தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தில் முழு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்தவகையில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் முகம் பயன்படுத்தாதவர்களுக்கு முகவரி கொடுத்து 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
குறிப்பாக பயணிகளே இன்றி வெற்று ஆட்டோவை தனியாக ஓட்டிச்சென்றவரை மறித்து வலுக்கட்டாயமாக அபராதம் விதித்து தாங்கள் சின்சியராக செயல்படுவது போல மாநகராட்சி ஊழியர்கள் காட்டிக் கொண்டனர்.
அதே நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முககவசம் அணிந்து பங்கேற்க வேண்டும் என்று திமுக தலைவர் முகஸ்டாலின் அறிவுறுத்தியிருந்த நிலையில் காட்பாடி அடுத்த திருவலத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுகணக்கான தொண்டர்களில் ஒருவருமே முககவசம் அணியவில்லை, சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை அவர்களில் ஒருவருக்கு கூட அபராதம் விதிக்க சின்சியரான அதிகாரிகள் அங்கு இல்லை..!
நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களுக்கு கொரோனா ஏற்படாது என்பது கூட்டத்தினரின் நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் கூட்டத்தில் ஒரு சூப்பர் ஸ்பிரெட்டர் இருந்தால் போதும், அவர் மூலம் அடுத்த சில நாட்களில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
எனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்களும், தொண்டர்களும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பிரச்சாரம் மேற்கொள்வது சமூகத்துக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று சுகாதாரதுறையினர் அறிவுறுத்துகின்றனர். காரணம் கொரோனாவுக்கு பிரபலம், வி.ஐ.பி எல்லாம் தெரியாது, வரும் முன் காப்பதே சாலச்சிறந்தது.