சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
எச்சரிக்கை: இதுவொரு பகுப்பாய்வு கட்டுரை, காழ்ப்புணர்ச்சிகள் ஏதும் இதிலில்லை.
ஆடுகளத்திலும் சரி அரசியல் களத்திலும் சரி மிகவும் வேகமானவர் என்று அறியப்படுபவர் இம்ரான் கான். பாகிஸ்தானுக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர்.
தமது அரசியல் பயணத்திற்கு அதையே அடித்தளமாகவும் அமைத்துக் கொண்டவர். உலகக் கோப்பை வெற்றி அவரது ஆளுமையை பலமடங்கு உயர்த்தியது. லண்டனைச் சேர்ந்த செல்வச் சீமாட்டி ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை கரம்பிடித்தார் பின்னர் கைகழுவினார்.
பஷ்தூன் இனத்தவருக்கே உரிய உயரம், கம்பீரம், கவர்ச்சி, துணிச்சல் இவையெல்லாம் இயற்கையாகவே இம்ரான் கானுக்கு அமைந்திருந்தது. கிரிக்கெட் ஆடுகளத்தில் அவரது பந்து வீச்சில் அனல் பறக்கும். மிகவும் திறமையான வீரர்கள் கூட மிகவும் கவனுத்திடனேயே அவரை எதிர்கொள்வர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக அவர் வகுத்த வியூகங்கள் அந்நாட்டுக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளது.
இந்தப் பீடிகைகள் எதற்கு? ஆட்டத்தில் அவர் சாதித்ததை அரசியலில் சாதித்தாரா என்பதை பாரபட்சமின்றி ஆய்வு செய்வதற்கே!
அவரது கட்சி பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (நீதிக்கான பாகிஸ்தானிய இயக்கம்) வளர்ந்ததற்கு அவரது ஆளுமைக்கு அப்பாற்பட்டு வேறொரு முக்கிய காரணமும் உண்டு. அது பாகிஸ்தானிய அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்துவந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீகும் மக்கள் ஆதரவை இழந்ததும் ஆகும்.
பேனசீர் புட்டோவின் படுகொலை, அதையடுத்து அவரது 19 வயது மகன் பிலாவல் புட்டோவைக் கட்சித் தலைவராக்கியது, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அவரது கணவர் ஆசிஃப் அலி ஜர்தாரியை அதிபராக்கியது என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) அரசியல் தற்கொலைப் பாதையில் சென்றது.
மறுபுறம் `பஞ்சாப் சிங்கம்` என்று அவரது கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீகின் அன்பர்களால் அழைக்கப்படும் நவாஸ் ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் மருத்துவ சிகிச்சைக்காக இப்போது லண்டனில் உள்ளார். அவர் உடல் நலன் முன்னேற்றி மீண்டும் நாட்டுக்குத் திரும்பி தீவிர அரசியலில் ஈடுபடுவது சூரியன் மேற்கில் உதித்தால் மட்டுமே சாத்தியப்படும் என்றுஅவரது கட்சியினரே கருதுகின்றனர் என்று உள்ளூர் செய்தியாளர்களே கூறுகின்றனர்.
அவ்வகையில் பாகிஸ்தான் மக்கள் “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்“ என்றிருந்த சூழலில் இம்ரான் கானின் அரசியல் வளர்ச்சி சூடு பிடித்தது. ஒரு மாற்று அரசியல் சக்தியாக தெஹ்ரீக்-இ-இன்சாஃப் உருவெடுத்தது. கால் நூற்றாண்டுக்கு முன்னர் கட்சியை ஆரம்பித்த இம்ரான் கான் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2002ல் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 2018ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்து பிரதமரானார்.
ஆட்சி என்பது வெளியிலிருந்து பார்ப்பதற்கு ரோஜா மலர் படுக்கையைபோலிருந்தாலும், பதவியேற்ற அன்றே முட்கிரீடம் சூட்டப்படும். இதை மெல்ல மெல்ல உணரத் தொடங்கினார் இம்ரான் கான். அண்டை நாடுகளுடன் நல்லுறைவை மேம்படுத்துவேன் என்று தேர்தல் காலத்தில் கூறினாலும், அது யதார்த்தத்தில் எளிதல்ல என்பதை அனைவரைப் போலவே அவரும் உணர்ந்தார். ஏனென்றால் பாகிஸ்தானில் உண்மையாக ஆட்சி அதிகாரம் இராணுவத்தின் வசமே உள்ளது.
