இலங்கையில், கொழும்பு தெஹிவளை பிரதேச செயலகத்தினால், ஆண்டு தோறும் கலை இலக்கியத்துறை சார்ந்தவர்களை தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் தெஹிவளை ‘ஸ்ரீ விபூதி விருது’ வழங்கும் தேர்வில், நாடறிந்த எழுத்தாளர் திரு க. கோபாலப்பிள்ளையினால் எழுதப்பெற்ற ‘அசை’ என்னும சிறுகதைத் தொகுப்பு சிறந்த நூலாக தேர்ந்தெடுக்கப் பெற்று விருது வழங்கப்பெற்றது.
இலங்கையின் மேல் மாகாணத்தை முழுமையாக உள்ளடக்கிய கலை இலக்கிய படைப்பாளிகளின் ஆக்கங்கங்களைப் பரிசீலித்து அந்த தேர்வில் க. கோபாலப்பிள்ளை அவர்களின் 2வது சிறுகதைத் தொகுதியை சிறந்த இலக்கியப் படைப்பாகத் தேர்ந்தெடுத்து, 24-02-2021 அன்று கொழும்பு-7 இல் அமைந்துள்ள ‘நாதா அரங்கில் இந்த ‘ஸ்ரீ விபூதி’ விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு அதில் எமது எழுத்தாளர் க. கோபாலப்பிள்ளை அவர்கள் கௌரவிக்கப்பெற்றார்.
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை, ஆறுகால் மடத்தை பூர்வீகமாகக் கொண்ட திரு கோபாலப்பிள்ளை, தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் – பெரியபுலம், மெதடிஸ்த பள்ளியிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், பயின்று, பின்னர் யாழ்ப்பாணம் பல் தொழில் நுட்பக் கல்லூரியிலும், பயின்று அரச பணியில் இணைந்தார்.
1973ம் ஆண்டு இலங்கைக் கடற்படையின் தலைமை அலுவலகத்தில் தட்டெழுத்தாளராகவும் பின்னர் 1974ம் ஆண்டு யாழ் மேல் நீதி மன்றத்தில் சுருக்கெழுத்தாளராகவும், தொடர்ந்து கொழும்பு மேல் நீதி மன்றம், ஊர்காவற்றுறை – சாவகச்சேரி – யாழ்ப்பாண நீதி மன்றம் ஆகியவற்றிலும் பணியாற்றிய பின்னர் 1989ம் ஆண்டு முதல் 2008 வரை இலங்கைப் பாராளுமன்றத்தில் ஹான்சாட் பிரிவிலும் இணைந்து படிப்படியாகப் பதவி உயர்வுகளைப் பெற்று, இறுதியில் ஹான்சாட் பிரிவின் பிரதிப் பதிப்பாசிரியராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றார். இவ்வேளையிலும், திரு கோபாலப்பிள்ளை, சிறந்த இலக்கியவாதி மற்றும் சிறுகதை எழுத்தாளர் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.
தொடர்ந்து இலங்கைப் பிரதமர் அலுவலகத்திலும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலும் இவரது சேவைக்கான நீடிப்பு வழங்கப்பெற்று அங்கு பாராட்டுப்பெறும் வகையில் பணியாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது, கொழும்பில் தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்து வரும் இவருக்கு உலகெங்கும் வாழும் அவரது வாசகர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர் ஆகியோர், தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றார்கள்.
-கனடா மொன்றியால்- வீணைமைந்தன்