மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நேற்று 25ம் திகதி கனடா வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:-
அங்கு கனடிய வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான றொப் ஒலிவ்பண்ட கனடாவின் சார்பில் பின்வரும் கருத்தை வெளியிட்டார். “உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையைக் கனடா வரவேற்கிறது. ஆனால் தீர்மானத்திற்கான ஆதரவை மீளப் பெறும் இலங்கை அரசின் முடிவு எமக்கு வருத்தமளிக்கிறது.
மீளிணக்கம், பொறுப்புக் கூறல் ஆகியவற்றுக்கான உள்நாட்டு நடைமுறைகள் தொடர்ந்தும் பயனளிக்கத் தவறிவருகின்றன. தப்பிப்பிழைத்தோர், உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உறுதியாக இருப்பதுடன், அசாத்தியமான ஆபத்துக்களின் மத்தியிலும் சான்றுகளை வழங்க முன்வந்துள்ளார்கள். அவர்களது தாங்குசக்தியையும், துணிவையும் நாம் கண்டுணர்கிறோம்.
மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்த உயர் ஆணையாளரின் கவலை எமக்கும் உள்ளது. துரதிஷ்டவசமாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இது வன்முறைக்கும், மோதலுக்கும் மீண்டும் வழிவகுக்கலாமென்பது வருத்தத்திற்குரியது. குடிசார் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை, குடிசார் சமூக செயற்பாட்டுக்கான வெளி, மனித உரிமைகளுக்கான மதிப்பு, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகிய அனைத்தும் வலுவிழக்கச் செய்யப்படுகின்றன. முஸ்லிம்களின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது, தமிழர்களின் நினைவேந்தல்கள் மீதான கட்டுப்பாடுகள் என்பன நாட்டில் பிளவுகளை மேலும் அதிகரிக்கும். இலங்கையை நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதும், மீளிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதும் பேரவைக்குள்ள கடமையெனக் கனடா நம்புகிறது.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்துடன் ஆக்கபூர்வமான முறையில் ஈடுபாட்டைப் பேணுமாறும், மனித உரிமை நிபுணர்களுக்கு விடுத்த நிலையான அழைப்புகளை மதித்துச் செயற்படுமாறும் இலங்கையை ஊக்குவிக்கிறோம்.” இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது.