அபிவிருத்தியைத் தடுப்பது எனதோ அல்லது பிரதேச சபையினதோ நோக்கம் கிடையாது. மாறாக அபிவிருத்தியை சட்ட திட்டங்களுக்கு ஏற்ப ஒழுங்கு படுத்துவதே எமது நோக்கம.; இந் நிலையில் மக்களை மடையர் ஆக்காதீர்கள். அரசியலுக்காக மலினப்படுத்தாதீர்கள் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன் தவிசாளர் அபிவிருத்தியைத் தடுக்கின்றார் எனக் குற்றஞ்சாட்டி இன்று வியாழக்கிழமை (12) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் அச்செழு அம்மன் வீதியைச் சேர்ந்த மக்கள் அழைத்துவரப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. அவ் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் பிரதேச சபை வாசலில் மறித்திருந்தனர். இந் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை தவிசாளர் தானகச் சென்று சந்தித்து நிலைமையை புரிய வைத்திருந்தார்.
இதன்போது அபிவிருத்தியை தடுப்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல. எமது சபைக்குப் பகிரப்பட்ட அதிகாரம் ஒன்றை மத்திய அரசாங்கம் நிராகரிக்கின்ற நிலையில் அதனை சகித்துப்போக முடியாது. அதிகாரப்பகிர்வினை நாங்கள் வலியுறுத்துகையில் மத்திய அரசாங்கம் அபிவிருத்தி ஒன்றை மேற்கொள்ள வேண்டுமாக இருப்பின் உரிய முறைப்படியான அனுமதிகளை பெறுமாறே வலியுறுத்துகின்றோம். அவ் அனுமதிக்கு முறைப்படியான கடிதம் கிடைக்கப்பெற்றால் உடன் சபையைக்கூட்டி அனுமதி தீர்மானிக்கப்படும்.
உரிய அனுமதிகள் பெறப்படின் அபிவிருத்தியை மேற்கொண்டு முன்னெடுக்க நாமும் ஒத்துழைப்போம். சாதாரணமாக நிர்வாக ரீதியில் முன்னெடுக்கபட வேண்டிய விடயங்களாக இவை இருந்தபோதும் பகிரப்பட்ட அதிகாரம் ஒன்றை அனுபவிப்பதற்கான மோதல்களே நடக்கின்றன. இவ் விடயத்தினை கிராமங்களில் சென்று பிழையாக அர்த்தப்படுத்தக்கூடாது. மக்களின் அரசியல் அபிலாசைகளை சிதறடிப்பதற்காக சாதிய அடிப்படையிலான கருத்துக்களைக்கூறி மக்களை பிழையாக வழிநடத்த எத்தனிக்கின்றனர்.
உங்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபை என்ற ரீதியிலும் அரச தாபனம் என்ற ரீதியிலும் எந்த விடயத்திலும் சாதிய ரீதியிலான சிந்தனைகள் எம்மிடம் கிடையாது. முற்போக்காகவே வலிகிழக்கு பிரதேச சபை சிந்திக்கின்றது.
இந் நிலையில் இவ் ஆர்ப்பாட்ட ஏற்பாடு செய்த அரசியல்வாதிகளுக்கு சில விளக்கத்தினை நாம் கொடுக்கவேண்டியுள்ளது. அபிவிருத்தியை தவிசாளர் தடைசெய்கின்றார் என கிராமங்களில் சென்று மக்களை மடையர்கள் ஆக்காதீர்கள். அரசியலுக்காக எமது மக்களை மலினப்படுத்தாதீர்கள்.
எமது மக்கள் தியாகங்களுக்குச் செந்தக்காரர்கள். அவர்கள் மீது குடும்பக் கஸ்டத்தினை வைத்து மக்களை எவ்வாறும் கையாளலாம் எனக் கனவு கானாதீர்கள். மக்கள் ஆர்ப்பாட்டமாக வந்த பின்னர் எமது உண்மைகளைக் கண்டுகொண்டனர். மக்களை நாம் மதிக்கின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.