தேசப்பற்று மிகுந்த பிள்ளைகயாக நாம் இருக்க வேண்டும் என்பதையே நமது சமூகம் எதிர்காலத் தலைமுறையிடம் எதிர்பார்ப்பதாக ஈழத்து எழுத்தாளரும் ஈழத் தமிழ் கலை பண்பாட்டுக் கழகத்தின் தலைவருமான தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ரொரென்ரோ மனியத நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரி வித்தியாலயத்தில் நேற்று (25.02.2021) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
“போராலும் சமூக நெருக்கடிகளால் மிகவும் பாதிக்கப்பட்ட அழகாபுரிக் கிராமம், ஈழப் போராட்டத்திற்கு செய்த பங்களிப்பும் இங்கே நினைவுரக்தக்கது. போரால் நிர்கதியாக்கப்பட்ட இக் கிராமம் மீண்டெழுந்து வருகின்றது என்பதை இப் பாடசாலையில் கற்கும் மாணவர்களின் முகங்களை பார்க்கின்ற போது திடமாக உணர முடிகின்றது.
மிகவும் பொருத்தமான ஒரு பாடசாலையை – பிரதேசத்தை தெரிவு செய்து, ரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் உதவியை ஒருங்கிணைப்பு செய்திருக்கிறோம் என்பது மிகவும் ஆறுதல் அளிக்கிறது.
பாடசாலை பரிசளிப்பு விழாவை நடாத்த வேண்டும் அதற்கு உதவி தேவை என்று அதிபர் கோரிய போது, அத் தகவலை ரொன்ரோ மனித நேயக் குரல் அமைப்பின் தலைவரும் எழுத்தாளரும் கனடா உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியருமான நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களிடம் கேட்டுச் சில மணித்தியாலங்களிலேயே அங்குள்ள தனது செயற்பாட்டு நண்பர்களுடன் பேசி உதவியை பெற்று அனுப்பியிருந்தார்.
அவ்வளவு வேகத்துடனும், அக்கறையுடனும் இந்த உதவியை அனுப்பித் தந்த எழுத்தாளர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு இப் பாடசாலை சார்பிலும் ஈழத் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் சார்பிலும் நன்றியையும் வாழ்த்தையும் இந்த இடத்தில் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
106 மாணவர்களுக்கும் ஏதோ ஒரு கற்றல் உபகரணமானவது கிடைக்க வேண்டும் என்று விரும்பிய அதிபர், இந்த மேடையில் மாணவர்களின் கலைச் செயற்பாடுகளின் போது, அவர்களைப் போலவே தன்னையும் உணர்ந்து வெளிப்பாடு செய்வதையும் அவதானித்தேன். இப் பிரதேசத்திற்கும் பாடசாலைக்கும் பொருத்தமான, ஆரம்ப பாடசாலை ஒன்றுக்கு மிகவும் பொருத்தமான சிறுவர்நேயம் மிக்க அதிபர் என்பதையும் உணர்ந்தேன்.
பண்பாடு மீதும் மண் மீதும் தேசம்மீதும் பற்றுக் கொண்ட செயற்திறன் மிக்க மனிதர்களாக நீங்கள் உருப்பெற வேண்டும் என்பதையே எமது எதிர்கால தலைமுறையினராகிய உங்களிடம் ஈழத் தமிழ் சமூகம் எதிர்பார்த்து நிற்கிறது… என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.