இந்தக் கட்டுரை லண்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் கலாநிதி பட்டம் பெற்று அதற்கும் மேலான ஆய்வுகளில் ஈடுபடும் விந்தியா புத்பிட்டிய என்பவரால் எழுதப்பட்டது. அவர் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் வாழ்க்கையை புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். அது தொடர்பிலான மேலதிக ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்
கட்டுரை மற்றும் படங்கள் காப்புரிமை: © விந்தியா புத்பிட்டிய
தமிழில் சிவா பரமேஸ்வரன்
இலங்கையின் வடக்குப் பகுதியில் அன்றாட வாழ்க்கை போரின் எச்சங்களில் காட்சிகளாக ஆழமாக மூழ்கியுள்ளது. நீதியும் நியாயமும் எட்டாக்கனியாகவுள்ள நிலையில், இந்தச் சிதிலங்கள் இலங்கையில் விரிசல்களிக்கிடையே சமாதானம் என்பது காணல் நீர் என்பதைக் காட்டுகின்றன.
இடிபாடுகளுக்கு மத்தியில் வாழ்பவர்கள் போர் இன்னும் ஏதோ ஒரு வகையில் நீடிக்கிறது என்று வலியுறுத்துகிறார்கள். அதிலும் உயிர் பிழைத்தவர்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்ட துன்புறுத்தல்கள் அந்த நிலப்பரப்பில் பொறிக்கப்படாத கல்வெட்டுக்களாகக் காட்சியளிக்கின்றன. இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் முடிந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகின்றன. சுதந்திரமான தமிழர் தாயகத்துக்கான விடுதலைக்காக முப்பது ஆண்டுகள் நடைபெற்ற ஆயுதப்போராட்டமும் அதன் தடயங்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. `வடக்கின் வசந்தம்`,`கிழக்கின் உதயம்` என்றெல்லாம் கடன்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டும் இராணுவமயப்படுத்தப்பட்ட`அபிவிருத்தி` ஆகியவை மேல் பூச்சுக்களாகவே காணப்படுகின்றன. தமது அபிலாஷைகளை நிறைவு செய்து கொள்ள விழையும் அரசு அதை வன்முறைகளின் இடிபாடுகள் மீதே கட்டியெழுப்பட்டன. அவ்வகையில் அந்தத் தீவில் `சமாதானம்` என்பது குற்றமிழைத்தவர்களுக்கு சொந்தமாகியது. `மரங்கள்கூட இங்கு புதிதாகவுள்ளன` என்கிறார் நீண்ட காலமாக பேச்சு வார்த்தைகளில் அனுசரணையாளராக இருந்த ஜூட். அவரது நாற்பதாண்டுக்கால வாழ்வு வடக்கே யாழ்குடாநாட்டில், போருக்கு மத்தியிலேயே கழிந்தது. ஷெல்லடி காரணமாக முறிந்தும் எரிந்தும் போன பனை மரங்களின் கருகிய அடிப்பகுதிகளும், கைவிடப்பட்ட வீடுகளின் கூரைகளும் இன்றும் போரின் எச்சத்தின் சாட்சியங்களாக உள்ளன. நீல மலர்கள் பூத்த புதர்களே அங்கு காட்சியளிக்கின்றன.
`இங்கு அமைதி என ஒன்று இருந்தால், அதை நாங்கள் இன்னும் காணவில்லை, அதை இன்னும் உணரவில்லை. வடக்கு இலங்கையில் நிலப்பரப்பு இன்று வெற்றி பெற்று ஆக்கிரமித்துள்ளோரின்
குறியீடுகளால் நிரம்பியுள்ளது. வெற்றி பெற்ற அரசின் மொழியின் அதன் கலாச்சாரமும் அங்கு முன்னெடுக்கப்பட்டு அந்தப் பகுதி மாற்றியமைக்கப்படுகிறது. புதிய சாலைகள் மற்றும் புதிய சரித்திரங்கள் அரசின் மொழியில் திணிக்கப்படுகின்றன. அதேவேளை ஆங்காங்கே சிறிதும் பெரியதுமாக இப்போது சில எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அவை நினைவுகூர்தல், மீட்டெடுத்தல், உறுதிப்பாட்டைக் காட்டுதல் மற்றும் முன்னேறுதல் ஆகியவற்றில் வெளிப்படுகிறது.

வன்முறையுடன் கூடிய `எழுச்சி` முல்லைத்தீவு 2018. வடக்கு இலங்கையின் வறண்ட நிலப்பரப்பில் செறிந்து காணப்படும் பனை மரங்கள்

வன்முறையுடன் கூடிய `எழுச்சி` முல்லைத்தீவு 2018. 2006 ஆம் ஆண்டு தரைதட்டிய ஜோர்டானியக் கப்பல் எம் வி ஃபரா-III யின் எச்சங்கள் அருகே பார்வையாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கும் அறிவிப்புப் பலகை. அமைதியான இந்தக் கடற்கரையில் இந்தியப் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் மற்றும் துருப்பிடித்துள்ள இராணுவக் குப்பைகள் இங்கு காணப்படுகின்றன. இலங்கையின் உள்நாட்டுப் போரின் (1983-2009) கடைசி மாதங்களில் இங்கிருந்து கல்லெறியும் தூரத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்களின் இறப்புகள் நிகழ்ந்தன. அவை இலங்கை அரசால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
போரின் தாக்கங்கள் அதற்கு பிறகான காலத்தில் எதிர்பாராத விதமாக அங்கு படிமங்களாகப் பொதிந்துள்ளன. அங்கு காட்சிப் பொருட்களாகத் தெரியும் மனிதாபிமான உதவிகள் மற்றும் வளர்ச்சி ஆகியவை ஒற்றுமை மற்றும் தோல்விகள் ஆகியவை ஏதோ முதலாம் உலக நாடுகளின் பெருந்தன்மையைக் காட்டுவது போல் இருந்தாலும், அது அரசின் திறமையின்மை மற்றும்
புறக்கணிப்பையே காட்டுகிறது.
பன்னாட்டு அமைப்புகளின் சின்னங்கள் பெரிய வெள்ளை எழுத்துக்களில் சிறிய கான்கிரீட் வீடுகளின் கூரைகள், டின்கள் ஆகியவற்றில் காண முடிகிறது. ஆனால் அவை வான்வெளித் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், அளிக்கப்பட்ட பணம் சிறப்பாகச் செலவிடப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதாகவும் உள்ளன. மேலும் அவை அற்பத்தனமாக உலகமயமாதலையும் காட்டுகின்றன. சாலை சமிஞ்கைகள், தண்ணீர் தொட்டிகள், பாடசாலை பைகள், தண்ணீர் போத்தல்கள், குடைகள் மற்றும் பிரம்புப் பாய்கள் ஆகிய அனைத்திலும் காணப்படும் அந்தச் சின்னங்கள் போரினால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வை மீண்டும் கட்டமைக்கமுயல்பவர்களுக்குச் சொந்தமான இடங்களில் துண்டுகளாக வீசப்பட்டுள்ளன.

உதவிப் பொருட்களின் பாவனை. யாழ்ப்பாணம் 2018: வேர்க்கடலை (கச்சான் கொட்டை) விற்கும் பெண்மணியின் பொருட்களுக்கு கூரையாக டேனிஷ் அகதி கவுன்சிலின் குடை

