*-நக்கீரன்*
கோலாலம்பூர், டிச.11:
மலேசிய இந்தியக் குடும்பங்களில் தற்போதைய கொரோனா காலத்தில் அதிகமான குடும்ப வன்முறையும் மணவிலக்கு கேட்டு வழக்கறிஞர்களை நாடுவதும் அதிகரித்து வருவதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.
இந்திய சமுதாயத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிணக்கும் பூசலும் இந்த பத்து மாத காலத்தில் அதிகரித்து வருவது உண்மைதான் என சமூக ஆர்வலர்களும் வழக்கறிஞர்களும்கூட தெரிவிக்கின்றனர்.
பொதுவாக, கணவன்-மனைவி இருவரும் குடும்ப வாழ்க்கையில் நன்முறையைக் கையாண்டு வருவதால்தான் குடும்பம் என்னும் பல்கலைக்கழகம் காலம் காலமாக ஆல் போல் தழைத்து வருகிறது. அதேவேளை, சிற்சில குடும்பங்களில் நன்முறையைவிட வன்முறை அதிகரிக்கும்போது குடும்பத்தில் பல்வேறு சிக்கல் எழுகின்றன.
குடும்பங்களில் நிகழும் வன்முறை திடீரென்று நிகழ்ந்து விடாது. அது பலகட்டங்களைக் கடந்து முற்றும்போதுதான், அது கணவன்-மனைவி இருவருக்கும் இடையேயான வன்முறையாக மாறுகிறது என்று சிலாங்கூர் இந்தியர் மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் முனைவர் திலகா சுப்பிரமனியன் தெரிவிக்கிறார்.
கணவன்-மனைவி இடையே ஏற்படும் மனக்கசப்பு, வெறுப்பு, தான் புறக்கணிக்கப்படுவதாக மனைவிக்கு ஏற்படும் எண்ணம், தான் அவமானப்படுத்தப் படுவதாக கணவனுக்கு தோன்றுவது, குடும்ப சுமை, பணியிடத்தில் ஏற்படும் மன அழுத்தம், ஷிஃப்ட் வேலைக்கு செல்லும் கணவன் மனைவியிடையே ஏற்படும் சலிப்பு, பெரியவர்களை வீட்டில் பராமரிப்பது போன்ற காரணங்களால் கணவன் அல்லது மனைவிக்கு மனதில் காயம் ஏற்படுகிறது என்று சமூக ஆர்வலரும் பெண்ணியவாதியுமான திலகா சொல்கிறார்.
வாழ்க்கைப் பரபரப்பில் இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளவவோ அல்லது கலந்து பேசவோ நேரம் இல்லாமல் இருந்தது. வீட்டு வேலைகளைப் பார்த்து கொண்டு பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளும் குடும்பப் பெண்கள் சுமக்கும் பளு அதிகமானது. இதில், வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை இன்னும் மோசம். காலையில் பிள்ளைகளைத் தயார்ப்படுத்தி பள்ளிக்கு அனுப்புவதில் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு டியுஷன் வகுப்பில் இருந்து பிள்ளைகளை அழைத்துவருவதுவரை நீடிக்கும். இத்தகைய பரபரப்பில் பாதி பிரச்சினை மறந்தேவிடும். சில தானாக ஆறிவிடும். எந்த நேரமும் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டிருப்பதால் பிரச்சினைகளை ஒத்திப்போடுவது வழக்கமாக இருந்தது.
இப்போது அப்படி இல்லை; பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் வேலை இல்லை; வகுப்புகளும் இணையம் ஊடாக நடைபெறுகிறது. இந்தச் சுழலில் கனவன் – மனைவி இருவருக்கும் முன்பைவிட அதிர நேரம் வீட்டில் ஒன்றாக இருப்பதால், கருத்துப் பரிமாற்றம் செய்யவும், வாக்குவாதம் புரியவும் தாராளமாக முடிகிறது.
இதில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் சிக்கல் தீரும். மாறாக, ஒருவரை மற்றவர் புரிந்துகொள்ளவில்லை என்றாலோ, தான் சொல்வதுதான் சரியென்று வாதிட்டாலோ அங்குதான் மனதில் விரிசல் ஏற்படும்.
மனதளவில் பட்டும் படாமல் வேர்விடும் விரிசல் நிலை மாறி, இப்போது நேருக்கு நேர் சந்திப்பதால் கணவன் – மனைவி இருவரிடையே மனக்கசப்பும் வெறுப்பும் அதிகமாகி அது வன்முறையில் முடிகிறது என்று திலகா சொல்கிறார்.
