கட்சியின் வளர்ச்சி பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கட்சியின் வளர்ச்சி பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்தாண்டு ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடத்தவுள்ளோம். அப்போது உறுதியாக தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்திருக்கிறது?.. எத்தனை தொகுதிகள்?.. வேட்பாளர்கள் யார்?.. என்பதை அறிவிப்போம். அதற்கு முன்னதாக 234 தொகுதிக்கும் தொகுதி பொறுப்பாளர்களை அறிவித்து, அதற்கான பணிகளை அடுத்த வாரத்தில் தொடங்க இருக்கிறோம். அதன்பிறகு தமிழகம் முழுவதும் நானும், விஜய பிரபாகரனும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. பொள்ளாச்சி வழக்கில் தற்போது தான் மிகப்பெரிய தீர்ப்பு வந்திருக்கிறது. பெண்களை தவறாக பயன்படுத்தும் நிலை நிச்சயமாக மாற வேண்டும். இதுபோன்ற சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மக்கள் பணத்தை ஊழல் செய்து யாரும் தப்பித்து விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.