உதவிப் பொருட்களின் பாவனை. யாழ்ப்பாணம் 2018: யுனிசெஃப் அமைப்பு உதவியாக வழங்கிய பிளாஸ்டிக் பாயில் தேவாலயத்தில் அமர்ந்து வழிபாடு செய்பவர்கள்
போருக்குப் பின்னரான காலப் பகுதி உண்மை மற்றும் நீதிக்காக பொதுமக்களின் போராட்டம், இராணுவமயமாதல், நில அபகரிப்பு ஆகியவை நிரம்பியவையாக இருக்கின்றன. காணாமல் போனவர்களின் குடும்பங்கள் நடத்திய போராட்டங்கள் இதில் முக்கியமானது. கடந்த 1970கள் தொடக்கம் வலிந்து காணாமல் ஆக்கப்படுவது அரச பயங்கரவாதத்தின் ஒரு கொடுங்க்கோல் நடவடிக்கையாக இருந்துள்ளது. போர்க் காலத்தில் `சந்தேக நபர்கள்` மற்றும் `அரசுக்கு எதிரானவர்களின்` கைதுகளும் கடத்தல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். இதில் 2009ல் போர் முடிந்த நிலையில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் அடங்குவர்.
கடந்த 2017 பிப்ரவரி மாதம் தொடக்கம், இன்று வரை 1400 நாட்களைக் கடந்து, தமது சொந்தங்களின் இருப்பிடத்தை அறிந்து கொல்லும் போராட்டத்தை அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் அதற்கான பதில்களைக் கோரிய போது அது அரசால் உதாசீனப்படுத்தப்பட்டது அல்லது குடிசன மதிப்பீடு எனும் காத்திரமில்லாத அரச நிர்வாக வழிமுறைகள் மற்றும் சாட்சியங்கள் போன்ற காரணங்களால் புறந்தள்ளப்பட்டது. அதேவேளைக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை நீதியின் முன் நிறுத்தும் வழிமுறைகள் தோல்வியடைந்துள்ளதையும் அவை தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் போராட்டங்கள் தொடருகின்றன. அட்டைகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட பதாதைகளுடன் போராடும் உறவினர்கள் அதற்கு பலம் சேர்க்கும் விதமாக காணாமல் போரோனின் புகைப்படங்களை அவர்கள் பிராதனமாக தமது போராட்டத்தில் காட்சிப்படுத்தி வருகின்றனர். அந்தப் போராட்டக்காரர்கள் உறுதியான வகையில் பறிக்கப்பட்ட தமது உறவுகளின் வாழ்க்கைக்கு நீதி கோரி நடமாடும் நினைவுகளாக அந்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எதிர்ப்புகளின் பதிவுகள், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் 2018: காணாமல் போனவர்களின் குடும்பத்தாரின் போராட்டம்-கிளிநொச்சி

எதிர்ப்புகளின் பதிவுகள், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் 2018: போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் காணாமல் போன தனது மகளின் தேசிய அடையாள அட்டையுடன்
போர் முடிந்து பல ஆண்டுகளானாலும், போரின் உயிரிழந்த தமிழர்கள் சமூகமாக ஒன்று கூடி நினைவு கூர்வது அரசால் தடுக்கப்பட்டது. தேசத்திற்காக உயிரிழந்தவர்களையும் அவர்கள் செய்த தியாகங்களும் அரசியலாக்கப்படுவதும் அத்துடன் நெருக்கமாக இணைந்துள்ள காணொளி கலாச்சாரமும், வட இலங்கையின் பொது வெளிகள், வீடுகள், கடைகள் என்று எங்கும் வியாபித்துள்ளன. அந்தப் போராட்டம் பல தசாப்தங்களாக நிலவும் ஒரு இனம்-தேசியம் சார்ந்த போராட்டத்தின் ஒருங்கிணை வடிவமாகவுள்ளது. போரின் வடுக்களிலிருந்து மக்கள் மீள்வதற்கு முயலும் நிலையில் தொடர்ச்சியாக அவர்கள் இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ தீவிரமாகக் கண்காணிக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது போன்றவை தொடருகின்றன. எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான படுகொலையின் வருடாந்திர நினைவு நாள் மீண்டும் வருகிறது. மணற்பாங்கான அந்த இடத்தில் இன்னும் முள்ளிவாய்க்காலின் இறுதி யுத்தத்தின் போது அரச பயங்கரவாதத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் உடுப்புகள், சமையல் பாத்திரங்கள், குடும்ப புகைப்படத் தொகுப்பு, வானொலிகள், பகுதியளவில் எரிந்த பாடசாலைப் பைகள் மணலில் புதையுண்டு வன்முறைகளின் சாட்சியங்களாக இருக்கின்றன. அந்த வன்முறைச் சுவடுகள் இப்போது முற்றாக மணலில் புதைக்கப்பட்டுள்ளன.
காட்சிப் பொருட்களாக, காணொளிகளாக, புகைப்படங்களாக, சாட்சியங்களாக, தடயவியல் மற்றும் வரைபடங்கள் போன்று மறுக்க முடியாத வகையில் ஏராளமான ஆதாரங்கள் இருந்தும் இலங்கை அரசு தாங்கள் முன்னெடுத்த `மனிதாபிமான நடவடிக்கையில்-பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை` என்று தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் ஆண்டு தோறும் அந்த இடத்தில் அடக்குமுறைகளையும் மீறி உறுதியுடன் கூடும் உறவுகள் தெரிவிக்கும் செய்தி இதற்கு மாறுபட்டுள்ளது.

