கதிரோட்டம் 12-02-2021
இலங்கையின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாகத் திகழும் தேயிலையின் சாயம் சிவப்பு நிறத்தில் காணப்படுவதற்கு காரணம் அந்த தேயிலைச் செடியிலிருந்து தளிர்களை கிள்ளி எடுக்கும் தொழிலாளர்கள் அட்டைக் கடியாலும் பாம்புக் கடியாலும் சிந்துகின்ற இரத்தின் அடையாளம் என்று கவிஞன் ஒருவன் எழுதிச் சென்ற சில வரிகள், அவர்களின் வலிகளைச் இன்னும் சொல்லிய வண்ணம் உள்ளன. இலங்கைக்கு மிகக் கூடுதலான அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்ற தொழில்துறையாக முன்னொரு காலத்தில் தேயிலை ஏற்றுமதி விளங்கியது. சர்வதேச ரீதியில் இலங்கைத் தேயிலைக்கு தனித்துவமான பெயரொன்று அன்று நிலவியது. இலங்கைத் தேயிலையானது தரமும் சுவையும் வாய்ந்ததென்பது உலக மக்களின் நம்பிக்கையாக இருந்தது.
உலகில் உற்பத்தி செய்யப்படுகின்ற மற்றைய நாடுகளின் தேயிலையை விட இலங்கைத் தேயிலையே சுவை மிகுந்ததாக விளங்குகின்றது. எமது நாட்டின் பொருத்தமான தட்ப வெப்ப நிலைமை மற்றும் தேயிலையின் இனம் போன்றன இந்த தனித்துவத்துக்கான காரணங்கள் ஆகும்.
இலங்கைத் தேயிலைக்குரிய நற்பெயர் நாடு சுதந்திரமடைந்த பின்னரும் தொடர்ந்து நிலவி வந்தது. ஆனால் காலப் போக்கில் இலங்கைத் தேயிலையின் நற்பெயருக்கு சிறு களங்கம் ஏற்படலானது. அதன் காரணமாக உலகின் சில நாடுகள் இலங்கைத் தேயிலைக்குப் பதிலாக வேறு நாடுகளிலிருந்து தேயிலையை குறைந்த விலையில் இறக்குமதி செய்யத் தொடங்கின. அதேசமயம், இலங்கையிலும் தேயிலையின் உற்பத்தியும் தரமும் சிறிது வீழ்ச்சியடையத் தொடங்கின.
இவற்றுக்கெல்லாம் அப்பால், இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச நற்பெயரை பெற்றுக் கொடுத்த தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் சம்பந்தமான விடயமும் இங்கு பிரதானமாக குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும்.
அம்மக்களின் அர்ப்பணிப்பினாலேயே மலையகத்தில் பெருந்தோட்டங்களும் வீதிக் கட்டமைப்புகளும் உருவாகின. அவர்களால் தோட்டங்கள் உருவாகியதே தவிர, அம்மக்களின் வாழ்க்கைத் தரமானது இன்னும் இரு நூற்றாண்டு கால பழைமை கொண்டதாகவே காணப்படுகின்றது. ஆங்காங்கே வீடமைப்புத் திட்டங்கள் உருவாகியதென்பது உண்மைதான். ஆனாலும் அன்றைய காலத்து லயன் காம்பிராக்களில் அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் நல்லதொரு முடிவு எட்டப்பட்டுள்ளது. சம்பள உயர்வுக் கோரிக்கையைப் பொறுத்த வரை அதனை குறிப்பிடத்தக்க முன்னேற்றமெனக் கொள்ளலாம். ஆனாலும் ஆயிரம் ரூபாவுடன் அம்மக்களின் துன்பங்கள் யாவும் தீர்ந்து விடவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதும் இன்னும் தெரியாமலே உள்ளது. அவர்களது உரிமைகளுக்காக போராடுகின்றோம் என்று சொல்லிய தொழிற்சங்கத் தலைவர்கள் பின்னாளில் அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் வந்து தங்கள் வாழ்க்கையை உயர்த்திச் கொள்கின்றார்கள். ஆனால் தொழிலாளர்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் தீவிரமான கவனம் செலுத்தப்பட வேண்டும். நாட்டின் ஏனைய பிரதேச மக்களுக்கு நிகராக அவர்களும் வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இலங்கைத் தேயிலையின் தரமும் உயரும். ஆமாம் தற்போது கூட two leaves and a bud என்ற ஆங்கிலக் கூற்றுக்குள்ள மதிப்பு அதனை கிள்ளி எடுக்கின்றவர்களின் கரங்களுக்கு இல்லை.