இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்கள் தொடர்புள்ளவர்கள் வரலாற்று துஸ்பிரயோகங்களிற்காவும் படுகொலைகளுக்காகவும் தொடர்ந்தும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுகின்றார்கள் என சர்வதேச மன்னிப்புச்சபை விசனம் தெரிவித்துள்ள்து.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உ;பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை கைவிடுவதாக தெரிவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பது இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நீதித்துறையின் தோல்வி என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ள்து.
ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்காக நீதியை வழங்குவதற்கு இலங்கை அதிகாரிகள் தவறியுள்ள விடயமானது மற்றுமொரு கவலை தரும் மைல்கல் ஒன்றுக்கு ஒப்பானது என சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கொலை வழக்கு குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிப்பது குறித்தஆர்வம் எதனையும் சட்டமாஅதிபர் திணைக்களம் வெளிப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்கள் தொடர்புள்ளவர்கள் வரலாற்று துஸ்பிரயோகங்களிற்காக தொடர்ந்தும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டு வெளியே நடமாடும் சுதந்திரத்தை அனுபவிப்பது தொடரக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறப்படுதல் இல்லாமல் இலங்கையால் தனது வரலாற்றின் இருண்ட பக்கங்களை கடந்து போக முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை குறித்து அதிகாரிகள் புதிய விசாரணைகளை ஆரம்பித்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும் கடந்தகாலத்தில் உள்நாட்டு பொறிமுறைகள் அடைந்த தோல்விகளால் அதனை எதிர்பார்க்கவில்லை எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தைமுடிவிற்கு கொண்டுவருவதற்கும் மனித உரிமை மீறல் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.