கனடா – மொன்றியால் மாநகரிலிருந்து வீணை மைந்தன் எழுதுகிறார்…
‘காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்’ எனும் ஒரு ஆவணத் தொகுப்பு நூலை வெளியிட்ட பெருமைக்குரிய கவிஞன், கலைஞன், எழுத்தாளன், பத்திரிகையாளன், விமர்சகன், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பேச்சாளன் எனப் பன்முகங்களைக் கொண்டிருந்த அன்பர் ‘வண்ணத் தெய்வம்’ அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை எனக்கு எடுத்து வந்த கனடா உதயன் ஆசிரியர் லோ கேந்திரலிங்கம், “அவரைப் பற்றி நாம் ஏதாவது எழுத வேண்டும்” என்றார். அவர் என்னை நினைத்துத தான் அவ்வாறு குறிப்பிட்டாரோ எனக்குத் தெரியாது, ஆனால் எனது மனதில் வண்ணைத் தெய்வம் தொடர்பான பல நினைவுப் பதிவுகள் வெளியே காட்சிகளாக தோன்றிய வண்ணம் இருந்தன.
நீண்ட காலமாக கலை இலக்கியப் பணியாற்றிக் கொண்டிருந்த வண்ணைத் தெய்வம் அவர்களை நான் 2019 வரை நேரில் காணும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. அருமை நண்பர் ரவி தமிழ்வாணனின் மணிமேகலைப் பிரசுரம் வெளியீடாக வந்த ‘காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்’ எனும் அழகிய ஒரு ஆவணத் தொகுப்பு வெளியீட்டு விழா பாரிஸ் மாநகரில் இடம்பெற்றது தொடர்பான செய்தியை ஒரு வாரப் பத்திரிகையில் பார்த்தேன்.
அந்த சமயத்தில் தான் மொன்றியால் வாழ் நண்பர், ஆசிரியர் திரு சிவானந்தம்,தான் பாரிஸ் நகருக்கு பயணமாவதாகச் சொன்னார். அச்சமயம் , நான் பாரிஸ் நகரில் உங்களுக்கு அறிமுகமான இலக்கிய நண்பர்கள் இருந்தால், அவர்கள் மூலம் எழுத்தாளர் வண்ணைத் தெய்வம் அவர்களைத் தொடர்புகொண்டு, அவர் வெளியிட்ட அந்த நூலை வாங்கிக் கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டேன். எனது வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் சிவானந்தம் அவர்களும், மறந்து விடாமல், அந்த நூலை வாங்கிக் கொண்டு வந்ததுமல்லாது, நூலின் முன்பக்கத்தில் “என்றும் நல்வாழ்த்துக்கள்’ -மு. சிவானந்தம்’ என்ற வாழ்த்தும் வாசகங்களோடு என்னிடம் கையளித்தார். இந்த நேரத்தில் அவருக்கு எனது நன்றியை மீண்டும் பகிர்ந்து கொண்டு, இனி எழுத வந்த விடயத்திற்கு வருகின்றேன்.
வண்ணைத் தெய்வம் என்ற அற்புதமான மனிதரை நான் சந்திக்காது விட்டாலும், அந்த நூலைப் பார்த்ததுமே அவரது பெரிய மனதைப் பற்றி அறிந்து கொண்டேன். தனது சொந்தச் செலவில் மற்றவர்களைப் புகழ்ந்துரைக்கும் புத்தகத்தை வெளியிட்ட அவரை மனதில் வாழ்த்திக் கொண்டு அந்த ‘காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்து கலைஞர்கள் யார் யாரென அறியும் ஆவலுடன் நூலின் பக்கங்களைப் புரட்டத் தொடங்கினேன்.
ஈழத்தின் தவப் புதல்வர்கள் – கலைஞர்கள் – எழுத்தாளர்கள் – மற்றும் பன்முக ஆற்றல் படைத்த படைப்பாளிகள் என அந்த நூலை அலங்கரித்தவர்களில் பலர் எனக்கு அறிமுகமானவர்களாகவும், அறிமுகமில்லாதவர்களாகவும் இருந்தார்கள். அனைவருக்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்த நிலையில், அங்கு சேர்க்கப்பட்டவர்களில் பல கனடிய படைப்பாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரையும் பற்றிய குறிப்புக்களோடு அந்த நூலை வெளியிட்டிருந்தார் வண்ணைத் தெய்வம் என்பதை பரிந்து கொண்டு மேலும் பூரிப்படைந்தேன்.
அவர்களுள், அமரர் சட்டத்தரணி எஸ். கே. மகேந்திரன், ஈழத்துச் சிவானந்தன், எங்கள் ஊர், தமிழ் மகள், குறமகள் எழுத்தாளர் வள்ளிநாயகி, ஆசிரியப் பெருந்தகை அலெக்ஸாண்டர், மற்றும் எஸ். திருச்செல்வம், உதயன் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், சிந்தனை பூக்கள் எஸ். பத்மநாதன், அ.முத்துலிங்கம், கவிஞர் அலை ஆறு ராஜேந்திரம், குரு அரவிந்தன், ஆகியோர் உட்பட பலரை இலக்கியக் குறிப்புக்களுடன் வீணைமைந்தன்-கே.ரி. சண்முகராஜா என எனக்கும் ஒரு பக்கத்தை ஒதுக்கியிருந்தார். அதில் என்னைப் பற்றி தான் அறிந்த செய்திகளையும் அன்பர் வண்ணைத் தெய்வம் பதிவு செய்திருந்ததை கண்டு மிகவும் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தேன். அவரது பெருந்தன்மையை மனதிற்குள் பாராட்டிக் கொண்டேன்.
