(மன்னார் நிருபர்)
(29-01-2021)
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 250 வறிய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 1986 ஆம் ஆண்டு சாதாரண தர பிரிவு மற்றும் 1989 ஆம் ஆண்டு உயர் தர பிரிவுகளில் கல்வி கற்று தற்போது இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வசித்து வரும் பழைய மாணவர்களின் நிதி உதவியுடன் குறித்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(29) காலை 10.30 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இடம் பெற்றது.இதன் போது குறித்த பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 25 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் முதல்வர்,பழைய மாணவர்கள் இணைந்து குறித்த பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.மேலும் மாந்தை மேற்கு,மடு, நானாட்டான், முசலி ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.