கதிரோட்டம் 15-01-2021
கடந்த வாரம் மிலேச்சத்தனமாக அரங்கேற்றப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அமைந்திருந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி’ அழிப்பு நடவடிக்கையில் யாருக்கும் வெற்றி என்பது அறியப்படாத ஒன்றாகவே உள்;ளது. காரணம் ஒரு பக்கத்தில் அப்பாவி மாணவர்கள். ஆதரவு மிகவும் குறைந்தவர்கள். மறுபக்கத்தில் உள்ள துணைவேந்தர் கூட அந்த மாணவர்களை
ஓத்தவரே. அவருக்கும் ஆதரவ அல்லது பலம் மிகக் குறைவு. தற்போது அவருக்கு பலமாகத் தெரிகின்ற அவரது பதவி கூட அரச உயர் பீடத்தின் உத்தரவால் பறிக்கப்பட்டால், அவரது பாதிக்கப்பட்ட மாணவர்களைப் போலவே ஒரு பலமற்றவர் ஆகிவிடுவார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டு பின்னர் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கி, அதனைத் தொடர்ந்து இடிக்கப்பட்டு சிதறிக் கிடந்த கற்களை சேர்த்து ஒரே இடத்தில் குவித்து, அவற்றில் சிலவற்றை எடுத்து மீளவும் அடிக்கல் நாட்டப்பட்டது போன்ற நிகழ்வு கூடு சிலரது பார்வைக்கு இடிக்கப்பட்ட தூபிக்கு அஞ்சலி செலுத்துவது போன்ற காட்சியாகவே தெரிந்திருக்கும். இதைத் தான் நாம் வெளியிட்ட முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பு தொடர்பான விசேட பதிப்பின் ஆசிரிய தலையங்கத்தின் தலைப்பாகப் பதித்திருந்தோம். ‘முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அஞ்சலியா?’ என்பதே அந்த தலைப்பு.
ஆமாம்!, அந்த கல்விச் சாலையின் மையத்தில் ஒய்யாரமாக எழுந்து நின்ற அழிவின் அடையாளம் ஒன்று அடியோடு தகர்க்கப்பட்டது. தற்போது அதன் அடியும் முடியும் தெரியாத ஒரு இடமாக வெறுமையாய் விரிந்து கிடக்கிறது இந்த நினைவின் இருப்பிடம். நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று தூபியை இடித்தவர்கள் விசமத்துடன் சிரித்த வண்ணம் இருக்க துணைவேந்தரும் மாணவர்களும் பலமற்றவர்களாக பக்கமாய் நிற்கின்றார்கள். அவர்களுக்கு ஆதரவுக் கரம் காட்டுடவது போல் வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில்pல் மட்டுமல்ல எப்போதுமே பாராளுமன்ற அரசியலின் சுகபோகங்களை அனுபவித்து வருபவர்கள். அவர்களால் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை.
தமிழர்களுக்கு எதிரான இனவாத யுத்தம் முடிவுக்கு வந்த 2009 மே மாதம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எதிராக வன்னியில் முன்னெடுக்கப்பட்ட இரத்தக்களரி இராணுவத் தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூறும் வகையில், 2019 மே மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் தனது தந்தையை பலிகொடுத்த ஒரு பல்கலைக்கழக மாணவரால் இந்த நினைவுத் தூபி கட்டப்பட்டது.
நினைவுத்தூபி இடிக்கப்படுவதை அறிந்த மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் பல்கலைக்கழக பிரதேசத்தில் குவிந்தனர். ஆனால் பல்கலைக்கழக அதிகாரிகளும் பாதுகாப்பு படையினரும் எவரையும் வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் மாணவர்கள் பல்கலைக்கழக வாயில் அருகே அமர்ந்து சத்தியாகிரகத்தை தொடங்கினர்.
பொலிசார் ஏற்கனவே இரண்டு மாணவர்களை கைது செய்துள்ளதுடன், நினைவுத்தூபியை இடிப்பதை எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்கள் மீதான கொடூரமான பொலிஸ் பாய்ச்சல், மாணவர்கள் மீது அரச ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதற்கான முன் எச்சரிக்கை ஆகும்.
இராணுவத்தை அனுப்பி மேற்கொள்ளப்பட்ட ஆத்திரமூட்டல், இராஜபக்சா அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் இடையே அதிகரித்து வரும் கோபத்திற்கும் எதிர்ப்பிற்கும் மத்தியில், மக்களை இனரீதியாக பிளவுபடுத்தும் நோக்கத்துடன், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத பிளவுகளைத் தூண்டிவிடும் நடவடிக்கை ஆகும்.
யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் காணி, வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரங்கள் உட்பட பல அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இராணுவம் ஆக்கிரமிப்பை தொடர்வதோடு அவர்களின் ஜனநாயக உரிமைகளை மேலும் நசுக்கி வருகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து எந்த அக்கறையும் கிடையாது. இவ்வாறான நேரத்தில் அடியும் முடியும் தொடர்பில்லாமல் கிடத்திவிடப்பட்டுள்ள நினைவுத் தூபியைப் போலவும் எமது விடுதலைப் போராட்டத்தைப் போலவும் இந்த தூபியின் எழுந்து நின்ற இடத்தில் என்ன மாற்றம் நிகழப் போகின்றது என்பது பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.