-தீபச்செல்வன்
ஸ்ரீலங்கா அரசாங்கம் மிகப் பெரிய குற்றமான அரசு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையினால் மாத்திரமின்றி, அதற்குப் பிந்தைய இனக்குமுறைச் செயல்களினாலும் தான் பெருத்தவொரு குற்றம் மிக்க அரசு என்பதை இந்த உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்கா அரசு இழைத்த இனப்படுகொலை குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்தில் அவ் அரசை நிறுத்த வேண்டும் என்று தமிழர்கள் போராடி வரக் கூடிய நிலையில், இன்னுமும் குற்றம் இழைக்கிற ஒரு அரசை குறித்து இந்த உலகம் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறது?
கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி இரவு வடக்கு மாகாணத்தில் திடீரென ஒரு மின்தடை ஏற்பட்டது. கல்விப் பொதுத்தராதார பரீட்சைகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இந்த மின் தடை ஏற்பட்டது. மாலை ஐந்து முப்பது தொடக்கம் இரவு ஒன்பரை வரை இந்த மின்தடை நீடித்தது. வடக்கு மாகாணத்தில் பரீட்சை எழுதுகின்ற மாணவர்களை பாதிக்கும் வகையில்தான் இந்த மின்தடை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதாக சமூக ஊடங்களில் விமர்சனங்கள் எழுதப்பட்டன. அதற்கு மறுநாள் இன்னொரு கதை உலாவியது. மின் தடை இருந்த சமயத்தில் வடக்கு மாகாணத்தின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக ஒரு செய்தி அதிகாரபூர்வமற்ற ரீதியில் உலாவியது.
அதற்குச் சில நாட்களின் முன்னர் வடக்கு மாகாண காணி ஆவணங்களை எடுத்துச் செல்ல முற்படுவதாக கூறி போராட்டங்களும் நடந்தன. இந்த நிலையில் மின் தடை இயல்பாக நடந்தது தான் என்றும் அந்த சமயத்தில் அரச நிறுவனம் ஒன்றில் இருந்து ஆவணங்களை கொண்டு செல்ல வாய்ப்பு இல்லை என்றும்கூட சிலர் கூறினார்கள். அப்படி கொண்டு செல்லப்பட்டிருந்தால் அது பாரதூரமான விசயம் என்றும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறியிருந்தார். இந்த நிலையில் ஸ்ரீலங்கா அரச ஆதரவு எம்பியான சுரேன் ராகவன், வடக்கு மாகாண ஆவணங்களை கொண்டு செல்வதால் தமிழர் தேசத்தின் காணி அதிகாரம் பறிபோகாது என்று ஒரு புதிய கதையை குழம்பிய நிலையில் கூறினார்.
உண்மையில் வடக்கு மாகாணத்தின் காணி ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என்பதை அறிவித்த அதிகாரபூர்வமான ஒரு அறிவித்தலாக சுரேன் ராகவனின் கருத்தையே எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. அரச திணைக்களத்தில் இருந்து இப்படி ஆவணங்களை திருட்டுத் தனமாக களவாடிச் செல்வது என்பது அல்லது கடத்திச் செல்வது என்பது இந்த நாட்டில் உள்ள மிகப் பெரிய அநீதி நிலையைதான் எமக்கு உணர்த்துகிறது.
குற்றங்கள் பெருக்கப்பட்ட தேசத்தில் திருடர்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு வீடுடைத்துக் கொள்ளையடிப்பதற்கு ஒப்பாகவே வடக்கு காணி ஆவணங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் திருடி இருக்கின்றது. ஏன் வடக்கின் ஆவணங்களை இவ்வாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் திருடிச் செல்ல வேண்டும்? ஈழ விடுதலைப் போராட்டம் என்பது நிலத்திற்கான போராட்டம் ஆகும். ஈழத் தீவு முழுவதும் தமிழர்கள் நிறைந்து வாழ்ந்த ஒரு காலம் இருந்தது. அதன் எச்சமாகவே இன்றைக்கும் கதிர்காமம் திருத்தலம் காணப்படுகின்றது. ஈழத்தின் ஐந்து முனைகளிலும் காணப்படுகின்ற ஈச்சரங்களும் இதற்கு தக்க சான்றாதாரங்கள் ஆகும்.
