் பொலிஸ் (ஆர்.சி.எம்.பி), கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை (சி.எஸ்.ஐ.எஸ்), கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (சிபிஎஸ்ஏ), மற்றும் கனடாவின் பரோல் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் அமைப்புகளின் நடவடிக்கைகளை அமைச்சர் மேற்பார்வைசெய்யும் பொறுப்புக்களைக் கொண்டவர்.
கௌரவ ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு கனடா உதயன் ஆசிரிய பீடம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.