மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) வரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை நடத்தவுதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா பார்த்திபன், மயூரன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது
புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும் என்று பொலிஸார் விண்ணப்பத்தில் கேட்டுள்ளனர்.
அத்துடன் கோவிட் -19 தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் பொலிஸார் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
பிரதிவாதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் உள்ளிட்டோர் கடந்த வெள்ளிக்கிழமை மன்றில் முன்னிலையாகி பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு கடுமையான ஆட்சேபனையை முன்வைத்தனர். அதனை அடுத்து அன்றைய தினம் வழக்கு இன்றைய தினத்திற்கு திகதியிடப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.
அந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில் வழக்குத் தொடுனர் சார்பில் மூத்த பிரதி மன்றாடியார் அதிபதி பிரபாகரன் குமாரரட்ணம் இன்று பிற்பகல் மன்றில் முன்னிலையாவார் என்று அரச சட்டவாதியால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் காலநிலை சீரின்மை காரணமாக மூத்த பிரதி மன்றாடியார் அதிபதி நாளைக் காலை மன்றில் முன்னிலையாவார் என்று அரச சட்டவாதி ச.யாதவன் மன்றுக்கு அறிவித்தார்.
அதனால் வழக்கு நாளை முற்பகல் 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது