பூமியை பெண் என்கிறோம். நிலத்தை பெண் என்கிறோம். கடலைப் பெண் என்கிறோம். இந்த உலகின் அற்புதங்கள் எல்லாமே பெண்ணாகத்தான் இருக்கின்றது. உலகின் எல்லா சமூகங்களிலும் பெண்தான் முக்கிய அடையாளம்.மொழி தாய் வழியாகத்தான் கடத்தப்படுகிறது. அதனால்தான் எல்லோரும் தமது மொழியை தாய் மொழி என்கிறார்கள். எல்லாவற்றின் ஊற்றாகவும் சிருஷ்டிப்பு கர்த்தாகவும் பெண் இருப்பதனால்தான் இன அழிப்பாளர்கள் பெண்களை இலக்கு வைக்கிறார்கள். ஈழத்தில் பெண்கள் மனதால் மாத்திரமின்றி உடல் வலிமையாலும் சாதித்தவர்கள். இலக்கியங்களால் மாத்திரமின்றி இலட்சியங்களாலும் ஈழ விடுதலைப் போராட்டத்தை நிமரச் செய்தவர்கள் ஈழப் பெண் போராளிகள். அப்படி சிருஷ்டிக்கப்பட்ட ஈழ நிலத்தில் உலக பெண்கள் நாள் மிகவும் சிறப்பானதாகவும் அர்த்தமுடையதாகவும் கொண்டாடுவது வழக்கம்.
உலகில் பெண்களை படையில் கொண்ட ஒரு இயக்கத்தை கட்டி எழுப்பியவர்கள் ஈழத்தவர்கள். இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன், ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு முக்கியத்துவத்தை கொடுத்தார். பெண் வலிமையானவள், அவளே ஒரு சமூகத்தை உருவாக்குகிறாள் என்பதை நன்கு புரிந்து கொண்ட தலைவர் பிரபாகரன், உலகே திரும்பிபார்க்கும் அளவிற்கு ஈழப் பெண்களின் வல்லமைகளை எடுத்துக் காட்டினார். முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி, முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கஜற்கன்னி, மேஜர் சோதியா, கப்டன் வானதி, அன்னை பூபதி என்று தம் உயிராற்றலால் தேசத்தை வரைந்நதவர்கள் ஈழப் பெண்கள்.
வீடுகளுக்குள் அடுப்படிக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள், பெரும் சரித்திர நாயகர்களாகியது ஈழத்தில்தான். ஆண் தளபதிகளுக்கு நிகரான பெண் தளபதிகளும், அரசில் போராளி ஆளுமைகளாக பெண் போராளிகளும் பொறுப்பாளர்களும் ஈழச் சமூகத்தையே வழிநடத்திய காலம் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகின்றன. இன்று சிங்கள இராணுவத்தின் கொடும் ஆக்கிரமிப்பு சூழலில் பல வகையிலும் பெண்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். இராணுவத்தினர் ஈழப் பெண்களை மணந்து அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் சிங்களவர்களாக்க பல்வேறு எத்தனங்களை மேற்கொள்ளுகின்றனர். சோதனைச்சாவடிகளில் நின்ற இராணுவத்தினர் சிலர் குடும்ப உறுப்பினர்களாகியுமுள்ளனர்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வேலை வாய்ப்பு மூலம் பல ஆயிரம் ஈழப் பெண்கள் இராணுவப் பொறிக்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். தோட்டங்களில் வேலை, முன்பள்ளிகளில் வேலை என்று உள்ளீர்க்கப்பட்டவர்களுக்கு தற்போது இராணுவ பயிற்சியும் இராணுவச் சீருடையும் வழங்கப்படுகின்றது. வங்கிக் கடன்களையும் நுண் கடன்களையும் அவர்களைப் பெற வைத்துவிட்டு, இன்று அவர்கள் வேலையை துறக்க முடியாதவர்களாய் தெற்கு இராணுவ முகாங்களில் ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளை வீடுகளில் தவிக்க விட்டுவிட்டு இராணுவச் சீருடைகளுடன் காடு மலைகளில் ஆயுதப் பயிச்சி எடுக்கிறார்கள்.
ஈழத்தில் இன்றுள்ள பல வைத்தியசாலைகளில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு பெண்கள் இறப்பது அதிகரித்துவிட்டது. குழந்தைப் பேறின் போது அவர்களின் திடீர் மரணங்களை எதிர்த்து போராட்டங்களும் நடந்திருக்கின்றன. அத்துடன் பல்வேறு பெண்கள் கருப்பை பாதிப்பு நோய்களுக்கு ஆளாகி கருப்பை நீக்கப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. மகிந்த ராஜபக்சவின் காலத்தில் கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாயகருத்தடை செய்யப்பட்ட நிகழ்வுகள் உலகமே அறிந்தது. அப்படியிருக்கையில், பெண்களின் மரணங்களும், கருப்பை நோய்களும் எதேர்ச்சையானவை என்று எப்படி எடுப்பது?