இராணுவத்தைப் பகைத்துக் கொண்டு அங்கு ஒரு சிற்றூழியர் நியமனத்தை கூடச் செய்ய முடியாது. அப்படியான சூழ்நிலையில் இந்தியாவுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புவேன் என்று அவர் கூறியது இராணுவத்தின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போலிருந்தது.
உள்நாட்டிலும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டார் இம்ரான் கான். அரசியலில் அவருக்கு பெரியளவில் எதிர்ப்பில்லை என்றாலும், நாட்டின் மேற்குப் பகுதியில் பலூசிஸ்தான் பிரச்சனை அவருக்கு கடும் சவாலாகவுள்ளது. நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு வீழ்ந்துள்ளது, புல்வாமா தாக்குதலை அடுத்து இராணுவத்திடமிருந்து நெருக்கடி என்று மும்முனைத் தாக்குதலை எதிர்கொண்டார். இத்துடன் உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா பிரச்சனை மற்றும் என்றுமுள்ளது போல அடிப்படைவாதிகளின் தொடரும் இம்சை.
பலூசிஸ்தான் பிரச்சனைக்கும் ஈழத் தமிழரின் பிரச்சனைக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே உள்நாட்டில் சிறுபான்மையினராக இருப்பவர்கள் மீதான தாக்குதல் மற்றும் வெறுப்புணர்ச்சி. நாட்டின் 46% நிலப்பரப்பு பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்தாலும், அங்கு வளர்ச்சி மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ளது. அவர்கள் பேசும் உள்ளூர் மொழியான பலோச் மொழி நசுக்கப்படுவது, அங்குள்ளவர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி அங்கிருக்கும் இளைஞர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய பங்கை மறுப்பது போன்ற செயல்பாடுகளை தொடர்ச்சியாக வந்த அரசுகள் முன்னெடுத்து அங்கு மனக்கசப்பை ஏற்படுத்தி பிரிவினை எனும் பேச்சுக்களை எழுப்பியது.
இந்நிலையில் தொடரும் அந்தப் பிரச்சனையை இம்ரான் கானால் கையாள முடியவில்லை என்று உள்ளூர் செய்தியாளர்களும் பன்னாட்டு அரசியல் அவதானிகளும் கூறுகின்றனர். சவுதி அரேபியா, அமெரிக்கா போன்று தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த நாடுகளும் தமது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தன. அண்மையில் பாகிஸ்தானின் இராணுவத் தளபதி சவுதி அரேபியா சென்ற போது அவருக்கு பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மானை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் அவர் துருக்கி பக்கம் சாய ஆரம்பித்தார். உள்நாட்டில் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட இம்ரான் கானுக்கு வெளிநாட்டில் ஆதரவைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிரிக்கு எதிரி நண்பன் எனும் கதையாக பாகிஸ்தான் என்றுமே சீனாவிடம் நட்பு பாராட்டி வந்துள்ளது.
இப்படியான இடியப்ப சிக்கலின் பின்புலத்தில் தான் இம்ரான் கானின் இலங்கைப் பயணம் அமைந்தது. இரு நாட்கள் கொழும்பிலிருந்த போது அவர் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரோ சீனாவின் முகவர் என்று எண்ணும் அளவுக்கு சீனாவின் கனவுத் திட்டமான `பெல்ட் அண்ட் ரோட்` திட்டத்தில் இலங்கையும் இணைந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார். அது இலங்கைகு பலனளிக்கிறதோ இல்லையோ பாகிஸ்தானுக்கு நலம் பயக்கும்.
இதேவேளை இலங்கையிலிருக்கும் முஸ்லிம் கட்சிகள், அதன் தலைவர்கள் மற்றும் மக்கள் அவரது வருகையை `இலவு காத்த கிளி` போல நோக்கியிருந்தனர். அவர் வந்தவுடன் நேரடியாக விமான நிலையத்திலிருந்து அலரி மாளிகைக்குச் சென்று `ஜனாசா எரிப்புப் பிரச்சனைக்கு` தீர்வை பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர்.
