சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கில் உள்ள சர்வ மத தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்குறித்த விடயம் தொடர்பாக மதத் தலைவர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த மாதம் யாழ் மாவட்டத்தில் உள்ள சர்வ மத தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வடக்கில் உள்ள சர்வ மதத்தலைவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் திங்கட் கிழம (18( மத தலைவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு இன்றைய செவ்வாய்க் கிழமை (19) யாழ்.ஸ்ரீநாக விகாரை விகாராதிபதி மீஹாகஜதுரே ஸ்ரீ விமலதேரர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மதத்தலைவர்களின் கையெழுத்து அடங்கிய மகஜரை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் மு.கோமகன் தேரரிடம் வழங்கிவைத்தார் அவர்கள் அனுப்பியுள்ள மகஜரில் சிறிலங்காவில் பல்வேறு சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் படியாக வடக்கிலுள்ள மதத் தலைவர்களின் வேண்டுகோள் மேதகு ஜனாதிபதி அவர்களே பல்வேறு (இந்து பௌத்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ) மதத் தலைவர்களாகிய நாங்கள் சிறைகளில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளிக்கும்படி தங்களை மனப்பூர்வமாக வேண்டிக் கொள்கிறோம்.
அரசியல் கைதிகளின் பெற்றோர் மனைவிமார் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கண்ணீரோடு எங்களை அணுகி எப்படியாவது அவர்களை விடுவிக்கும்படி கேட்டுள்ளார்கள் அவர்களுடைய கண்ணீரும் மனமுடைந்த நிலையும் எமது உள்ளத்தை தொட்டுள்ளது இந்தக் கைதிகளில் சில பேர் தங்களுடைய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமலே 8 – 10 வருடங்கள் சிறையில் இருக்கிறார்கள்.
சில பிள்ளைகள் பால.வயதுகளில் இருக்கும் பொழுதே அவர்களுடைய பெற்றோர் அவர்களது குடும்பங்களிலிருநது அகற்றப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு தங்கள் குடும்பங்களை பராமரிக்க அவர்களுககு எந்த வழியும் இல்லை. முன்னர் எப்போதையும் விட தற்போதுள்ள கொரானா கொள்ளை நோய் வேகமாகப் பரவும் சூழ்நிலையில் சிறைக் கொத்தணியில் 4000க்கு மேற்பட்ட கைதிகளும் 16 அரசியல் கைதிகளும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். என்பதோடு அவர்கள் செய்வதறியாது திகைத்துப் போயும் உள்ளம் உடைந்தும் இருக்கிறார்கள் .
குடிமக்களில் ஒரு பகுதியினர் அவர்கள் எவ்வளவு சிறிய தொகுதியினராக இருந்தாலும் அவர்கள் கடுமுனைப்பான துன்பங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் உட்பட்டிருக்கும் பொழுது ஏனைய குடிமக்கள் அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது .
நீண்டகால சிறைத் தண்டனை ஆயுள் தண்டனை மற்றும் மரணதண்டனை பெற்ற கைதிகள் கூட விடுவிக்கப்படுவதை நாம் ஒவ்வொரு நாளும் கேள்விப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். துர்பேறு வசமான அரசியல் கைதிகள் இதே நன்மைகளில் எதையும் அனுபவிக்கவில்லை என்பதை கவனிப்பதால் நாம் கவலையடைகிறோம்.
இந்த அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டால் அவர்கள் சமூகத்துக்கு எந்த பாதிப்பையும் விளைவிக்க மாட்டார்கள் என்று நாம் மனப்பூர்வமாக நம்புகிறோம்.
பிரதான சமூக நீரோட்டத்துக்குள் தாங்கள் வருவது குறித்து அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதானது எமது நாட்டின் சமாதான மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவும் என நாம் உணர்கிறோம். மேதகு ஜனாதிபதியிடமிருந்து அனுகூலமான பதில்விரைவில் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம் . தங்களையும் தங்கள் பணிகளையும் எமது நாட்டையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக என குறிப்பிடப்பட்டுள்ளது.