இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வசமிருந்த வாகரை பிரதேச சபையின் ஆட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இந்த அதிகார மாற்றத்தை அடுத்து, வாகரை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் கண்ணப்பன் கணேசன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
இதற்கு முன்னர் தவிசாளராக செயற்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஞானம் கோணலிங்கம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதன்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த அதிகாரம் தமிழ் மக்கள் விடுதைப்புலிகள் கட்சியினரின் கைகளுக்கு மாறியது .இப் பிரதேச சபை 18 உறுப்பினர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 15 உறுப்பினர்கள் கடந்த 11ம் திகதி வியாழக்கிழமை சபைக்கு சமுகமளித்திருந்த போதும் அதில் 12 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 03 உறுப்பினர்கள் எதிராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக தாவிசாளர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.ஆதரவாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 02 பேரும் ஐக்கிய தேசியக் கட்சி 02 பேரும் தமிழர் ஐக்கிய முன்னணி இருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒருவரும் ஆதரவாக செயற்பட்டனர். எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருவரும் பொது ஜன பெரமுன கட்சியிலுள்ள ஒருவரும் வாக்களித்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.