என்னைப் பற்றிய தகவல்கள் மற்றம் புகைப்படம் ஆகியவற்றை யாரிடமிருந்து அவர் பெற்றார் என்பது எனக்குத தெரியாவிட்டாலும், அவர் வாழ்த்திய கலைஞர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்றாலும் நான் என்ன சாதித்தேன் என்று எண்ணி என் நெஞ்சு குறு குறுத்தது. இதைப்பற்றி ஒரு நாள் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்று நினைத்துக்கொண்டு அந்த நாளிற்காக காத்திருந்தேன்.
இவ்வாறான நிலையில் 2019ம் ஆண்டு முதன் முதலாக நான் பாரிஸ் நகருக்கு பயணம் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. ” பாரிசுக்குப் போ” என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியது போன்று எனது எனது பயணம் அமைந்தது பயனுள்ளதாக இருந்தது.
பாரிஸ் சென்றடைந்ததும், அடுத்த நாளே வண்ணைத் தெய்வம் அவர்களை தொலைபேசியில் அழைத்து, என்னை அறிமுகம் செய்து கொண்டு சந்திக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைத தெரிவித்தேன்.
அப்போது அவர் தான் பாரிஸ் நகருக்கு வெளியே தொலைவில் வாழ்ந்து வருவதால், என்னை பாரிஸ் நகரின் மத்தியில் புகழ்பெற்ற தமிழர் பகுதியான ‘லாசப்பள்’ கடைத் தெருவிற்கு வரும்படியும் அங்கு ஒரு குறிப்பிட்ட தமிழர்களின் உணவகத்தில் சந்தித்து உரையாடுவோம் என்று ஆர்வத்துடன் குறிப்பிட்டார். எங்கள் சந்திப்புக்கு நேரம் குறிக்கப்பட்டது.
குறிப்பிட்ட ஒரு காலைப் பொழுதில் என்னுடைய மைத்துனர் என்னை அந்த கடைவீதிக்கு அழைத்துச் சென்றார். சந்திப்பின்போது எனது மைத்துனரும் வண்ணைத் தெய்வம் அவர்களும் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்கள் என்றபடியால் அவர்கள் நெருக்கமாக உரையாடினார்கள். எனக்கும் மகிழ்ச்சியாகவிருந்தது அவர்களின் நெருக்கம்.
லௌவீக குடும்ப விடயங்களும் தாயகம் பற்றிய தகவல்கள் நிகழ்வுகள் ஆகியனவும் புலம் பெயர் தேசங்களில் இடம் பெறும் இலக்கிய முயற்சிகள் ஆகியவை தொடர்பாகவும், எமது உரையாடல் சுவாரஸ்யமாக தொடர்ந்தது.
” உங்களைப் பற்றி ஒரு அன்பர் ரொரன்ரோவிலிருந்து எனக்கு தகவல் அனுப்பியிருந்தார். அதை வைத்தே நான் உங்களைப் பற்றிய அந்த குறிப்புக்களை எனது நூலில் பிரசுரம் செய்தேன்: என்றார். அதற்கு நான் “என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட அளவிற்கு நான் வளரவுமில்லை. பங்காற்றவுமில்லை” என்று அடக்கமாகச் சொன்னேன்.
“காலம் உங்களைப் பதிவு செய்வதை யாரும் தடுக்கவே முடியாது” என்று சட்டென்று பதில் சொன்னார் வண்ணையார். மனம் குளிர்ந்து போனேன்.
உணவகத்தில் அவர் ஆடர் செய்த தேங்காய் சொட்டுக்கள் கலந்த சுண்டலுடன் சூடான நேநீரையும் சுவைத்து மகிழ்ந்து உரையாடலையும் இனிப்போது நிறைவு செய்து கைகளைக் குலுக்கிக் கொண்டு விடைபெற்றோம்.
‘கலைமாமணி’ முகத்தார் எஸ் யேசுரட்ணம் எழுதியது போன்று, “கலங்கமில்லாத உள்ளம், குழந்தைகள் போன்று பழகும் மேன்மை, பெரியவர்கள் இடத்தில் காட்டும் பாசமும் பணிவும் அன்பும் பண்பும், வேறென்ன வேண்டும் தமிழ் பேசும் படைப்பாளிகளுக்கு. அவை வண்ணையாரிடம் குவிந்து கிடந்தன.
எமது சுந்தரத் தமிழ் திரைகடல் தாண்டி எங்கெங்கோ சென்ற போதிலும் அமிழ்தெனும் தமிழை அழைத்தேகும் வண்ணைத் தெய்வம் அவர்களின் பண்பும் காலங்கள் வாழ்த்தி நிற்கும்.
ஆயிரத்தில் ஒருவர்தான் வண்ணைத் தெய்வம்.
அன்னார் வடித்த அந்த நூல் எம் கரங்கள் சேர்த்தெடுத்து பொன்னான மாலையென சூட்டிக் கொள்வோம் எமது ஈழத்தாய்க்கு!