தீபச்செல்வன்
காதல் ஒன்றுதான் இப் பூமியின் உயிர்ப்புக்கே காரணமாய் இருக்கிறது. காதல் மாத்திரமே இப் பூமியில் சலிப்பூட்டாத கதையாகவும் கலையாகவும் வாழ்வின் புதுமையாகவும் இருக்கிறது. காதல் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். காதல் ஒரு மிருகத்தையும் மனிதனாக்கும் சக்தி கொண்டது. காதல் என்பது ஒரு ஒழுக்கம் என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. சின்ன வரிகளின் பெரும் காதல் காவியங்களை கண்ட மொழி தமிழ். அதைப்போல மிக நீண்ட காதல் கவியங்களும் தமிழில்தான் எழுதப்பட்டுள்ளன. காதலால் செழுமை பெற்ற தமிழர் வாழ்வு என்றால் காதலால் செழுமை பெற்ற மொழி தமிழ் எனக் குறிப்பிடுவது தகும்.
ஈழக் கவிதைகள் அல்லது ஈழ இலக்கியங்கள் ஏன் காதலைப் பற்றிப் பேசுவதில்லை? என்று சில நண்பர்கள் பொதுவாகக் கேட்பதுண்டு. ஈழ இலக்கியங்களில் தனித்து நிற்கின்ற இடமே அதுதான். தமிழ் நிலப் பரப்பு சார்ந்த காதல் என்பது இதுவரையில் ஒரே வகையாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் ஈழ நிலத்தின் காதலும் வீரமும் இன்னொரு வகையென்றெ சொல்ல வேண்டும். தமிழ் நிலம் கண்டிராத, தமிழ் இலக்கியம் கண்டிராத காதல் ஈழத்தில்தான் இருக்கிறது. மண்ணையும் பெண்ணையும் நேசிக்கும் காதல் அது. தாயகக்கனவுடன் தாவணிகளுக்குப் பின்னே அலைகின்ற நாயகர்களின் காதல் தேசம் இது.
சங்க காலத்தில் இருந்து சம காலம் வரை தமிழக இலக்கியமும் வாழ்வும் அகம் புறம் குறித்து கொண்டிருக்கும் அனுபவங்களுக்கு மாறானது ஈழம். சங்க இலக்கியங்கள் வீரம் பற்றி சமரசற்ற முறையில் பாடுகின்றன. அங்கே நாட்டுப் பற்று பற்றியும் ஈடற்ற காதல் பற்றியும் பல பாட்டுக்கள் பாடப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் பேசாத காதற்பாட்டு என்று எதுவுமே இல்லை. இன்றும் நமது கவிஞர்களால் சங்க இலக்கியங்களை மீறிய காதல் பாடல்களை எழுத முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் கால மாற்றத்தில் வீரமும் போரும் பல்வேறு அகப்புற மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்பதற்கு ஈழத்தின் காதல் நிரம்பிய வீரப்பாடல்கள் நல்ல சான்றுகள் எனலாம்.
காதலர் தினக் கொண்டாட்டம் என்பது பன்னெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள விசயம். அது கிறிஸ்தவ மரபுகளின் ஊடாக இந்த உலகத்திற்கு பழக்கமானது. காதல் கொண்ட நபர்களின்மீது பாசத்தை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வருடத்தில் எல்லா விசயங்களுக்கும் எல்லா நபர்களுக்கும் விசேட தினங்கள் உள்ளததைப் போல காதலர் தினமும் முக்கியத்துவம் பெறுகின்றது. காதலர் தினத்தின் போது அழகான வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படும். அன்பை நெருக்கத்தை ஈர்ப்பை வெளிப்படுத்தும் இந்த நாள் இவ் உலகின் சகல மனிதர்களுக்கும் ஒரு முக்கியமான நாளே. இது மனங்களுக்குள் மாத்திரம் பூக்கும் காதல் மலர்களை பரிமாறுகிற நாளாகச் சிறப்பு பெறுகிறது.
தேசம் மீதான காதலை வெளிப்படுத்தும் உன்னத தலைவன் பிறந்த இடம் ஈழம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிகச் சிறந்த வீரத் தலைவராக ஒழுக்கம் கொண்ட உலகின் ஒப்பற்ற தலைவராக கருதப்படுகின்ற வேலுப்பிள்ளை பிரபாகரனின் காதல் என்பது நிகரற்ற ஒரு காவியமாகவே கருதப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்களற்றது அவருடைய காதல். எளிமையும் ஆழமும் கொண்டது அவருடைய காதல். எந்த பிரகடனங்களும் இல்லாத அந்த எளிமையான காதல், தமிழ் சமூகத்தின் இனியதொரு நினைவாக இருக்கிறது. ஒழுக்கமும் தீரமும் கொண்ட தலைவரின் வாழ்வில் அவரது தனிப்பெருங்காதலும் ஒரு மகத்துவ காவியமே.
ஈழ மண்ணில் காதலியை நேசிக்கும் அளவிற்கு தேசத்தை நேசிக்கும் காதலும் பெருகிய காலம் ஈழப் போராட்ட காலம். தலைவர் பிரபாகரன் தன் காதல் பெருந்துணையைப் போல், தன் தேசத்தையும் நேசித்தார். அதனால்தான் அவர் உலகின் மகத்துவமான தலைவராக இருக்கிறார். அதையே ஈழ இளைஞர்களும் வெளிப்படுத்தினர். தன் காதலியை விடவும் தேசத்தை நேசிக்கும் தேசப்பற்றை வெளிப்படுத்தி காதலின் மகத்துவத்தை உணர வைத்தனர். உண்மையிலேயே உலகின் ஆகச் சிறந்த போராளிகளும் தலைவர்களும் காதல் பிரியர்களாக இருந்திருக்கின்றனர். அத்துடன் தமது காதலை தேசத்தின் காதலாகவும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதுவே காதலின் பெருக்கமாகவும் இம் மண்ணில் நிறைந்திருக்கிறது.
இந்த உலகில் ஆகச் சிறந்த காதலாக நாம் நினைவு கொள்ளும் காதல்கள் வெகு சிலவே. இப் பூமியில் கணந்தோறும் எண்ணற்றவர்கள், காதலித்துக் கொண்டே இருக்கின்றனர். வெற்றியும் தோல்வியும் உடைவுகளும் என்று காதல் பல்வேறு நிலைகளை எடுக்கின்றது. வேறுபாடற்ற அன்புடைய நெஞ்சயங்கள் உடைந்து பல சமூகப் பிரச்சினைகளையும் அரசியல் சிக்கல்களையும் கூட உருவாக்குகின்றது. இதையெல்லாம் கடந்தே உன்னத காதல் நினைவுகொள்ளப்படுகிறது. காதலை கடந்த காதலும் அதனை சுற்றிய வாழ்வும் அந்தக் காதலை உலகின் தனித்துவமான காதலாக்குகிறது.
தேசம் மீதான காதலினால் எங்கள் மண்ணில் சுமார் 50 ஆயிரம் இளைஞர்கள் தமது உயிரை ஈர்ந்துள்ளனர். அவர்களில் எத்தனைபேருக்கு இன்னமும் நிறைவேறாத மகத்துவமான காதல் உண்டு. தாய் மண்ணைப் போலவே காதலியை நேசித்தவர்கள். தம் காதலிகளுடன் கதை பேசி வாழ்ந்து இன்புற வேண்டும் என்ற தாயகக் கனவுடன் ஈழ விடுதலைக்காய் களம் புகுந்தவர்கள். இன்றைக்கு நாம் ஒரு வாழ்வை வாழ்கின்றோம் என்றால், அப்படிப்பட்ட பல பல ஆயிரம் இளைஞர்களின் பொசுக்கப்பட்ட கனவுகளில்தான் அந்த வாழ்வு கட்டி எழுப்பட்டிருக்கிறது. அவர்களின் ஏக்கங்களாலும் தவிப்புக்களாலுமான காற்றை தான் நாம் சுவாசிக்கிறோம்.
அப்படிப்பட்ட மண்ணில் பிறந்து வளரும் எமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. அண்மையில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு கிழக்கை சேர்ந்த இளைஞர்கள் யுவதிகள் பெருமளவானோர் கலந்து கொண்டார்கள். உண்மையில் இளைஞர், யுவதிகள் இல்லையென்றால் அப் போராட்டம் அவ்வளவு எழுச்சி கொண்டிருக்காது என்று கூறத்தக்க வகையில் அவர்களின் பங்களிப்பு அமைந்தது. இவர்கள்தான் தேசத்தை காதலிக்கும் இளைஞர்கள். இன்றைய நாளில் இவர்களை மகத்துவப்டுத்துவதே சிறந்தது. இன ஒடுக்குமுறையும் இன அழிப்புப் போரும் எமது இனத்தை தின்று ஏப்பமிடும் காலத்தில் எம் இளைஞர்களின் தேசக் காதல் நம்பிக்கை தருகிறது.
இளைஞர்கள் அதிகம் உயிர் இழப்பை ஈந்த மண்ணில், இளைஞர், யுவதிகள் அதிகம் காணாமல் ஆக்கப்பட்ட மண்ணில், இளைஞர், யுவதிகளுக்காக காத்திருக்கும் மண்ணில், வாழ்வுக்கான காதல் ஏக்கமாகப் பெங்கியிருக்கும் இந்தக் காலத்தில் இளைஞர், யுவதிகளின் தேசப் பற்றும் எழுச்சி கொண்ட பயணமும் பாதிக்கப்பட்ட இந்த நிலத்தில் நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிறது. நம் துணையிடமும் நம் இனத்திடமும் நாம் வாழ்கிற தேசத்தின்மீதும் பெருங்காதல் கொண்டு வாழ்ந்து திளைப்போம்.