சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
இலங்கை ஜனநாயக நாடு அல்ல, அது ஒரு இனநாயக நாடு என்று புதிய அறிக்கை ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது.
அங்கு தமிழர்களின் நிலங்கள் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையின மக்கள் வலிந்து குடியேற்றப்படுகின்றனர் என்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஓக்லாந்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
நாட்டிலுள்ள மக்கள் தொகையின் விகிதாசாரத்தை மாற்றும் வகையில், தமிழ் மக்களின் நிலங்களில் வலிந்த சிங்கள குடியேற்றம் முன்னெடுக்கப்படுகிறது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை முழுவதும் சிங்கள மற்றும் பௌத்த மதத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலங்களை அபகரிக்க இராணுவம் மற்றும் அரசின் இதர அமைப்புகள் மூலம் திட்டமிட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இந்த அறிக்கை வெளியாகியுள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்த அறிக்கையை முழுமையாக வெளியிடும் முதல் ஊடகம் என்பதில் `கனடா உதயன்` பெருமை கொள்கிறது.