துக்கத்தின் நினைவுகள், முல்லைத்தீவு, 2018. மரணமடைந்த இருவரின் அடையாள அட்டைகளைக் கொண்டு முள்ளிவாய்க்கால் நிலத்தில் குடும்பமொன்று வழிபாடுக்காக ஏற்படுத்திய தற்காலிக அமைப்பு

துக்கத்தின் நினைவுகள், முல்லைத்தீவு, 2018. போரில் உயிரிழந்தவர்களுக்காக உடலில்லாத கல்லறையை வைத்து தேவாலய நினைவாஞ்சலி
மன்னார் வளைகுடாவிலுள்ள இரணைதீவில் ஐந்து சிறிய தேவாலயங்கள் உள்ளன. கடந்த 1992 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படைக்கு, கடற்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான மோதலில் அங்கிருந்த தமிழ் மீனவர் சமூகம் இரணைமாதா நகருக்கு ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அங்கேயே அவர்கள் இரண்டு தசாபத்தங்களுகு இடம்பெயர்ந்து வாழும் நிலைக்கு ஆளானார்கள். எனினும் ஏப்ரல் 2018ல் மிகவும் துணிச்சலான ஒரு நடவடிக்கையில், இரணைதீவுப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தலைமையிலான குழுவொன்று தாங்கள் முன்னர் வாழ்ந்த இடங்களை மீட்டது. அந்த தீவு சண்டையால் பாதிக்கப்படவில்லை என்றாலும், இலங்கை கடற்படை அந்தத் தீவை ஆக்கிரமித்து பொதுமக்களின் நிலங்களில் முகாம் அமைத்துள்ளது. தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்கள் அரசால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பெண்கள் வளர்ச்சி சமூகத்தின் சார்பில் இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையில் அந்தச் சமூக உறுப்பினர்கள் இயந்திரப் படகுகளில் வெள்ளைக் கொடிகளை ஏற்றியபடி அந்தத் தீவுக்குச் சென்றனர்.

புனிதமான புவிப்பரப்புகள், இரணைதீவு, 2018. இரணை மாதாவின் திருவுருவச்சிலை உட்பட பல உருவங்கள் அங்குள்ள முக்கிய தேவாலயத்தில் மீண்டும் சமூகத்தால் புதுப்பிக்கப்படுகின்றன.

புனிதமான புவிப்பரப்புகள், இரணைதீவு, 2018. புனித அந்தோனியாரின் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றுகிறார் மரியசீலி
அங்குள்ள இரணைமாதா தேவாலயம் நீண்ட காலமாக கைவிடப்பட்ட தமது வீடுகளுக்குத் திரும்பி மீண்டும் வாழத் தொடங்கியவர்களுக்கு அடைக்கலம் தரும் தலமாக மாறியது. பலவிதமான தட்டுப்பாடுகள் இடையூறுகள் சிரமங்கள் ஆகியவற்றின் மத்தியில் அவர்கள் தாங்கள் வாழ்ந்த இடத்துக்கு திரும்பினர். அப்படி திரும்பியவர்களில் ஒருவரான டி.மரியசீலி, `நாங்கள் இதற்காக 26 ஆண்டுகள் காத்திருந்தோம். எம்மிடம் ஒன்றுமில்லாத நிலையில், மீண்டும் கட்டியெழுப்புவது சிரமமானது ஆனாலும் நாங்கள் துவண்டுவிட மாட்டோம் நாங்கள் இங்கே வாழ்வதற்கு வந்துள்ளோம், அதற்கான இரணைமாதா (இரணைதீவின் தாய், அதன் காக்கும் தெய்வம் கன்னி மேரி) எங்கள் வீடுகளைப் பாதுகாப்பாக வைத்துள்ளது என்கிறார்`. ஆனாலும் போருக்குப் பின்னரான எச்சங்கள் ஆங்காங்கே அடக்க முடியாத சில நம்பிக்கைகளை அளிக்கவே செய்கிறது.