விசாகன் வினாவுகின்றார்
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த பேரினவாத அரசுகளின் நீதியற்ற ஆட்சி முறை மற்றும் உயர் கல்வியிலும் அரச உத்தியோகம் பெறுவதிலும் காட்டப்பட்ட அநீதி, மற்றும் அடக்குமுறை ஆகியவற்றை சகித்துக் கொள்ள முடியாது பத்துக்கும் உட்பட்ட இளைஞர்களால் ஆரம்பிக்கப்பெற்ற தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் எதிர்பாராத வளர்ச்சி பெற்றது.
ஒன்றிக்கு மேற்பட்ட விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற்றாலும், தனித்தனியாக வெற்றிகள் ஈட்டப்பட்டன. தோல்விகளும் துரத்தியபடி இருந்தன.போராளிகளின் விலை மதிப்பற்ற உயிர்களும் அப்பாவி மக்களின் உயிர்களும் உடமைகளும் அழிக்கப்பட்டன. ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம் திரட்சியடைந்து உயர்ந்து உலகின் காதுகளும் கண்களும் கேட்டும் பார்த்தும் வியப்படைந்த அளவிற்கு வியாபித்தது.
பத்துக்கு மேற்பட்ட விடுதலை அமைப்புக்கள் போராட்ட களத்தில் நிற்பது போன்று காணப்பட்டாலும் நாளடைவில் பல அமைப்புக்கள் இல்லாமற் போகவும். இயக்க மோதல்களில் பின்வாங்கி நிற்கவும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றே இறுதிவரை முப்படைகள் கொண்ட ஒரு விடுதலை இயக்கமாக வியாபித்து விளங்கியது. ஒரு சிற்றரசு போன்று செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் நீதி மன்றம், காவல் துறை மற்றும் வைத்தியசாலைகள் வங்கிகள் என அரசாங்கத்திற்குரிய கட்டமைப்புக்கள் உருவாகின.
ஆனால் இவ்வாறான ஒரு வளர்ச்சியை தடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கமும், வெளிநாடுகள் சிலவும் இரகசியமாக திட்டங்களைத் தீட்டி நின்ற போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படாமல் இருக்கவில்லை.
ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு, தலைவர் பிரபாகரன் தலைமையில் பலமான ஒரு அமைப்பாக விளங்கி, உலகெங்குமிருந்து ஊடகங்களையே வன்னிக்கு வரவழைத்த அற்புதத்தை அரங்கேற்றிய நேரத்தில் கூட உள்ளக முரண்பாடுகள் காரணமாக உள்ளே இருந்து தோன்றிய துரோகத்தனங்களும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு கட்டியம் கூறத்தொடங்கியதை தமிழ் மக்களே கண்கூடாகக் பார்த்த நாட்கள் இன்னும் மறையவில்லை.
எனினும் ஏற்கெனவே மாத்தையா போன்ற போராளிகளின் மனமாற்றம் மற்றும் காட்டிக் கொடுத்த துணிவைப் போன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படத் தொடங்கியவர்களில் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரன் முக்கியமான ஒரு தனிநபராகத் தென்பட்டார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு நீங்கியது, பின்னர் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து கொண்டு இயக்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டது போன்ற காரியங்களில் எவ்வித கூச்சமும் இன்றி செயற்பட்ட கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரன் அரசாங்கத்தில் துணை அமைச்சராக விளங்கி தன்னைப் பலப்படுத்திக் கொண்ட நாட்கள் எமது மக்களும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் நன்கு அறிந்த விடயங்களே.
இவ்வாறான ‘கருணா’வின் செயற்பாடுகள் பலவற்றை நாம் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அனைவரும் அறிந்த விடயங்கள் அவை.
இவ்வாறு தோன்றுவதும் மறைவதுமாக இருந்த கருணா, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும் இலங்கைப் பிரதமர் மகிந்த வழங்கிய ஒரு பதவி மூலம், பொலில் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்போடு வடக்கிலும் பொதுவெளியில் கால் வைக்கத் தொடங்கிவிட்டார். இவை பலருக்கு ஆச்சரியத்தை தரும் விடயமாக இருந்தாலும், தடுக்க முடியாததும் தவிர்க்க முடியாததுமான காட்சிகளாகிவிட்டன.
இதற்கு மறுபக்கத்தில் இலங்கையின் கொடிய சிறைகளில் வாடும் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளும், வருடங்கள் பலவாக வீதிகளில் நின்று போராடிக் கொண்டிருக்கும் காணாமற்போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் தொடர்ந்து துன்பத்தின் பிடிகளில் அகப்பட்டுக் கொண்டவர்களாய் வாடுகின்றனர், வருந்துகின்றனர். ஆனால் அவர்களிடத்தில் சென்று ஆறுதல் சொல்ல முடியாமல் அல்லது பார்க்க முடியாமல் உள்ள எமது மக்கள் அல்லது அரசியல்வாதிகள் ஆகியோரின் நிலை வேறு.
இவ்வாறாக நாட்கள் நகர்ந்து செல்கையில் தான் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போதைய பிரதமரின் ஒரு பிரதிநிதியாகவும் தனது கட்சியின் தலைவராகவும் வன்னி மண்ணில் சில நாட்களுக்கு முன்னர் காலடி எடுத்து வைத்தார்.
திடீரென ஊடகங்களுக்கும் தனது சகாக்களுக்கும் அறிவித்துவிட்டு கிளிநொச்சியில் வந்திறங்கிய அவருக்கு அரசின் சார்பாக வழங்கப்பட்ட பலத்த பாதுகாப்பு துணை நின்றது- சுமந்திரன் எம்பிக்கு உள்ளது போலவே.
அவர்கள் அங்கு ஊடகங்களின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றியபோது பின்வருமாறு கூறுகின்றார்.
” நான் வன்னி மண்ணுக்கு நன்கு பரிச்சியமானவன். இங்குள்ள மக்களின் துன்பங்களை மற்றும் அவர்களின் தேவைகளை நன்கு உணர்ந்தவன். எனவே தான் நான் அவர்களுக்கு சேவையாற்ற வந்துள்ளேன். என்னை நம்பி பாராளுமன்ற மற்றும் மாகாண உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடவுள்ள எனது கட்சியின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுங்கள்.என்னோடு கைகோர்த்துக் கொள்ள வாருங்கள்” என்றார்.
அந்த நேரத்தில் அங்கு சென்றிருந்த ஒருவராவது சில கேள்விகளை முன்வைத்திருக்கலாம்.
அமைதியாகக் கேட்டிருக்கலாம்.
“கருணா அவர்களே! நீங்கள் வன்னி மண்ணின் மக்களுக்கு சேவை செய்ய முன்வந்துள்ளதாகக் கூறினீர்கள்.
அதற்கு முன்னர் நீங்கள் ஏன் வன்னி மண்ணிலிருந்து வெளியேற்றப்படடீர்கள்? வன்னி மக்கள் உலக நாட்டுப் படைகளின் குண்டுவீச்சுகளுக்கு இலக்காகி அலறித் துடித்து வீழ்ந்து மடிந்து இறந்த போது யார் பக்கத்தில் நின்றீர்கள்?
தலைவர் பிரபாகரன் அவர்களிள் உடல் இது தான் என்று அடையாளம் காட்டப்பட்ட போது உங்களைத் தானே அரசாங்த்தின் பிரதிநிதிகள் அழைத்து வந்தார்கள்?
நீங்கள் அந்த உடல் ‘அவருடையது’ என்று தானே அடையாளம் காட்டினீர்கள்?
அவ்வாறான நீங்கள் என்ன துணிவோடு இங்கு வந்தீர்கள்
போன்ற கேள்விகளை கருணாவிடம் கேட்டிருக்க வேண்டும் அல்லவா?
அவ்வாறான கேள்விகள் எதுவும் எழவில்லை. கருணா தொடர்ந்து பேசினார்.
” நான் வடக்கிலும் கிழக்கிலும், தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளேன்” இவ்வாறு கருணா விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.எமது கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை பலப்படுத்துவதற்காக கிளிநொச்சியில் முக்கிய சந்திப்புக்களை ஏற்பாடு செய்துள்ளோம். உண்மையில் கடந்த தேர்தலில் எமது கட்சிக்கு அம்பாறை மாவட்ட மக்கள் ஆதரவு வழங்கி இருந்தார்கள். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இவ்வாறான நிலையில் எமது கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது. அதனை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளோம். அதற்கான வேட்பாளர்களையும் தெரிவு செய்துள்ளோம். ஆனால் தேசிய கட்சியுடன் இணைந்து அல்ல.தமிழ் கட்சிகளுடன் இணைந்தே போட்டியிட தீர்மானித்துள்ளோம். தமிழ் கட்சிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அனைவரையும் ஒன்றாக இணைத்து போட்டியிடுவது என்ற முடிவில் இருக்கின்றோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும், விமர்சித்தும் உள்ளோம். அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளோம். தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்காக தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும். தமிழ்த் தலைமைகள் கடந்த கால செயற்பாடுகள், அரசியல்களை விட்டு தற்போது காணப்படும் சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும்” என கருணா உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தில் நாம் முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவர் அங்கு உரையாற்றியபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி – என கருணா ஒரு சந்தர்ப்பத்தில் அழுத்தமாகக் கூறினார். அவர் இன்னும் விடுதலைப் புலிகள் அமைப்பில் உரிமைகொண்டாடுகின்றார். அவரை நீக்கிய அமைப்பை இன்னும் ‘எனது’ என்கின்றார்.
இந்த நேரத்தில் நாம் ஒன்றை கூறவிரும்புகின்றோம். இந்தியாவின் டெல்லியில் போராட்டத்தை நடத்தும் விவசாயிகள் அரசாங்கத்தின் அமைச்சர்களோடு பேச்சுவார்த்தை நடத்த செல்கின்றபோது, குடிப்பதற்கு நீர் உண்பதற்கு உணவு என்பனவற்றை தாமே எடுத்துச் செல்கின்றனர். “நாம் உங்களோடு பேச வந்துள்ளோம் தவிர உங்களோடு விருந்துண்ண வரவில்லை” என்று கூறி அமைச்சர் தரப்பு உணவுண்ண அழைத்தபோது அதனை நிராகரித்தார்கள்.
ஆனால் கிளிநொச்சியில் கேட்கவேண்டிய கேள்விகளையே முன்வைக்க முடியாதவர்கள் கருணாவின் அழைப்பை தவிர்த்திருக்கலாம் அல்லது நிராகரித்திருக்கலாம் அல்லவா? இந்தக் கேள்வியோடு நான் இந்தக் கட்டுரையை தற்காலிகமாக நிறைவு செய்கின்றேன். 05-01-2021