ஒரு இனத்தின் உரிமைகள் தங்கமாகவும் இன்னொரு இனத்தின் உரிமைகள் தகரமாகவும் இருவேறாக இருப்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பிறக்கும் புத்தாண்டு அன்பும் அறமும் எங்கும் நிலவும் புதிய யுகம் நோக்கி மலரட்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அழகார்ந்த உரிமை வாழ்வை எண்ணி காத்திருக்கும் எமது மக்கள் பிறந்து வரும் ஒவ்வொரு புத்தாண்டு மலர்விலும் தமது கனவுகள் வெல்லப்படும் என்ற நம்பிக்கையில் மட்டுமே புத்தாண்டு மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள்.
ஆனாலும் இதுவரை காலமும் எமது மக்களின் கனவுகளை நிறைவேற்றாமல் மாற்றங்களுக்கு மாறாக வெறும் ஏமாற்றங்களையே ஒவ்வொரு புத்தாண்டுகளும் எமது மக்களுக்கு தந்து விட்டு கடந்து போயிருக்கின்றன.
எமது மக்கள் விரும்பும் அழகார்ந்த உரிமை வாழ்வென்பது வெறுமனே அரசியலுரிமை தீர்வை நோக்கியது மட்டுமல்ல மாறாக இலங்கை தீவில் வாழும் சகல சமூக மக்களும் அனுபவிக்கும் அபிவிருத்தி அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வு போன்று தமிழ் பேசும் மக்களும் சகல உரிமைகளும் பெற்று வாழும் சமத்துவ சமுதாயமொன்றின் கனவுகளே எமது விருப்பமாகும்.
ஒரு இனத்தின் உரிமைகள் தங்கமாகவும் இன்னொரு இனத்தின் உரிமைகள் தகரமாகவும்இருவேறாகஇருப்பதைநாம்ஒருபோதும்ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
சகல இன மத சமூக மக்களும் சமவுரிமை என்ற சமத்துவமான அழகிய இலங்கைத்தீவையே நாம் விரும்புகின்றோம்.
அழகிய எங்கள் தமிழர் தேசம் அபிவிருத்தியால் நிமிர்ந்தெழ வேண்டும்! வேலை வாய்ப்பற்ற எமது இளைஞர் யுவதிகளின் கனவுகள் யாவும் நிறைவேற வேண்டும்! வீடற்றும் நிலமற்றும் வாழும் எமது சொந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். வறுமையில் இருந்து விடுபட்டு வளமான வாழ்வை எமது மக்கள் அனுபவிக்க வேண்டும்.
• தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் சிறை மீண்டு வரவேண்டும்!
• காணாமல் போனோரின் உறவுகளின் கண்ணீருக்கு பரிகாரம் தேட வேண்டும். சாத்தியமான வழிமுறையில் நீண்ட கால அரசியலுரிமை பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும்!
சிங்கள மக்கள் மத்தியில் உருவான அரசியல் மாற்றம் போல் தமிழ் மக்கள் மத்தியிலும் உருவாகும் மாற்றம் ஒன்றினால் மட்டுமே இவைகள் சாத்தியமாகும்!
இன்று மாற்றத்தை நோக்கி மக்கள் பயணிக்க தொடக்கி விட்டனர். அனாலும். சட்டியில் இருந்து வாய்க்கு கிடைப்பதற்கு மாறாக சட்டியில் இருந்து நெருப்பில் விழுந்து கருகி விடும் மாற்றம் அர்த்த பூர்வமானதல்ல.
மாபெரும் அர்ப்பணங்களையும் . தமிழர் தேசத்தின் நெடுங்கனவை வெல்ல நாம் எதிர்கொண்ட தியாகங்களையும் வலிகளைளையும் வதைகளையும் எமது மக்கள் நெஞ்சில் ஏந்தி மாற்றங்களை நோக்கி பயணிக்க முன் வரவேண்டும்!
இனி வரும் காலங்களில் மக்கள் வழங்கும் ஆணையில் மட்டுமே பிறந்து வரும் புத்தாண்டுகள் யாவும் தமிழர் தேசத்தில் புதிய விடியலை பிறப்பிக்கும். இன முரண்பாடுகள் தீரவும் இன சமத்துவம் மலரவும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நியாங்கள் நிலைக்கவும். கொடிய நோய் பிணிகள் யாவிலும் இருந்து விடுபட்டு எல்லா மனித உயிர்களும் இன்புற்று வாழவும் பிறந்திருக்கும் இப்புத்தாண்டை சரிவரப்பயன்படுத்துவோம். இவ்வாறு தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறம் வெல்லும் அநீதி தோற்கும் என்றும் வருந்துயர் யாவும் எம்மை கடந்தே செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.