யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்
(மன்னார் நிருபர்)
(17-02-2021)
சுவிற்சர்லாந்து தூதுவருடனான சந்திப்பு தொடர்பாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் மாலை ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
-குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,
இன்று இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலருடன் முதற் செயலாளர், அரசியல், சிடோனியா கேபிரியல் அத்துடன் நிகழ்ச்சிகள் இணைப்பாளர் சுசந்தி கோபாலகிருஷ்ணன் மூவரும் என்னை வந்து சந்தித்தார்கள்.
புதிய சுவிஸ் தூதுவரின் வடக்கை நோக்கிய முதற் பயணம் இதுவாகும். வவுனியாவில் தரித்து நின்று, இன்று மாலை இங்கு வந்து என்னைச் சந்தித்த பின்னர் நல்லூர்க் கந்தனைத் தரிசிக்கச் செல்கின்றார்கள்.
எங்களுடைய சரித்திரம் பற்றியும் தற்கால பிரச்சினைகள் பற்றியும் பல கேள்விகளை அவர் கேட்டிருந்தார். முக்கியமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்களின் எழுச்சிப் பவனி சகலரையும் ஒன்று சேர்த்தது என்று கூறி இவ்வாறான ஒற்றுமை வருங்காலத்தில் நிலைக்குமா என்று கேட்டார். அதற்குப் பதில் அளித்த நான் 2004 டிசெம்பர் மாதத்தில் சுனாமி வந்த போது உக்கிரமாகப் போரில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் மனிதாபிமான முறையில் ஒன்று சேர்ந்து, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மூன்று நாட்கள் வரையில் உதவி செய்தார்கள்.
அதே போன்று இன்று தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர், கத்தோலிக்கர்கள் போன்ற அனைவரும் இன்றைய ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் கொள்கைகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள். சிறுபான்மையினர் அனைவருக்கும் எதிராக சிங்கள பௌத்தம் என்ற ஆயுதத்தை ஓய்வுபெற்ற இராணுவத்தினருடனும் சேவையில் இருக்கும் படையணியினருடனும் சேர்ந்து பிரயோகிக்கும் போது பாதிப்புறும் சகல மக்களும் ஒன்றிணைகின்றார்கள்.
தற்போதைய ஐக்கியம் அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களின் பிழையான செயற்பாடு தொடரும் வரையில் வடக்கும் கிழக்கும் மலையகமும் சேர்வன. தமிழரும் முஸ்லீம்களும் சேர்வர். வடக்கும் கிழக்கும் இணைவன. ஆகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலே தான் எமது ஐக்கியம் தங்கியிருக்கின்றது என்றேன்.
உங்கள் அரசியல் கட்சிகள் பலவாகப் பிரிந்து நிற்கும் போது அவர்கள் இடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமா என்று கேட்டார். அதற்கு நான் கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் தங்கள் தங்களது கொள்கைகள் சம்பந்தமாகப் பூரண புரிதல் ஏற்பட்டால் முடியும் என்றேன். அதன் அர்த்தம் என்ன என்று கேட்டார். தமிழ் மக்கள் வாக்களிக்கும் கட்சிகள் இரண்டு முக்கியமான பிரிவுகளாகப் பிரிந்து நிற்கின்றன.
ஒரு சாரார் தமிழ் மக்களின் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் தமது கொள்கைகளை வகுத்திருக்கின்றார்கள். மறு சாரார் அரசாங்கத்திடம் இருந்து இன்று எதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையில் செயற்படுகின்றார்கள். பறங்கியர்களுக்கு நடந்தது போன்று அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் வருங்காலத்தில் தமிழ் மக்களின் தொகையையும் வதிவையும் குறைத்துக் குறைத்து வடக்கு கிழக்கை பௌத்த சிங்கள மயமாக்கக் கூடும் என்ற பயத்திலேயே ஒரு சாரார் தமது அரசியலை நடத்துகின்றார்கள்.
மறுசாரார் பின்னர் என்ன நடந்தாலும் எமக்குக் கவலையில்லை, இன்று எமது மக்கள் குனிந்து பணிந்தேனும் அரசாங்கத்திடமிருந்து எதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையிலேயே அரசியல் நடத்துகின்றார்கள். பின்னையோர் வருங்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். முன்னையவர்கள் நிகழ்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
அரசியல் தீர்வும் பொருளாதார அபிவிருத்தியும் தேவை என்று இருசாராரும் பயணிக்க வேண்டும். இவற்றை விட தனிப்பட்ட ரீதியிலே அரசியல் பிரமுகர்கள் இடையில் கோபதாபங்கள் மற்றும் முரண்பாடுகள் இருப்பதையும் அவதானிக்கலாம். புரிந்துணர்வு ஏற்பட்டால் எமது கட்சிகள் யாவும் ஒருமித்து செயல்பட முடியுமென்றே நான் கருதுகின்றேன்.
பொது வாக்கெடுப்பை வேண்டி உங்களுடைய கட்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தது. அவ்வாறெனின் என்னவாறான கேள்விகளை நீங்கள் பொது வாக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்கப் போகின்றீர்கள் என்று கேட்டார். முதலிலே பொது வாக்கெடுப்புக்கு ஐ.நா அனுமதியைத் தரட்டும் கேள்விகளைப் பின்னர் பார்க்கலாம் என்றேன்.
பல சிங்கள புத்திஜீவிகள் இந்தப் பொது வாக்கெடுப்பின் மூலமாக தமிழ்த் தலைவர்கள் நாட்டைப் பிரிக்கப் பார்க்கின்றார்கள் என்றும் பிரிவினைக்கு வித்திடுவதற்கே பொது வாக்கெடுப்பை தமிழ் அரசியல்வாதிகள் கோருகின்றார்கள் என்று நினைக்கின்றார்கள் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த நான் ஒற்றையாட்சியா அல்லது சமஷ்டியா என்று கேள்விகளை நாம் முன் வைத்தால் ஒற்றையாட்சியா பிரிவினையா என்ற கேள்விக்கு இடமில்லை அல்லவா என்று நான் கேட்டேன்.
தமிழ் மக்களின் பாரம்பரியம் பற்றியும் சிங்கள பௌத்த மயமாக்குதல் பற்றியும் பல விடயங்களை நாங்கள் பேசிக்கொண்டோம். திரும்பவும் வந்து சந்திப்பதாக கூறி அவர்கள் விடைபெற்றார்கள்.
ஒரு நகைச்சுவை நிகழ்வும் நடந்தது. பழக்கத்தின் நிமித்தம் நான் தூதுவருக்கு கைலாகு கொடுத்த போது அவர் தமது இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தார். அப்பொழுது நான் நீங்கள் வணக்கத்திற்காக கிழக்கு முறையைத் தற்போது பின்பற்றத் தொடங்கி விட்டீர்கள். நாங்கள் இன்னமும் மேற்கிடம் இருந்து படித்தவற்றை வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறினேன். ‘கொரோனாவால் ஏற்பட்ட மாற்றம் இது’ என்றார்.