ரஷியா-உக்ரைன் இடையே 3-வது ஆண்டாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கு மத்தியில் ரஷியா தனது டிரோன் வீச்சு தாக்குதல்களை அதிகரித்ததால், கடந்த வாரத்தில் 30 உக்ரேனியர்கள் இறந்துள்ளனர் மற்றும் 163 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதினை மட்டுமல்ல, உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் கடுமையாக சாடத் தூண்டி உள்ளது. . முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்து வந்த ரஷிய அதிபர் புதின், சமீபத்தில் தானாக போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தார்.
அதன்பின்னர், இருநாட்டு முக்கிய பிரமுகர்கள், துருக்கி நாட்டின் தலைநகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போர் கைதிகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. ஆனால் போர் நிறுத்தம் செய்வதில் உடன்பாடு எட்டப்படவில்லை. போர் தொடர்ந்து வரும் நிலையில் ஒப்பந்தப்படி, இரு நாடுகள் இடையே போர்க்கைதிகள் பரிமாற்றமும் நடந்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை, கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 390 பேர், சனிக்கிழமை 307 பேர், ஞாயிற்றுக்கிழமை 303 பேர் பரிமாறிக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில், ஒரே நாள் இரவில் 300-க்கும் அதிகமான டிரோன்களை ஏவி உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. அணிவகுத்த டிரோன்கள் குறித்து உக்ரைன் ராணுவ தரப்பு கூறும்போது, “உக்ரைனின் யூரி இஹ்நாட் தலைமை விமானப்படை தளத்தை குறி வைத்து திங்கட்கிழமை இரவில் ரஷியா 355 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இது மூன்றாண்டு கால போரில் இதுவரை இல்லாத தீவிர தாக்குதலாகும். இதில் சிலர் காயம் அடைந்து உள்ளனர். உயிர்ப்பலி குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளது.