சர்வதேச மட்டங்களில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தனியாக கலந்து வருவது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத்தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைக்கூறியுள்ளார்.
இக் கூட்டத்தில் சுமந்திரன் சர்வதேச விடயங்களை தனியாக கையாண்டு வருவது தொடர்பில் கூட்டத்திலிருந்த பலரால் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் இக்காலப்பகுதியில் சுமந்திரன், சர்வதேச ராஜதந்திரிகளுடன் தனியான சந்திப்பை மேற்கொண்டமை தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர் தேசத்திலுள்ள மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளர் S.V கிருபாகரன், சுமந்திரனின் சர்வதேச செயற்பாடுகள் தொடர்பில் அண்மையில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் எதிர்வரும் காலங்களில் சுமந்திரனின் இச் செயற்பாட்டை அனுமதிக்க முடியாதென இன்று வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச பிரதிநிதிகள் எமது சார்பில் ஒருவர் வருவதையே விரும்பவதாக சுமந்திரன் தெரிவித்ததை கூட்டத்தில் இருந்தவர்கள் நிராகரித்துள்ளனர்.
இதேவேளை சர்வதேச விவகாரங்களை கையாளுவதற்கு மூவரடங்கிய குழு நியமிப்பது என இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.