இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்களின் பின்புலத்திலும், போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒருவரின் கீழ் நாட்டின் இராணுவம் செயல்படும் நிலையிலும், ஐ நா நேரடியாக நாட்டின் இராணுவத்தின் மீது காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ நா மீளாய்வு கோரியுள்ளது.
கடந்த ஜனவரி 17 அன்று ஐ நா மனித உரிமைக ள் ஆணையரால் வெளியிடப்பட்ட 17 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை, “ஐ நா அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தினர் சேவையை மீளாய்வு செய்து, அதில் இடம்பெறும் நபர்களின் பின்னணியை ஆராயும் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்“ என்று கோருகிறது.
இந்த அறிக்கையின் பின்புலத்தில் இலங்கையிலிருந்து படைகள் ஐ நா அமைதிகாக்கும் பணியில் உள்வாங்கப்படுவது இடைநிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான செயற்பாட்டின் (ஐடிஜேபி) நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா வலியுறுத்தியுள்ளார்.
ஐ நா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையை அடுத்து, அந்தப் பணிக்கு உள்வாங்கப்படும் படையினரின் பின்புலங்களை ஆராயும் அமைப்பின் சுயாதீனமும் நம்பகத்தன்மையும் அடிப்படையில் புரையோடிப் போயுள்ளது தெரிகிறது என்றும் யாஸ்மின் சூக்கா கூறுகிறார்.
“ஐநாவின் அமைதிகாக்கும் பணியகத்தில் படைகளை உள்வாங்கும் முன்னர் உரிய வகையில் அதன் மீது கவனம் செலுத்த வேண்டிய சட்டரீதியான கடப்பாடுள்ளது, ஐ நா ஆணையரின் அறிக்கையைப் பார்க்கும் போது இலங்கைப் படையினர் அவ்வகையில் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனரா என்பதை ஐநா தலைமையகத்தால் சான்றளிக்க முடியவில்லை என்றும், இந்நிலையில் பின்புலத்த்டை ஆராயும் நடவடிக்கை ஜெனீவாவுக்கு மாற்றப்பட வேண்டும்“என்று ஐடிஜேபி யின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கோரியுள்ளார்.
தற்போதுள்ள ஏற்பாட்டின் கீழ் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் ஐநா படைகளில் சேரவுள்ளவர்களின் பின்புலத்தை கொழும்பில் வைத்து ஆய்வு செய்கிறது. ஐ நா மனித உரிமைகள் ஆணையர் மிஷேல் பாஷலே கூறியுள்ளபடி, இலங்கை மனித உரிமைகள் ஆணையம் அரசியல் மயமாக்கப்பட்டும், அரசின் முன்னாள் அமைச்சர் ஒருவரை அதன் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்தும் அதன் சுயாதீனம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஜொஹனஸ்பர்கிலிருந்து வெளியான ஐடிஜேபி அறிக்கை கூறுகிறது.
இலங்கை இராணுவத் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சின் செயலராகவும் ஐ நாவால் போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களை நியமித்துள்ளது குறிப்பாகக் கவலைகளை எழுப்புகிறது என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார். கடந்த 2019ல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டவுடன், இலங்கையிலிருந்து ஐ நா அமைதிகாக்கும் படைக்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கையை இடைநிறுத்துவதாக ஐ நா அறிவித்தது. எனினும் பின்னர் கால்வாசியளவே அது நிறுத்தப்படுவதாக ஐ நா விளக்கம் அளித்தது-அதாவது லெபனானிலிருந்து இலங்கைப் படையின் உறுப்பினர்கள் விலக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், ஐநா நடவடிக்கைகளுக்குச் செல்லும் இலங்கைப் படையினர் போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளன சவேந்த்ர சில்வாவுக்கு சலூட் அடித்து மரியாதை செய்வதைக் காட்டும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாவதையும் ஐடிஜேபி சுட்டுக்காட்டியுள்ளது. கடந்த 2019ல் இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது போரினால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயல் என்று ஐ நா வல்லுநர்கள் கூறினர். அதை அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரித்தது.
கடந்த பிப்ரவை 2020ல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தார் மனித உரிமைகளை ஈடுபட்டார்கள் என்று அமெரிக்கா தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. பின்னர் அவருக்கு கூட்டுப்படைகளின் தலைவர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டது. அண்மையில் அவருக்கு நான்கு நட்சத்திர ஜெனரல் பதவியுர்வும் அளிக்கப்பட்டது.
“போர் குற்றவாளிகளுக்கு பதவி உயர்வளித்தால் ஏற்படும் பாதிப்புகளை இலங்கைக்கு ஐநா அமைதிகாக்கும் அலுவலகம் உணர்த்த வேண்டும், அமைதிகாக்கும் படையில் இடம்பெறுவது ஒரு சலுகை அது உரிமையல்ல“ என்பது உணர்த்தப்பட வேண்டும் என்று யாஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டுகிறார்.
ஐநா தலைமைச் செயலர் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலவரம் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். இலங்கைத் தொடர்பான அறிக்கை மீதான விவாதம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் 22 பிப்ரவரி முதல் 23 மார்ச் வரை நடைபெறவுள்ளது.
இலங்கை தனது அதிகாரபூர்வ பதிலை இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், ஐநா அமைதிகாக்கும் பணிக்குத் தொடர்ச்சியாக தமது படைகளை அனுப்ப எண்னியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது