அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருமாறு கோரிக்கை .
மன்னார் நிருபர்
(24-01-2021)
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எருக்கலம்பிட்டி தர்கா நகர் கிராம மக்கள் குடியேறி சுமார் 50 வருடங்களை கடந்த நிலையிலும் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாகவும் பல்வேறு அரசியல் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் இது வரை எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.
தர்கா நகர் பகுதியை சூழ சுமார் 100 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் அதிகளவான பாதைகள் மணல் பாதைகளாகவே காணப்படுவதாகவும் மணல் பாதை ஊடாக வாகனங்களோ துவிச்சக்கர வண்டிகளையோ செலுத்த முடியாத நிலையே காணப்படுவதாகவும் இதனால் தாங்கள் அன்றாடம் அவதிப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் அவசர உதவி அல்லது இடர் கால நிலை ஏற்பட்டாலோ தற்காலிகமாக தங்குவதற்கோ இடம் பெயர்வதற்கோ கூட ஒழுங்கான ஏற்பாடு இல்லை எனவும் மன்னார் பிரதேச சபைக்குள் வரும் வீதிகள் கூட பிரதேச சபையால் அபிவிருத்தி செய்து தரப்படவில்லை எனவும் மக்களை அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
-மன்னார் பிரதேச சபைக்கு உற்பட்ட கழிவுபொருட்களை அகழும் செயற்பாட்டைக் கூட தங்கள் பகுதிகளில் ஒழுங்காக மேற்கொள்ளாத காரணத்தினால் குப்பைகள் தேங்கி காணப்படுவதுடன் நுளம்பு பெறுக்கமும் அதிகரித்து காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் வெளிச்சத்துக்கு என மின் விளக்குகள் கூட பிரதேச சபையினால் பொருத்தப்படாத நிலையில் பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் இம் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவை எல்லாம் இருக்க வீதி அமைப்பதற்கு என ஒதுக்கப்பட்ட ஒரு தொகை நிதி வீதியே அமைக்கப்படாமல் வீதி அமைக்கப்பட்டதாக ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு நிதி விடுவிக்கப்பட்டதாகவும் குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி , வீதி அபிவிருத்தி அதிகார சபை ,அரசாங்க அதிபர் , பிரதேச சபை தவிசாளருக்கு தெரியப்படுத்திய நிலையிலும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதோடு உண்மை நிலையை கண்டரிய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
யுத்த சூழ் நிலையில் இடம் பெயர்ந்து மீண்டும் சொந்த நிலங்களில் வாழும் தங்களுக்கு அடிப்படை வசதிகளை விரைவில் மேற்கொண்டு தருமாறு எருக்கலம் பிட்டி தர்கா நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.