யாழ்ப்பாணத்தின் கண் சத்திரசிகிச்சைத்துறையின் விசேட வைத்திய நிபுணர் M. மலரவன் ஜனாதிபதிக்கு எழுதிய அவசரக்கடிதத்தில் வலியுறுத்துகிறார் .
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட கண் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணரும், வடமாகாணம் முழுவதும் காத்திருத்தல் நேரத்தினை பூச்சியமாக்கி கண் வெண்புரை சத்திரசிகிச்சை உள்ளிட்ட ஏனைய கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சைகளை உடனுக்குடன் வழங்கும் செயற்றிடத்தினை வெற்றிகரமாக முன்னகர்த்திகச்சென்று தேசிய ரீதியில் பாராட்டுதல்களினை பெற்றவருமான விசேட வைத்திய நிபுணர் M. மலரவன் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். இவரது மருத்துவ சேவையையும் நோயாளர்கள் மீது காட்டும் இரக்கமும் அன்பும் தமிழ் மக்கள் மாத்திரமல்ல அவரிடம் சிகிச்சை பெற்ற சிங்கள மொழி பேசும் தென்னிலங்கை நோயாளிகளும் பாராட்டி மகிழ்வதை அனைவரும் பேசிக் கொள்வதுண்டு.
இவ்வாறான சிறப்புக்களும் சேவை மனப்பான்மையும் கொண்ட விசேட வைத்திய நிபுணர் M. மலரவன் அவர்கள் தனது கடிதத்தில் இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பில் உடனடியாக கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்தவேண்டியதன் அவசியத்தினை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பெற்றுள்ள விபரங்கள் பின்வருமாறு அமைகின்றன.
இலங்கையின் பல்வேறு சுகாதாரக் குறிகாட்டிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு ஒப்பானதாக காணப்படுகிற பொழுதும் கண் சுகாதாரக் குறிகாட்டிகள் பிராந்திய அண்டைநாடுகளினைவிடப் பின்னடைந்து காணப்படுவது தொடர்பில் அவர் இந்த கடிதத்தில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் கண் சிகிச்சை சேவைகள் முதனிலை சுகாதாரசேவைளுடன் ஒருங்கிணைக்கப்படாமலும் அவற்றின் ஒரு பாகமாக உள்வாங்கப்படாமலும் உள்ள நிலமையால் கண் பார்வை இழப்பு அல்லது பாதிப்பு அதிகரித்து செல்வதாகவும், குறிப்பாக வயது வந்தவர்களில் அதிகரித்து செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் வாழ்க்கைத்தரம், உற்பத்தித்திறன் என்பன பாதிக்கப்படுவதுடன் பார்வை இழந்தவர்களை அதிகளவில் பராமரிக்க வேண்டிய தேவை சமூகத்துக்கும், குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் ஏற்படுவது பெரும் சுமையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமைகளிலிருந்து நாட்டினையும் மக்களினையும் மீட்டெடுக்க சுகாதாரக் கட்டமைப்பில் உடனடியாக கண் சுகாதார தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்தவேண்டியதன் அவசியத்தினை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர், சுகாதார அமைச்சர், பிரதி சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே பல வழிகளில் பாராட்டுக்களைப் பெற்ற கண் வைத்திய நிபுணர் M. மலரவன் அவர்களுக்கு மேலும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்த நிலையில் அவருக்கு ஜனாதிபதி அவர்களிடமிருந்தும் தகுந்த பதில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.