இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியை சேர்ந்தவர் பெத் மார்ட்டின்(வயது 28). இவரது கணவர் லூக் மார்ட்டின். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்தோடு கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். இஸ்தான்புல் நகரில் தரையிறங்கி நில மணி நேரங்களிலேயே பெத் மார்ட்டினுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் அவருக்கு அந்த நாட்டின் உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்று நினைத்துள்ளனர். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் பெத் மார்ட்டினை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தனர். உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு பெத் மார்ட்டின் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவெ பெத் மார்ட்டின் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் பெத் மார்ட்டினின் உடலை இங்கிலாந்துக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்கு முன்பாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அவரது உடலில் இதயம் இல்லாததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பெத் மார்ட்டினின் உறவினர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். பெத் மார்ட்டின் உயிரிழந்த விவகாரத்தில் துருக்கியை சேர்ந்த மருத்துவர்கள் உண்மையை மறைப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் துருக்கியை சேர்ந்த அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். பெத் மார்ட்டின் உடலில் அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
