மன்னார் நிருபர்
31-12-2020
மாவட்ட ரீதியாக உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்களை அடையாளப்படுத்தி அவர்களுடைய புத்தாக்கங்களுக்கான அங்கிகாரத்தை வழங்கும் ‘ஸாரண்டப் சிறீலங்கா’ நிகழ்சி திட்டம் இன்று வியாழக்கிழமை (31) காலை 10 மணியளவில் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட காரியாலயத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் யு.எல்.ஏ. மஜித் தலைமையில் இடம் பெற்றது.
புத்தாக்கத்துடன் இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குதல் எனும் தொணிப்பொருளில் இடம் பெற்ற மன்னார் மாவட்டத்திற்கான செயற்திட்ட போட்டியில் கழிவு பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மிளகு அறைக்கும் இயந்திரம், விரைவில் வெப்பமாகும் அதே நேரத்தில் குளிர் இழக்கும் கருவி(பௌத்) செயற்கை முறையில் குஞ்சு பொறிக்க வைக்கும் கருவி ,குப்பைகளை நிரல்படுத்தும் கருவி என பல்வேறு கண்டுபிடிப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
குறித்த நிகழ்விற்கு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாகாணப் பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி.ரி.பூலோகராஜா மன்னார் ரெலிகொம் நிறுவனத்தின் முகாமையாளர் ஏ.ஜே.கே.குலாஸ் , விவசாய திணைக்கள தொழில் நுட்ப உத்தியோகஸ்தர் சு.ரஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த புத்தாக்கத்திற்கான தெரிவை மேற்கொண்டனர்
மேற்படி தெரிவில் வெற்றி பெரும் இளம் கண்டு பிடிப்பாளர்கள் தேசிய மட்டத்திலான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.