இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றது. அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 500 ஐயும் தாண்டி அபாயகரமான மண்டலத்தை நோககி நகர்ந்து செல்லுகின்றது. சிலவேளைகளில் இந்த எண்ணிக்கை ஓரிரு வாரங்களில் ஆயிரமாக அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றும் வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக வட மாகாணத்தில் பணியாற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பலர் மாகாணத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதனால் நேற்றை சிவராத்திரி விழாவின் பொது எச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறும் மக்களை வேண்டிக் கொண்டனர்.
இதேவேளை இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் இற்றை வரையும் 7 இலட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதோடு, தொடர்ந்தும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் அசிரத்தை மற்றும் கவனயீனமாக நடந்து கொள்ளும் போக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ரயில் மற்றும் பஸ் பொதுப்போக்குவரத்து வாகனங்களிலும், பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடிய சந்தைகள், அங்காடி நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களிலும் இந்நிலைமையைப் பெரிதும் அவதானிக்க முடிகிறது. அதாவது கொவிட் 19 தொற்று பரவுதல் தவிர்ப்புக்கான முக்கிய சுகாதார வழிகாட்டல்களாக விளங்கும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகழுவதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதில் அக்கறையில்லாத சுபாவத்தைக் காண முடிகின்றது.
இது ஆரோக்கியமானக நிலைமை அல்ல. இதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கொவிட் 19 என்பது வேகமாகப் பரவக் கூடிய ஒரு வைரஸ் தொற்று நோய். தற்போது இந்நாட்டில் இத்தொற்றின் பரவுதல் குறைவடைந்து வர அரசாங்கம் முன்னெடுத்து வரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளே பிரதான காரணங்களாகும். அத்தோடு இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளது. என்றாலும் இலங்கையிலோ உலகின் எந்தவொரு நாட்டிலுமோ இத்தொற்று முற்றாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. ஒழிக்கப்படவுமில்லை. அதனால் சந்தர்ப்பம் கிடைக்கப் பெறுமாயின் இத்தொற்று மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் காணப்படவே செய்கின்றன.
இது தொடர்பான அனுபவத்தை உலகின் பல நாடுகள் பெற்றுள்ளன. இத்தொற்றின் முதலாம் அலையைக் கட்டுப்படுத்திய சில நாடுகள் சுகாதார வழிகாட்டல்களில் தளர்வுப் போக்கைக் கடைப்பிடித்தன. அதனால் இவ்வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்கியதோடு அந்நாடுகளின் இயல்பு வாழ்வொழுங்கையைப் பெரிதும் பாதித்து முடக்க நிலைக்கும் இட்டுச் சென்றது.
இவ்வாறான அனுபவம் இலங்கைக்கும் உள்ளது. இந்நாட்டில் கடந்த வருடம் மார்ச் மாத நடுப் பகுதி முதல் இத்தொற்றின் முதலாம் அலை பதிவாகத் தொடங்கியதும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. அதன் பயனாக ஏப்ரலின் பின்னர் இத்தொற்றின் பரவுதல் பெருவீழ்ச்சி நிலையை அடைந்தது. அதனைத் தொடர்ந்து கட்டம் கட்டமாக நாட்டில் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் ஜுலை, ஓகஸ்ட், செப்டெம்பர் மாதமாகும் போது கொவிட்19 தொற்றைத் தவிர்ப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களைப் பொருட்படுத்தாத நிலைமை மக்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்தது.
இதன் விளைவாக ஒக்டோபர் முதல் வாரத்தில் கொவிட்19 தொற்றின் இரண்டாம் அலை தலைதூக்கியது. அது முழு நாட்டிலும் வேகமாகப் பரவியது. அதாவது முதலாம் அலையில் பரவாத பிரதேசங்களைக் கூட சென்றடைந்தது. அத்தோடு முதலாம் அலை சுமார் ஆறு மாதங்கள் நீடித்த போதிலும் சுமார் நாலாயிரம் பேர் தான் இத்தொற்றுக்கு உள்ளாகினர். 13 பேர் உயிரிழந்தனர்.
ஆனால் இரண்டாம் அலையில் இற்றை வரையும் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். சுமார் 500 பேர் உயிரிழந்துமுள்ளனர். அப்படியிருந்தும் இத்தொற்றுக்கு உள்ளாவதும், இத்தொற்றினால் உயிரிழப்பதும் இன்னும் முற்றாகக் கட்டுப்பாட்டு நிலையை அடையவில்லை.
அதன் காரணத்தில் தற்போதைய சூழலில் இத்தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைவடைந்தாலும் அது எந்த வேளையிலும் மீண்டும் தலைதூக்கி தீவிரமாகப் பரவக் கூடிய அச்சுறுத்தல் நிலவவே செய்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
மேலும் தற்போது வழங்கப்படும் கொவிட்19 தடுப்பூசியானது அதனைப் பெற்றுக் கொள்பவரின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவ்வைரஸின் தொற்று ஏற்படுமாயின் உடலில் அதன் தாக்கத்தை குறைக்கும். ஆனால் இவ்வைரஸ் தொற்றுக்குள்ளாவதையோ, அதன் பரவுதலையோ இத்தடுப்பூசி கட்டுப்படுத்தாது.
அதனால்தான் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்பவர்களும் கூட இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் பேணிக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
எனவே இலங்கையில் கொரோனர்த் தொற்று சிறிது சிறிதாக அதிகரித்து அதிக இறப்புக்களை எமது மக்கள் சந்திக்க இடம் கொடுக்காமல் பொதுமக்கள் தொடக்கம் அரசியல்வாதிகள் மற்றும் வைத்திய அதிகாரிகள், வைத்தியப் பணியாளர்கள்,தாதியர்கள் ஆகியோர் பார்த்துக் கொள்வது அவசியமாகின்றது அது தொடர்பில் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் ஒவ்வொருவரும் செயற்படுவது இன்றியமையாததாகும். அப்போதுதான் இத்தொற்று மீண்டும் இலங்கையில் தலைதூக்க முடியாத நிலைமை ஏற்படும்.
கொழும்பிலிருந்து நவாஸ்