மிகவும் பின் தங்கிய பிரதேசத்தை சேர்ந்த தமது பாடசாலைக்கு கனடா நாட்டின் ரொரன்ரோ மனித நேயயக் குரல் அமைப்பு வழங்கிய உதவி பேருதவியாக அமைந்துள்ளதாக கிளிநொச்சி மாயவனூர் அதிபர் திருமதி ல. கோபாலராசா தெரிவித்தார்.
கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய பாடசாலை அதிபர் திருமதி ல. கோபாலராசா தமது பாடசாலை மிகவும் பின்தங்கிய பாடசாலை என்றும் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு நிலையிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்தச் சூழலில் தமது பாடசாலையில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளியை தாண்டி சித்தி பெற்ற மாணவியும் குறித்த பரீட்சையில் சித்தி பெற்ற ஏனைய மாணவர்களும் புதிய கற்றல் உபகரணங்களுடன் கல்வியை தொடர ரொரன்ரோ மனிய நேய அமைப்பு செய்த உதவி பேருதவி என்றும் குறிப்பிட்டார்.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய 13 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் விசேட தேவை உடைய மாணவர்கள் மற்றும் போர் மற்றும் சமூக நெருக்கடிகளால் தாய் அல்லது தந்தையின்றி ஆதரவற்ற நிலையில் உள்ள மாணவர்களுக்குமாக 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பாடசாலை முதல்வர் திருமதி ல. கேபாலராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி இராதநாதபுரம் மகா வித்தியாலய அதிபர் க. புண்ணியமூர்த்தி சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த ஈழத் தமிழ் கலை பண்பாட்டுக் கழக தலைவரும் கவிஞருமான தீபச்செல்வனும் நிகழ்வில் கலந்து கொண்டார்.