தமிழீழ விடுதலைப்புலிகள் இயகத்தின் உத்தியோகபூர்வமான தொலைக்காட்சிச் சேவையான நிதர்சனம் ஊடகத்தின் ஆரம்பகால பொறுப்பாளராக பணியாற்றி தலைவர் பிரபாகரன் அவர்களின் நன் மதிப்பைப் பெற்ற பரதன் ( இராசநாயகம் பரதன் ) இலண்டன் மாநகரில் மாரடைப்பால் காலமானார் என்ற சோகமான செய்தியை எமது வாசக அன்பர்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்
யாழ்ப்பாணம் திருநேல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பரதன் அவர்கள் இலங்கையின் மூத்த எழுத்தாளரும் யாழ்ப்பாணம் பரமேஸ்வரக் கல்லூரியின் பிரயோக கணிதம் உயர் கணிதம் ஆகிய பாடங்களின் ஆசிரியருமான சு. இராசநாயகம் அவர்களின் சிரேஸ்ட புதல்வனும் இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘ஈழநாடு பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியருமான பாரதி இராசநாயகத்தின் சகோதரரும் ஆவார்.
நிதர்சனம் தொலைக்காட்சியின் வளர்ச்சியில் பரதனுக்கு பெரும் பங்கு உண்டு. பின்னாளில் கவிஞர் புதுவை இரத்தினதுரை போன்ற கலைத்துறை ஜாம்பாவான்களோடும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘கலைப் பண்பாட்டு இயக்கத்தின் முக்கிய செயற்பாடுகளிலும் கரம் கோர்த்து செயற்பட்டவர் என்பதும்,யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் இங்கு குறிப்பி;டத்தக்கது.
இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக லண்டனில் வசித்து வந்தார்.
60 வயதான பரதன் வழமையாகச் செல்வது போன்று லண்டனில் நடைபயிற்சிக்கு சென்ற போது மாரடைப்பால் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரின் பிரிவால் துயரமடைந்திருக்கும் அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் அனைவருக்கும் கனடா உதயன் மற்றும் நண்பன் இணையத்தளம்; ஆகியன ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றன.