மன்னார் நிருபர்
28-2-2021
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சாசனாரக்ஷக சபையின் ‘யதிவர அபிமன் உபகார விழா – 2021’ கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (2021.02.27) பிற்பகல் இடம்பெற்றது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்ற விழாவில் ஹம்பாந்தோட்டை சாசனாரக்ஷக சபையின் ஏழு பிக்குமார்களுக்கு கௌரவ பிரதமரின் கரங்களினாலும் ஏனையோருக்கு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட விசேட அதிதிகளினாலும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சுமார் நான்கு ஆண்டு காலங்களாக சாசனாரக்ஷக சபைக்காக செய்த சேவையை பாராட்டி மஹாசங்கத்தினருக்காக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்ட சாசனாரக்ஷக சபை மற்றும் மாவட்ட செயலக காரியாலயம் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
‘யதிவர அபிமன் உபகார விழா’வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சாசனாரக்ஷன பல மண்டலயவின் கடமைகளில் ஈடுபட்டு தமது சேவை காலத்தை நிறைவுசெய்து நான்கு ஆண்டு காலமாக அறநெறி பாடசாலை மாணவர்களுக்காக செய்த அர்ப்பணிப்பை பாராட்டுவது எமது கடமையும் பொறுப்பும் ஆகும். அவ்வாறு பாராட்டுவதற்கான சந்தர்ப்பமாக இத்தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். உண்மையில் அறநெறி பாடசாலைகளில் கல்வி புகட்டும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பது அதற்கான எவ்வித வேதனங்களும் இன்றியாகும். இக்கடமையில் ஈடுபடும் பலரும் வாரத்தில் ஐந்து தினங்களும் பாடசாலைகளில் பணியாற்றும் அதேவேளை தமது விடுமுறை தினத்தில் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனை நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊக்குவிக்க வேண்டும். அறநெறி பாடசாலைகள் மூலம் குழந்தைகளை நல்ல குடிமக்களாக மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் சிறைச்சாலைகளைப் பார்த்தால், பெரும்பாலான சிறைச்சாலைகள் ஒருபோதும் அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத மக்களாலேயே நிரம்பியுள்ளன.
அறநெறி பாடசாலைக்கு செல்லும்போது பிள்ளைகள் ஒழுக்கமுடையவர்களாகவும், மதம் மீதான ஈர்ப்பை கொண்டவர்களாகவும் மாறுவதுடன், இது சமுதாயத்தில் ஒழுக்கத்தை உருவாக்குகிறது என்ற நம்பிக்கையில் தான் ஒரு நாட்டை நீதியுள்ள சமூகமாக கட்டியெழுப்ப முடியும்.
பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும் குழந்தைகளை சரியான பாதையில் வழிநடத்துவதற்கும் பிக்குமார் செய்த தியாகங்களை நாங்கள் எப்போதும் பாராட்டுகிறோம்.
நம் நாட்டில் பௌத்த அறநெறி பாடசாலைகள் நிறுவப்பட்ட 125ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கஸகல ரஜமஹா விகாரையில் ஒரு விழா நடைபெற்றது என்பது உங்களுக்குத் தெரியும். மேலும், மிஷனரி கல்வி மூலம் நமது பௌத்த கல்வி அழிக்கப்படுவதைத் தடுக்க, சாதாரண மதகுருக்களின் தேசபக்தி குழுக்கள் அறநெறி பாடசாலைகளைத் தொடங்கின.
ஒல்கட் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய 1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03ஆம் திகதி இலங்கையின் முதலாவது அறநெறி பாடசாலையாக காலி விஜயானந்த அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அறநெறி பாடசாலைகளை நடத்திச் செல்வதற்கு மஹா சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் செய்யும் அர்ப்பணிப்பை நாம் எப்போதும் பாராட்டுகிறோம்.
ஒரு மாவட்டம், ஒரு மாகாணம் மற்றும் ஒரு நாட்டிற்குள் மதம் மீது ஈர்ப்பு கொண்ட மக்களை நாம் கட்டியெழுப்புவோமாயின், அந்த மாவட்டம், மாகாணம் அல்லது நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் திறன் நமக்கு உண்டு.
அதனால் அறநெறி பாடசாலைகளிலோ, ஞாயிற்றுக்கிழமைகளிலோ அல்லது பௌர்ணமி நாட்களிலோ நாம் அனைத்து மதங்களிலும் மத நடவடிக்கைகளை மேற்கொண்டால், மக்களை அவ்வழியில் வழிநடத்துவதன் மூலம் குற்றங்களை குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். சிறைச்சாலைகள் நிரம்புவது நிறுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.
கிரிவெஹெர ரஜமஹா விகாராதிபதி, ருஹுணு மாகம்பத்துவே பிரதான சங்கநாயக்கர் கொபவக தம்மிந்த தேரர், ஹம்பாந்தோட்டை மாவட்ட சாசனாரக்ஷக சபையின் கௌரவ தலைவர் அமரபுர சிறிசத்தம்ம யுக்திக மாத்தறை மஹா நிகாயவின் பதில் மஹாநாயக்கர் உயன்வத்தே சத்தாராம தேரர் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட சாசனாரக்ஷக சபையக் கௌரவ பிரதான பதிவாளர் கெந்தகஸ்மங்கட ஸ்ரீ ரத்னாராமாதிபதி கலபிடிகல பிரேமதரன தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் இதில் பங்கேற்றனர்.
மேலும் கௌரவ அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக, பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் ராஜபக்ஷ, உபுல் கலப்பத்தி, தென் மாகாண ஆளுநர் விலி கமகே, தென் மாகாண தலைவர் சோமவங்ஷ கோதாகொட, ஹம்பாந்தோட்டை நகர பிதா எராஜ் ரவீந்திர, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் டப்ளிவ்.எச்.கருணாரத்ன உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.