இதற்கெல்லாம் சரியான தீர்வு, கணவன்-மனைவியிடமே இருக்கிறது. இருவரும் திறந்த மனதோடு இருக்க வேண்டும்; இன்பம்-துன்பம் எதுவாயினும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்; குறிப்பாக, ஒருவர்மீது மற்றவர் பற்று கொண்டிருக்க வேண்டும். இந்த மூன்றையும் கடைப்பிடிக்கும் எந்தத் தம்பதியும் பிரியவே மாட்டார்கள் என்றார் ஷா ஆலமைச் சேற்ந்த திலகா.
குடும்ப வன்முறை என்னும் எல்லையைக் கடந்து, மணவிலக்கு கோரும் தம்பதியர் இந்திய சமுதாயத்தில் அதிகரித்து வருவதாக மணவிலக்கு வழக்குகளை அதிகமாக கையாளும் இராஜேஸ்வரி தெரிவிக்கிறார்.
குடும்ப வன்முறை என்பது இதுதான் என வரையறுக்க முடியாது. மனதை காயப்படுத்தும் சொற்களை கணவனோ அல்லது மனைவியோ யார் பயன்படுத்தினாலும் அதுகூட வன்முறைதான்; அடிக்க கையை ஓங்கினால், அதுவும் வன்முறைக் கூறுதான் என்று சொல்லும் வழக்கறிஞர் இராஜேஸ்வரி, சில குடும்பங்களில் கணவனைவிட அதிகமாக சம்பாதிக்கும் மனைவி, கணவனை சிறுமைப்படுத்துவம் உண்டு; நாளடைவில் அதுகூட வன்முறைக்கு வித்திடலாம்.
சில மனைவியர், பாதி வேலையை கணவனுக்கு ஒதுக்கிவைத்துவிட்டு, அதை அவர்கள் முடிக்கும்வரை காத்திருப்பார்கள். சில குடும்பங்களில், மனைவியை அடிப்பதுதான் கணவனுக்கு அடையாளம் என்ற போக்கில் கணவர் செயல்படுவார்.
இன்னும் சில குடும்பங்களில், கணவன் மனைவி இருவருமே பேசிக் கொள்வதில்லை; வேறு பல குடும்பங்களில் கணவனோ அல்லது மனைவியோ குடும்ப பந்தத்தைக் கடந்து மூன்றாம் தரப்பினருடன் தொடர்பில் இருப்பார்கள்.
இப்படி பற்பல காரணங்களாலும் கணவனும் மனைவியும் ஒருவர்மீது மற்றவர் வன்முறையை புரிவதுடன் மணவிலக்கையும் நாடுகின்றனர். இதில் குடும்ப வன்முறைக்குக் காரணம் கணவனா மனைவியா என்பதை சரியாக சொல்ல முடியாது. அதேவேளை, திடீரென்று வன்முறை நிகழாது. அது, முதலில் மனதளவில்தான் துளிர்விடும். அது முற்றும்போதுதான் உடல்வழி வெளிப்படும். அதற்கு இன்னொரு தரப்பும் காரணமாக இருக்கலாம்.
இந்த வகையில், மனைவியால் மனதாலும் உடலாலும் காயப்படும் கணவன்மாரும் பல குடும்பங்கலில் உண்டு என்று சொல்லும் இராஜேஸ்வரி, இத்தகையப் போக்கு கடந்த ஒன்பது மாத கால கொரோனா பருவத்தில் அதிகரித்திருக்கிறது என்பதுதான் வேதனை.
கொரோனாவின் தாக்கம் உலகத்திற்கே பொதுவானது. வேலை இழப்பு அல்லது சம்பளக் குறைப்பினால் ஏற்படும் நிதி பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கலை ஏற்றுக்கொண்டு சமாளிக்கவும் எதிர்காலத்தையும் குடும்ப நலனையும் குறிப்பாக பிள்ளைகளையும் நினைத்து வாழ்க்கையை வாழத்தான் முற்பட வேண்டுமேத் தவிர, எதிர்கோணத்தில் சிந்திப்பது, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அது, சம்பந்தப்பட்ட கணவன் மனைவியோடு வரையறுக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த குடும்பத்தையே குலைத்துவிடும் என்பதால் கணவன்-மனைவிக்கு நிதானமும் பொறுமையும் அதிகம் தேவை. அதைவிட, ஒருவருக்கொருவர் உண்மையும் நேர்மையும் இன்னும் அதிகம் தேவையென்று மின்னல் பண்பலை வானொலியில் இராஜேஸ்வரி தெரிவித்தார்.
குடும்ப வன்முறை குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மின்னல் பண்பலை வானொலியில் அதன் அறிவிப்பாளர்கள் சுகன்யா சதாசிவமும் திரேசாவும் சமூக அக்கறையுடன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் திலகாவும் இராஜேஸ்வரியும் தங்களின் கருத்தை மேற்கண்டவாறு பதிவு செய்தனர்.