தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “NIVAR” என்ற சூறாவளியானது இன்று (24ஆம் திகதி) 0830 மணிக்கு காங்கேசந்துறை கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 325 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் 10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 83.0E இற்கும் இடையில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக அடுத்த சில நாட்களில் வட அகலாங்குகள் 07N – 13N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80E – 90E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை, கடுமையான அல்லது மிகக் கடுமையான காற்று, கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.
புத்தளத்திலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
கடல் நிலை:
புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக அல்லது உயர் அலைகளுடன் கொந்தளிப்பாகக் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.