”தேசிய மக்கள் சக்தி என்ற மிதவாத முகமூடியுடன் மக்கள் முன் தோன்றி ஆட்சியை கைப்பற்றியவர்கள் இன்று அந்த ஆட்சியை தக்க வைக்க, சிங்கள வாக்குவங்கியை பாதுகாக்க தமது முகமூடியை கழற்றி பழைய கடும்போக்குவாத, இனவாத ஜே .வி.பி.யினராக தமது ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த ஆட்டம் ஜே .வி.பி.-என்.பி.பி.க்கிடையில் பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது”
கே.பாலா
இலங்கையில் வரலாற்று சாதனைகளுடன் ஆட்சியைக்கைப்பற்றி அரியணை ஏறியுள்ள இனவாத ஜே .வி.பி.-மிதவாத தேசிய மக்கள் சக்திக்கிடையிலான மோதல் போக்கும் விரிசலும் தொடர்ந்தும் அதிகரித்து வருவதனை ஜே .வி.பி-தேசியமக்கள் சக்தி தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜே .வி.பி.யின் 60 ஆவது ஆண்டு நிறைவு தினக் கூட்ட உரை மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தியுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் ஒரு அணி ஜே.வி.பி. சார்பு கடும்போக்குவாத இனவாத அணியாகவும், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்னொரு அணி மிதவாதப் போக்குடைய ”கற்றோர்” அணியாகவும் பிளவுபடத் தொடங்கியுள்ளது.
ஆட்சியிலுள்ள ஜே .வி.பி.- தேசிய மக்கள் சக்திக்கிடையிலான மோதல்போக்கும் விரிசலும் முதலில் , தங்களது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம், சலுகைகள், வாகனங்கள், எரிபொருள், ஊழியர்கள் போன்றவற்றைப் பெற மாட்டார்கள் என்ற ஜே.வி.பி.யின் அறிவிப்புடன் ஆரம்பமானது. முழுநேர ஜே.வி.பி உறுப்பினர்கள் அத்தகைய சலுகைகள் இல்லாமல் வாழ முடிந்தாலும், உயர்மட்ட சம்பளம், வேலைகள் மற்றும் சலுகைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பாராளுமன்றத்திற்கு வந்த தேசிய மக்கள் சக்தியிலுள்ள ”கற்றோர்” குழுவினருக்கு இது பெரிய பிரச்சினையாக மாறியது.
பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி ( ஜே .வி.பி.) தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு (என்.பி.பி.)159 ஆசனங்கள் கிடைக்கப் பெற்ற நிலையில், இவற்றில் 107 பேர் தேசிய மக்கள் சக்தியையும் 52 பேர் நேரடியாக ஜே.வி.பியையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.எனினும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 107 பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கலாநிதி பட்டம் மற்றும் பேராசிரியர் பட்டங்களை வகிப்பவர்கள். அதே போல் பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து அதிக சலுகைகள் மற்றும் அதிக சம்பளத்துடன் பணியாற்றிய நிலையில் தற்போது தங்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமைக்காக அவற்றை கைவிட்டுள்ள நிலையில் பாராளுமன்ற சலுகைகளையும் தியாகம் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். அரசின் ஜனாதிபதி பிரதமர் , அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் கூட ஜே .வி.பி. கட்சியின் கணக்கிற்கே செல்வதனால் அரசுக்குள் இரு அணிகளுக்குமிடையில் முதலில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.
இரண்டாவதாக இந்தியாவுக்கு அநுரகுமார தலைமையிலான ஜே .வி.பி. – தேசிய மக்கள் சக்தி அரசு விரும்பியோ விரும்பாமலோ கொடுக்கும் முக்கியத்துவம் வழக்கமாக சீனா ஆதரவுடன் இயங்கும் ஜே .வி.பி.யில் உள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்களை சினமடைய வைத்துள்ள நிலையில் அண்மைய இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயம் ஜே .வி.பி.- தேசிய மக்கள் சக்திக்குள் புகைந்து கொண்டிருந்த முறுகலை, பிளவுகளை மேலும் தீவிரப்படுத்தியது. தீவிர இந்திய எதிர்ப்புணர்வாளரும் இலங்கையின் நிறைவேற்றதிகார ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க, தான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் இராஜதந்திர அழுத்தங்கள் காரணமாக முதல் நாடாக இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் அரசுக்குள் ஏற்படுத்திய விரிசலை விடவும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் ஜே .வி.பி. -தேசிய மக்கள் சக்திகிடையிலான விரிசலை மேலும் அதிகப்படுத்தியது.
இவ்வாறான நிலையில் தான் ஏறுமுகமாக இருந்த ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஆதரவு நடந்து முடிந்த உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலில் இறங்குமுமானதால் அதிர்ச்சியடைந்த ஜே .வி.பி.செயலாளர் நாயகம் ரில்வின் சில்வாவும் கட்சியின் முக்கியஸ்தர்களாகவுள்ள ஜே .வி.பி அமைச்சர்களும் கட்சித்தலைவரான அநுரகுமார திசாநாயக்கவுக்கு விடுத்த எச்சரிக்கையும் கொடுத்த நெருக்கடியும் தான் ஆரம்பத்தில் மிதவாதப் போக்குடைய தேசிய மக்கள் சக்தி அணி சார்பாக இருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை கடும்போக்குவாத,இனவாத அணிப் பக்கம் தற்போது சாய வைத்துள்ளது.
இதன் விளைவாகவே ஜே.வி.பி.யின் வரலாற்றை மறந்து செயற்பட முடியாதென , ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கொழும்பில் அண்மையில் நடந்த ஜே.வி.பியின் 60 ஆவது ஆண்டுநிறைவு தினக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வைத்துக்கொண்டு பகிரங்கமாக அறிவித்தார். ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்த போது ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சிரித்த சிரிப்பின்மூலம் ஜனாதிபதி தேர்தல் , பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் மிதவாத போக்குடன் பயணித்த ஜனாதிபதி அநுரகுமாரவை தற்போது ஜே.வி.பி .யின் கடும்போக்குவாத,இனவாத பிடிக்குள் கொண்டுவந்துள்ள வெற்றிக் களிப்பைக் காண முடிந்தது.
இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ,வேதனைகள் பலவற்றுடனான வரலாற்றை கொண்ட கட்சியாக ஜே .வி.பி. இருந்துள்ளது. கஸ்டங்கள், சித்திரவதைகள், வேதனைகள், தோல்விகள் அதேபோன்று காட்டிக்கொடுப்புகள் மற்றும் சூழ்ச்சிகளையும் கண்டுள்ள கட்சியாக இருந்தது. இவற்றுக்கு சமாந்திரமாக வெற்றிகளையும் நாங்கள் கண்டுள்ளோம். சவால்களுக்கு மத்தியில் இந்த இயக்கத்தை கைவிடுவதற்கு எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் வெற்றியென்ற எதிர்பார்ப்புடன் 60 வருடங்களாக பயணித்துள்ளோம். இதனை சாதாரண அரசியல் இயக்கங்களால் செய்ய முடியாது. இப்போது நாங்கள் மிகவும் பலமாக மக்களிடையே முன்வந்துள்ளோம். எமது துணிச்சலே இவற்றுக்கு காரணம்.
இப்போது எதிர்க்கட்சியோ பல்வகை கட்சியாகவே இருக்கின்றது. அந்த பல்வகை கட்சிகள் கூடினாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. பிரிந்துநின்று வாக்குகளை கேட்டு இப்போது சபையில் ஒன்றாகி சபைகளை அமைக்க முயற்சிக்கின்றனர். வெட்கமில்லையா? வேண்டுமென்றால் பல்வகை எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஒருபக்கத்திலும் நாம் ஒரு பக்கத்திலும் அரசியல் செய்வோம். அப்போது மக்கள் தமது அரணாக எம்மையே தெரிவு செய்வர். ஒரு சபையையும் வெற்றி பெறாமல் ஜனாதிபதியாக முடியுமா? அவர்கள் தங்களை ஜே.வி.பி என்று நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறான வெற்றியை ஜே.வி.பியால் மட்டுமே பெற முடியும். என ஜே .வி.பி புராணமே பாடியுள்ளார்.
ஜே .வி.பி.யின் படுகொலைகள்,வன்முறைகள் உச்சம் தொட்ட நிலையில் ஜனாதிபதியாக பிரேமதாச பதவியேற்ற பின்னர் இரும்புக்கரம் கொண்டு ஜே .வி.பி.அடக்கப்பட்டது ,அழிக்கப்பட்டது. இதன்பின்னர் ஜே.வி.பி. தலைமைத்துவம் 1994இல் மீண்டும் ஒன்றுகூடி, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன், அதன் சோசலிச வாய்ச்சவடால்களை பெருமளவில் கைவிட்டுவிட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரமான இனவாத யுத்தத்தை ஆதரித்ததுடன், தம்மை ஒரு பாராளுமன்றக் கட்சியாக மாற்றிக்கொண்டது. இவ்வாறான நிலையில்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான வடக்கு,கிழக்கு இணைப்பை நீதிமன்றத்தினூடாக பிரித்ததுடன் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்து தமிழ் மக்களுக்கு எதிரான இறுதி அழித்தொழிப்பு யுத்தத்தை ஆரம்பிக்கவும் முன்நின்றது.
