தூபியை இடிக்க உத்தரவிட்ட துணைவேந்தரே தன் கைகளால் அடிக்கல்லை நாட்டினார்
உண்ணாவிரதமிருந்த மாணவர்களுக்கு நீராகத்தை வழங்கி அதனையும் முடித்து வைத்தார்
நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்குரிய செலவை எற்பதற்கு திருகோணமலையிலுள்ள ஒரு அன்பர் முன்வந்துள்ளார்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்திருந்த புனிதமான முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நினைவுத் தூபியை இடிக்க உத்தரவிட்ட துணைவேந்தரான பேராசிரியர் சி. ஶ்ரீ சற்குணராசாவினால் இன்று திங்கட்கிழமையன்று தன் கைகளால் அடிக்கல்லை நாட்டினார. அத்தடன் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட சிறிய கொட்டகையொன்றின் கீழ் அமர்ந்திருந்து உண்ணாவிரதமிருந்த சில மாணவர்களுக்கு தனது கைகளால் நிராகத்தையும் உண்ணாவிரத்தை அவரே முடித்து வைத்தார் .
கடந்த வெள்ளிகிழமை பேராசிரியர் சி. ஶ்ரீ சற்குணராசா மற்றும் பதிவாளர் மற்றும் சில பல்கலைக் கழக உயர் அதிகாரிகள் ஆகியோர் மேற்பார்வை செய்ய, இடித்து அழிக்கப்பட்ட மேற்படி முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நினைவுத் தூபிக்கு நேர்ந்த அவலத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து உலகெங்கும் இருந்தும் இலங்கையிலிருந்தும் பல எதிர்ப்புக்குரல்கள் எழுந்ததனால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் மத பீடங்களின் அதிபர்கள் பௌத்த பிக்குகள் ஆகியோர் தமிழ்நாட்டில் உள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர், சீமான், பழ நெடுமாறன் போன்ற அரசியல் தலைவர்கள் உட்பட பல குரல் எழுப்பியும் கண்டனங்களைத் தெரிவித்தும் நின்றதாலும், கனடா, அமெரிக்கா, போன்ற நாடுகளிலிருந்தும் எழுந்த எதிர்ப்புக்குரல்கள் காரணமாகவும் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாவும் உணரப்படுகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்து எமது செய்தியாளர் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில் , மீண்டும் அதே இடத்தில் தூபியினை நிறுவும் நோக்குடன் துணைவேந்தர் பேராசிரியர் சி. ஶ்ரீ சற்குணராசாவினால் அதற்கான அடிக்கல் நடப்பட்டது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை 8ம் திகதி இரவு இடித்தழிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சனிக்கிழமை காலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தனர். தமிழகம், வெளிநாடுகளின் பிரதிநிதிகள் பலரும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தி வந்ததுடன், புலம்பெயர் நாடுகளில் உள்ளோரும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இது இவ்வாறிருக்க, இன்றையதினம் திங்கட்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முஸ்லிம் தரப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் பல்கலை கழக துணைவேந்தர் நேரில் சந்தித்து, மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்கு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார். அதன் பிரகாரம் காலை 7.00 மணியளவில் மாணவர்களுடன் பல்கலைக்கழத்தினுள் செல்ல முற்பட்ட போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் தடுத்து நிறுத்தினார்கள். அதனையும் மீறி துணைவேந்தர் மாணவர்களை அழைத்துக்கொண்டு வளாகத்தினுள் சென்று, பரமேஸ்வரன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்திற்கு மாணவர்களுடன் துணைவேந்தர் சென்ற போது அங்கு வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தடுத்து நிறுத்தினார். அதன் போது துணைவேந்தர், நாம் தற்போது எந்த கட்டுமான பணிகளிலும் ஈடுபடவில்லை. தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்தில் அடிக்கல் நடப் போகிறோம். என்னுடைய மாணவர்கள் மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை முடித்து வைக்க வேண்டிய நிலையில் உள்ளேன். எம்மை தடுக்காதீர்கள் என மிகவும் கடுமையான கூறி நின்றார். எனவே .அதனை அடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி துணைவேந்தர் அவர்களையும் சில மாணவர்களையும் உள்ளே செல்வதற்கு அனுமதித்தனர்.
இதே நிலையில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்குரிய செலவை எற்பதற்கு திருகோணமலையிலுள்ள ஒரு அன்பர் முன்வந்துள்ளார் எனவும் அறியப்படுகின்றது.