இன்று ஈழத்தில் மற்றொரு சிக்கலாக நீள்வது பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கைப் போராட்டம் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் குடும்ப சிதைவுகள் முறிவுகளுக்கு எதிராக பல்வேறு உளவியல் நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டன. வீட்டுக்கு வீடு பல்வேறு தொண்டர்கள் பயணங்களை செய்து உரையாடல்களை நடாத்தி, சின்னச் சின்னப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன. போருக்குப் பிந்தைய சூழல், சிக்கலான அரசியல் நிலவரம், இராணுவ ஆக்கிரமிப்பு என்று இன்னோரன்ன காரணங்களால் ஈழத்தில் குடும்பங்கள் சிதைகின்ற நிலமை அதிகரித்துச் செல்கின்றது.
ஏற்கனவே போரினால் லட்சம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். ஒரு சிறுபான்மை இனத்தின் பெண்கள், பெரும்பான்மையாக விதவைகளாக்கப்பட்டுள்ளார்கள் என்றால், அந்த இனம் எப்படி இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். குறிப்பாக அந்த இனத்தின் பெண்கள் எவ்வாறு இன அழிப்பில் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். போரினாலும் குடும்ப முறிவுகளாலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பெருகி விட்டன. விடுதலைப் புலிகள் காலத்தைப் போல மறுமணங்களோ, அது தொடர்பான விழிப்புணர்களோ இன்று இல்லை.
இத்தனை படிகளையும் தாண்டி வாழ்கின்ற ஈழப் பெண்கள் இன்னொரு பாரிய குழியில் சிக்கி வீழ்கின்றனர். நுண்கடன் என்ற பெரும் பூதம் ஈழப் பெண்கள் பலரது வாழ்க்கையை சிதைத்து வருகிறது. கிளிநொச்சியில் ஒரு ஆசிரியரின் மனைவி, நுண்கடன்களைப் பெற்றார். அதனை செலுத்த முடியாமல் தனது மூன்று பிள்ளைகளை விட்டுவிட்டு, களவாக முஸ்லீம் நாடோன்றிற்கு தப்பிச் சென்றார். அந்த ஆசிரியர் இன்னொரு திருமணம் செய்து, மீண்டும் அந்தக் குடும்பத்தையும் பிரிந்து தனது வேலையையும் இழந்தார். அந்த மூன்று குழந்தைகளையும் கண்கொண்டு பார்க்க முடியாது.
வடக்கு கிழக்கில் நுண்கடன் தொல்லைகளால் கிட்டத்தட்ட, நூற்றைம்பதிற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களில் பெண்கள்தான் கூடுதலானவர்கள். நுண்கடன்களை இரத்து செய்வதாக இலங்கை அரசு அறிவித்தபோதும், நுண்கடன் நிறுவனங்கள் மூடப்படவில்லை. தொடர்ந்தும் அவை இயங்குகின்றன. தொடர்ந்தும் பல வீட்டுப் பெண்களின் வாசல்களில், மாலை வேளைகளில் நுண்கடன் கொடுப்பவர்கள் நிற்கிறார்கள். பாலியல் இலஞ்சம் கேட்டு, பெண் தலைமைத்துவ குடும்பங்களை துன்புறுத்தி அழிக்கின்ற செயற்பாடும் இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது.
இத்தனை அவலங்களையும் ஈழநாடு அனுபவிக்கின்றபோதும், ஈழத்தில் இரண்டு நம்பிக்கை பெண் முகங்கள் உள்ளன. ஒன்று கல்வியில் முன்னேறுகின்ற வீறு நடைபோடுகின்ற மாணவிகள். மற்றையவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காய் போராடும் ஈழத் தாய்மார்கள். தன்னுடைய பிள்ளைக்காகவும் தன்னுடைய கணவருக்காகவும் ஈழத்து நகரங்களில் போராடும் பெண்கள்தான், இன்றைய ஈழப் பெண்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் நீதிக்காகவும் மாத்திரமின்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் நீதிக்காகவும் விடுதலைக்காகவும் அவர்கள் போராடுகின்றனர். தமிழர் தலைமைகள் சிதைந்து, வழிமாறியுள்ள காலத்தில் இத் தாய்மாரே நீதியை நோக்கி ஈழத்தை இழுத்துச் செல்லுகின்றனர். இனப்படுகொலைப் போரின் நீதியை வேண்டும் இந்த ஈழ முகங்களும் கல்வியில் வீறுநடை போடும் பெண்களும் போரினால் காயப்படுத்தப்பட்ட எம் தேசத்திற்கு தம் சிந்தனையாலும் முகங்களாலும் உயிருட்டுகின்றனர்.
கிளிநொச்சியிலிருந்து தீபச்செல்வன்