வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறினால் அவர்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நாட்டின் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள், பயண நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ஆகியோருக்கு இந்த நடைமுறை பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உள்வருகை முதல் வெளிச் செல்லும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறினால், சுற்றுலாத்துறையின் எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுற்றுலா குழுக்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு முன்னதாக, பயண நிறுவனங்களினால் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து அனுமதி பெறப்படுவது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சுற்றுலா பயணிகளை கண்காணிக்க, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் 24 மணிநேர கண்காணிப்பு மத்திய நிலையமொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றினால் ஏற்றுக் கொள்ளப்படாத நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தர அனுமதி வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.