எனினும் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றக் கூட அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை. முஸ்லிம் கட்சித் தலைவர்கள் அவரை சந்திக்க நேரம் கேட்டு அது ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக அவர் வந்த அன்று தெரிவிக்கப்பட்டது. அவர் இலங்கையில் வந்திறங்கிய நாளில் கொழும்பில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இணைந்து சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அதில் முக்கியமானதொரு கோரிக்கை ஜனாசாக்களை புதைக்க அனுமதிக்க வேண்டும் என்பது.
இதனிடையே முஸ்லிம் இடதுசாரி அமைப்பு இம்ரான் கானுக்கு நேரடியாக கடிதம் ஒன்றை அவர் கொழும்பிலிருக்கும் அன்று எழுதி அதைக் கையளித்தது.
இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் கடிதம் ஆகியவை பாகிஸ்தான் தரப்பை இருமுறை சிந்திக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திடீரென முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான் கானை சந்திக்க 15 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில் என்ன கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பில் ஆதாரபூர்வமான தகவல் ஏதுமில்லை.
இந்தக் கூட்டத்தில் பங்குபெற்ற சிலருடன் நான் உரையாடிய போது அவர்களிடம் ஏமாற்றமே தெரிந்தது. ஜனாசாக்கள் அடக்கம் தொடர்பில் தான் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் உரையாடிய போது அதற்கு அவர்கள் சாதகமாக பதிலளித்தனர் என்று இம்ரான் கான் கூறியதாகத் தெரிவித்தனர். ஆனால் அந்த `சாதகம்`என்பதற்கு என்ன பொருள் என்பது கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கே வெளிச்சம்.
ஆனால் அவரை சந்தித்த முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகள், இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை பாகிஸ்தான் ஆதரிக்க வேண்டும் என்று கோரவில்லை.
அதேவேளை இலங்கை அரசு பாகிஸ்தானை இஸ்லாமிய நாடுகளுடன் பேசி அவர்களை தமக்கு சாதகமாக வாக்களிக்கக் கோருமாறு வேண்டுகோள் விடுத்ததாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் முஸ்லிம் இடதுசாரி முன்னணி அவருக்கு எழுதியுள்ள கடிதம் கவனிக்கத்தக்கது. அதில் அவர்கள் தெளிவாக ஒரு விடயத்தை கூறியுள்ளனர்.
“இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்தின் போராட்டம் நியாயமானது, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பொறுப்புக் கூறல் அவசியமானது. எனவே இலங்கையுடனான நட்பு தமிழ் மக்களுக்கு எதிரானதாக இருக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.“உள்நாட்டில் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுக்கு நீதி கிடைக்காதது இலங்கையில் இணக்கப்பாடிற்கு ஒரு தடையாக இருந்துள்ளது என்று அந்தக் கடிதத்தில் அவர்கள் இம்ரான் கானுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவர்களின் இந்தக் கருத்தை பெரும்பாலான முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அதை பாகிஸ்தானியப் பிரதமரிடம் கூறியிருக்க வேண்டும்.தமக்கு ஜனாசா தொடர்பில் நெருக்கடி ஏற்பட்ட போது தமிழ் மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்த முஸ்லிம் சமூகம், இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் ஆகிய குற்றசாட்டுக்கள் விஷயத்தில் தமிழர்களுக்கு முழு ஆதரவாக நின்றிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.
கடுமையான அழுத்தங்களுக்கு ஆளான நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அரசு அதிவிஷேச வர்த்தமானியைவெளியிட்டுள்ளது.
பலர் சொல்லி ஒரு முடிவை எடுப்பதை விட அரசே சிறுபான்மையினரின் சமூக, கலாச்சார, மத விஷயங்களில் தலையிடாமல் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். அது இலங்கைக்கு நற்பெயரையும், சமூகங்களுக்கு இடையே ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியிருக்கும்.
அதேவேளை ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள கடுமையான தீர்மானம் மற்றும் அதன் அழுத்தம் காரணமாகவே அரசு தனது கோவிட் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதே யதார்த்தமான உண்மை.
இம்ரானின் இலங்கை வருகை இலங்கை அரசுக்கு பல வகைகளில் உதவியுள்ளதே தவிர அங்குள்ள முஸ்லிம்களுக்கு எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்பதே யதார்த்தம்.
இம்ரான் கானின் விஜயத்தைப் பார்க்கும் போது அவர் சீனா மற்றும் தமது நாட்டின் பொருளாதார நலன்களையே முன்னெடுக்க வந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.