சிவா பரமேஸ்வரன் —- மூத்த செய்தியாளர்
இலங்கையில் மனித உரிமைகள் ஆணையம் எனும் அமைப்பு இன்னும் ஓரளவுக்கு செயற்பாட்டிலுள்ளது என்பதே ஆறுதலளிக்கும் விஷயம். அதிலும் தைரியமாக ஒரு அறிக்கையை வெளியிடுவது வரவேற்கப்பட வேண்டியதே.
பல சுயாதீன ஆணைக் குழுக்களை உறுதிப்படுத்தவும், அவற்றின் செயற்பாட்டில் அரசின் தலையீடு இல்லாமல் செய்யவும் சில காத்திரமான அம்சங்களை அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம் கொண்டிருந்தது.
ஆனால் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை அடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ராஜபக்ஷ்களின் கையோங்கியதை அடுத்து முதல் முன்னெடுப்பாக 20ஆவது திருத்தத்துக்கு சாவுமணி அடிக்கப்பட்டது.
நீதிமன்றம் தலையிட்டு சில விஷயங்களில் சிறிய ஆறுதல்களை அளித்தாலும், 20 நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை. அந்த நல்லடக்கம் கௌரவமாக நடைபெற்றது எனும் ஆறுதலை அளித்ததே நீதிமன்ற தீர்ப்பு.
மனித உரிமைகள் ஆணைக் குழு, தேர்தல் ஆணிக் குழு, அரச செலவினங்கள் தணிக்கைக் குழு, அரசியல் யாப்புப் பேரவை போன்ற அமைப்புகள் இலங்கைக்கு மிகவும் தேவையான 20ஆவது சட்டத் திருத்தம் மூலமே முன்னெடுக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமாக இடங்களைக் கொண்டுள்ள ராஜபக்ஷ்களின் ஆட்சியில் அவர்கள் நினைப்பது எதுவும் சாத்தியமே.
இதில் விசாரணைக்கென்று காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களின் நிலையும் அடங்கும். குற்றச்சாட்டுகள் ஏதும் பதியப்படாமல் நீண்ட நாட்களாக சிறையில் அடைத்து வைப்பது, விடுதலை என்கிற வார்த்தையே அகராதியில் இல்லை என்பது போல் நடந்து கொள்வது போன்றவையே நடைமுறை எனும் நிலையில் பொலிஸ் காவலில் மரணங்கள் அதிகரிப்பது மக்களை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது.
உயிருக்கு உத்தரவாதமில்லை
இந்நிலையில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு கவலை வெளியிட்டுள்ளது.
அந்த ஆணையம் அப்படியான ஒரு அறிக்கையை தைரியமாக வெளியிட்டுள்ளதே பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இலங்கையில் சிறையிலிருப்போரின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவொன்று சமீபத்தில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலப் பகுதியில் மட்டும் பொலிஸ் காவலிலிருந்த எட்டு கைதிகள் மரணமடைந்துள்ளது தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
இனப்பாகுபாடின்றி இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. உதாரணமாகக் கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் திகதி தடுப்புக் காவலிலிருந்தபோது மாகந்துரே மதுஷ் என்றழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்சிதவின் மரணமும் இதிலடங்கும் என்று மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமை அல்லது அதற்கு இணையான மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அல்லது வேறு உத்தரவிற்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரின் நலன்கள் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென என்று அதன் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி விக்ரமரத்னவிற்கு, ஆணைக்குழுவின் ஆணையாளர் ரமணி முத்தெட்டுவகம அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இதைத் தெரிவித்துள்ளார்.
மதுஷுக்கு உயிராபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்த போதிலும், பொலிசார் இது தொடர்பில் எவ்விதமான பாதுகாப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
” கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் திகதி, கொழும்பு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்ட மாகந்துரே மதுஷின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக, , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. அதையடுத்து மதுஷின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, கடந்த அக்டோபர் 19ஆம் திகதி கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு, தொலைநகல் மூலம் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியபோதிலும் மாகந்துரே மதுஷ் கொலை செய்யப்பட்டதைத் தாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்“ என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளதுது”
மனித உரிமைகள் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மாஅதிபருக்கு கடந்த அக்டோபர் மாதம் அனுப்பிவைத்த கடிதத்தில், பொலிஸ் காவலில் இருந்தவர்கள் உயிரிழந்தமைக் குறித்து தாங்கள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக்கு அழைத்தும் வராத பொலிசார்
கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பொறுப்பதிகாரி ஆகியோரை, அக்டோபர் 21ஆம் திகதி காலை 11.30 மணிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோதிலும், அவர்கள் எந்த காரணமும் தெரிவிக்காமல் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராகவில்லை என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தமது ஆணைக்குழுவின் சட்ட வரம்புக்குள் (பிரிவு 21) வருகிறது
எனக் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணையாளர், குறித்த அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு கடுமையான சிக்கலை உருவாக்கும் என, மனித உரிமைகள் ஆணைக்குழு நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் காவலில் இருக்கும் கைதிகளின் மரணம் தெற்காசியாவின் அதிகமாகவுள்ளது என்பது கசப்பான உண்மை. ஆனால் அந்த எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கூடுதலாகவுள்ளது கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
மரணத்துக்கு கற்பிக்கப்படும் காரணங்கள்
விசாரணைக்காக பொலிசாரால் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்படுவோரும் விசாரணைக் காலத்தில் தடுத்து வைக்கப்படும் கைதிகளும் உயிரிழப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அதற்கான நியாயங்களைத் தேடுவது போலுள்ளது இலங்கை காவல்துறையில் கருத்துக்கள்.
உதாரணமாக போகம்பரை பழைய சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 5 சிறைக் கைதிகள் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி அதிகாலையில் சிறைச்சாலை மதில் மீது ஏறி தப்பிச்செல்ல முயற்சி செய்த போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
ஆனால் அன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதில் எது உண்மையென்பது காவல்துறையினருக்கே வெளிச்சம்.
அந்த துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த 30 வயதான நபர் எனச் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைகளிலுள்ள கைதிகளின் பாதுகாப்பு அங்குள்ள அதிகாரிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது எனும் நிலையில், அந்த அதிகாரிகளே அவர்களின் மரணத்திற்கு காரணமாகும் சம்பவங்கள் பாரதூரமான விஷயம் என்று சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு கூறுகிறது.
இது வேலியே பயிரை மேய்வது போன்ற கதையாகும். கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியவர்களே ஏதோ காரணம் காட்டி அவர்களைக் கொலை செய்வதோ அல்லது உயிரிழக்க வைப்பதோ சர்வ சாதாரணமாகி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்படியான கொலைகள் உடனடியாக விரைவு அடிப்படையில் விசாரிக்கப்பட்டு நியாயம் வழங்ககப்பட்டால் மட்டுமே இனி இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதியன்றும் மொனராகலைச் சிறைச்சாலையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கைதி அதிகாரிகள் தாக்கியதால் மரணமடைந்தார் என்று கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும், சட்டத்தரணியுமான சேனக பெரேரா கூறுகிறார்.
உறுதி செய்யப்படாத ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இரு அதிகாரிகள் இணைந்து இந்த கைதி உயிரிழப்பதற்கு காரணமாக இருந்துள்ளனர் என்கிறார் பெரேரா.
இந்தக் கொலையை அடுத்துச் சிறப்பு விசாரணையொன்றை முன்னெடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய அன்றைய தினமே அறிவித்தார். ஆனால் ஆறு வாரங்கள் கடந்த பின்னரும் இது தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாக அறிய முடியவில்லை.
தொற்றுக்கள் பரவிவரும் இக்கால கட்டத்தில் நாட்டின் சில சிறைச்சாலைகளில் இவ்வாறான மரணங்கள் நடைபெறுவது கவலையளிப்பது மட்டுமின்றி அச்சத்தையும் ஏற்படுத்துவதாகவும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கு ஏற்புடையதல்ல எனவும் கூறுகிறார் சேனக பெரேரா.
விசாரணை மற்றும் நடவடிக்கைகள் இல்லாத சூழலில் அதிகாரிகள் இப்படியான குற்றங்களை மேலும் புரிவதற்கான தூண்டுதலையும் தைரியத்தையும் அளிக்கும் என்று சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் எல்லோரும் குற்றவாளிகள் எனும் எண்ணம் ஜனாதிபதி தொடங்கி சிறைச்சாலை அதிகாரி வரை பரவியுள்ளது என்றும், நீதிமன்றம் உரிய விசாரணைக்குப் பிறகு அளிக்கும் தீர்ப்பின்படியே ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு கூறுகிறது.
அநேகமாக எல்லாச் சிறைச்சாலையில் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவது வழக்கமாகியுள்ளது, அது குறித்து அதிகாரிகள் அச்சப்படுவதில்லை என்றும் அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.
மஹர மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகள்
இந்த ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி மஹர சிறையிலிருந்த காவிந்த இசுறுவின் தந்தை தனது மகன் சட்ட விரோதமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் சிறை அதிகாரிகளோ அவர் சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற போது தவிறி விழுந்து மரணமடைந்ததாகக் கூறுகின்றனர்.
ஆனால் காவிந்து இசுறு சிறை அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
தனது மகனின் மரணம் ஒரு தாக்குதலால் நிகழ்ந்ததாகவும், அவரது கால்கள் மற்றும் கைகள் உடைக்கப்பட்டிருந்ததாகவும் அவரது தாய் ஆர்.எம்.கருணாவதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில், அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய போராட்டத்தின் மீது சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதில், கைதி ஒருவர் உயிரிழந்தமைத் தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
தனது கணவனைக் கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகச் சிறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபரின் மனைவி ஆகஸ்ட் 21 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரம் சிறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இப்படியான தொடர் மரணங்கள் பல கேள்விகளை எழுப்பினாலும் விடை என்னவோ மௌனமாகவே உள்ளது. நாட்டில் தற்போது 20ஆம் சட்டத்திருத்தம் இல்லாத நிலையில், அடுத்து என்ன எனும் கவலைகள் மேலோங்கவே செய்கின்றன.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் விசாரணைக் கைதிகளின் மரணம் ஆகியவை குறித்து இலங்கை அரசின் சிறைச்சாலைத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரைத் தொடர்பு கொண்டு கருத்துக்களைப் பெற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.