போருக்கான அதன் ஆதரவு மற்றும் பல்வேறு முதலாளித்துவ அரசாங்கங்களில் அதன் பங்கேற்பு அல்லது அரசியல் ஆதரவளிப்பினால் செல்வாக்கிழந்து போன ஜே.வி.பி. 2015 இல் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியை ஸ்தாபித்தது. ஜே.வி.பி.யின் கடந்த கால ஆயுத வன்முறை ,படுகொலை அடையாளத்தை மறைக்கும் நோக்கிலேயே, அநுரகுமாரவும் அவருக்கு ஆலோசனைகளை வழங்கும் கற்றோர்களும் தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியைப் போட்டுக் கொண்டார்கள்.சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றையும், கல்வியாளர்களையும் புதிதாக இணைத்துக் கொண்டு தேசிய மக்கள் சக்தியாக உருமாறி கடந்த ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டு வெற்றிபெற்று இன்று ஆட்சியாளர்களாகியுள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு தேசிய மக்கள் சக்தியின் மிதவாத போக்கே காரணம் என்பது ஜே.வி.பி . தரப்பின் குற்றச்சாட்டு. சிங்கள தேசியவாதம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் வாதம்.அதனால் தான் தற்போது ஜே .வி.பி. அமைச்சர்கள் இனவாதம் கக்கத் தொடங்கியுள்ளனர். தமிழினவாதம் தலைவிரித்தாடுவதாக குற்றம்சாட்டத்தொடங்கியுள்ளனர்.தமிழ் அரசியல் கைதிகள் எவருமே இல்லை என்கின்றனர். வடக்கில் 6000 ஏக்கர் கரையோரக் காணிகளை ஆக்கிரமிக்கும் வர்த்தமானியை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாவீரர் தின நினைவு நிகழ்வுக்கெல்லாம் அனுமதி கொடுத்தவர்கள் இன்று இனப்படுகொலைக்கான கனடா நினைவுச் சின்னத்திற்கு கனடா தூதுவரை அழைத்து கடும்கண்டனம் தெரிவிக்கினறனர். இனப்படுகொலை என்பது கட்டுக்கதை என்கின்றனர். சர்வதேச விசாரணைகளை , தலையீடுகளை ஏற்க முடியாதென்கின்றனர்.தமிழ் தேசியக்கட்சி வன்னியில் கசிப்பும் பணமும் கொடுத்தே வாக்குகளைப் பெற்றதாக அமைச்சர்கள் புலம்புகின்றனர்.ஆனையிறவு உப்புக்கு தமிழ் பெயர் வைக்க முடியாது .பெயரை விட்டு உப்பின் ருசியைப்பாருங்கள் என்கின்றனர்.வடக்கின் உப்பு வடக்கிற்கு என்ற கோரிக்கைக்கு இடமில்லை என்கின்றனர். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை அடக்க, ஒடுக்கத் தொடங்கியுள்ளனர் ஜனாதிபதி அடிக்கடி மகாநாயக்கர்களை சந்தித்து மண்டியிடுகின்றார்.
உள்ளூராட்சி சபைகளில் நாம் வெற்றி பெற்றுள்ள இடங்களில் மக்கள் ஆணைக்கு எதிராக சவால்விடுக்கும் வகையில் எவராவது ஆட்சியமைக்க முயன்றால் நாங்கள் பாராளுமன்ற மற்றும் அரசியலமைப்பு அதிகாரங்களை பயன்படுத்துவோம் என ஜனாதிபதி எச்சரிக்கின்றார். நாம் வெற்றிபெற்றுள்ள உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சிகள் ஏதேனும் முறையில் ஆட்சியமைப்பார்களாக இருந்தால் மத்திய அரசாங்கத்தினால் அவ்வாறான சபைகளுக்கு நிதி வழங்கப்படாது.அவ்வாறு எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்கும் சபைகளில் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டாலும், அந்தப் பிரதேசங்களின் அபிவிருத்திக்காக நிதி வழங்கப்படாது என்று பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மிரட்டுகின்றார்.
எனவே தேசிய மக்கள் சக்தி என்ற மிதவாத முகமூடி அணிந்து ”மாற்றம்” என்ற வேஷத்துடன் மக்கள் முன் தோன்றி ஆட்சியை கைப்பற்றியவர்கள் இன்று அந்த ஆட்சியை தக்க வைக்க தமது முகமூடியை கழற்றி வேஷத்தை கலைத்து பழைய கடும்போக்குவாத,இனவாத முகத்தைக்காட்டத் தொடங்கியுள்ளனர்.