தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று திருச்சி வந்த அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மலை அணிவித்தார். பின்னர் புதுக்கோட்டை சென்ற அவர் கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து, அங்குள்ள மங்களமேடு பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டியை தொடங்கி வைத்தார். இரவு அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்த உதயநிதி ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் 1,175 பயனாளிகளுக்கு ரூ.40,05 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாலையில் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுவினரை சந்தித்து உரையாடினார். இதையடுத்து தி.மு.க. மருத்துவ அணி சார்பில் நடைபெற்ற சமூக நீதி பாசறை கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இரவு திருச்சிக்கு வந்தார். திருச்சியில் சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை அவர் பேட்டரி காரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் திருச்சியில் இரவு தங்கி ஓய்வெடுத்த அவர் இன்று திருச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கருணாநிதி பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. இளைஞர் அணியினர் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைத்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்களை வீடு வீடாக கொண்டு மக்களிடம் தெரிவிக்க வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு இளைஞர் அணியினர் பாடுபடவேண்டும் என்று கூறினார்.