ஸ்ரீலங்காவுக்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய காலத்தில் இருந்தே சிங்கள தேசத்தின் நில ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது. சுதந்திரத்திற்கு முந்தைய காலம் வரையில் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து வந்த சிங்களவர்கள், சுதந்திரத்திற்குப் பிறகு, வடக்கு கிழக்கில் கால் வைக்கத் தொஙடகினர். இதற்குப் பிறகு பாரிய சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு கிழக்கு எல்லைக் கிராமங்களை ஆக்கிரமிக்க அங்கே தமிழர்கள் படுகொலை செய்யத் துவங்கியது சிங்களம். நிலத்தை ஆக்கிரமிக்கவே இனப்படுகொலை இப்படித் துவங்கியது.
கோல்புறூக் அரசியலமைப்பில் தமிழர்கள் வாழந்த நிலப்பரப்பு, அதாவது தமிழர்களின் தாயகமாக 26 ஆயிரம் சதுர கிலோமீட்டர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு தமிழர்கள் வடக்கு கிழக்கில் வாழுகின்ற நிலரப்பு பற்றி ஆய்வு செய்தால் மிகப் பெரிய அதிரச்சியே காணப்படும். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மிக நீண்ட காலமாக தமிழர்களின் தாயகத்தின் நில அளவு பாதுகாக்கப்பட்டு வந்தது. ஸ்ரீலங்கா அரச படைகள் தமிழர் தாயகத்தை இராணுவ நடவடிக்கை மூலமாக கைப்பற்றினாலும் வெகு காலங்களிலேயே அவை தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.
அத்துடன் பெருமளவுக்கு சிங்களக் குடியேற்றங்கள் தவிர்க்கப்பட்டன. இந்த நிலையில் 2009 இனப்படுகொலை போரை முடித்த சிங்களப் பேரினவாத அரசு, அதற்குப் பிந்தைய காலத்தில் தமிழர்களின் தாயக நிலப்பரப்பை ஒடுக்கும் விதமாக நிலத்தை மிக வேகமாக ஆக்கிரமித்து வருகின்றது. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் என வடக்கின் எல்லைக் கிராமங்களில் பல குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொக்கிளாய் என்ற கிராமத்தின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதைப் போல வவுனியா நெடுங்கேணி தெற்கிலும் ஆக்கிரமிப்பு தலைவிரித்தாடுகிறது.
அதேபோல கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை அம்பாறை முதலிய மாவட்டங்களின் எல்லைக் கிராமங்கள் பறிபோன நிலையில் இப்போது மட்டக்களப்பையும் பல துண்டுகளாக ஆக்கிரமிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் இனவாத தலைவர்களின் ஆக்கிரமிப்பு ஒரு புறத்தில் நடக்க, சிங்களப் பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பு இன்னொரு புறத்தில் தமிழர்களை வருத்துகின்றது.
இதேபோல வடக்கு கிழக்கில் பெருமளவான காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். சுமார் ஒரு லட்சம் ஏக்கர் காணிகளை வடக்கு கிழக்கில் சிங்கள இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். அத்துடன் உயர்பாதுகாப்பு வலயங்களை அமைத்து மக்களை மீள்குயேற அனுமதிக்காமல் அவர்களை அகதியாக அலைய வைக்கும் அநியாயங்கள் இன்னமும் தொடருகின்றது. இப்படி ஒரு நிலையில் தான் வடக்கு காணி ஆவணங்களை திருடும் முயற்சியை சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்டிருக்கிறது.
இது தமிழர்களின் தாயகத்தை ஒட்டுமொத்தமாக திருட முயல்கின்ற முயற்சி. தான் இழைத்த இனப்படுகொலைக்காக இவ் அரசு தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்ற காலத்தில்கூட, அதாவது ஐ.ந. மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடக்கின்ற ஜெனீவாக் காலத்தில்கூட இப்படியொரு நிலத்திருட்டை நில ஆவணங்களின் கடத்தலை செய்கின்ற அரசின் கீழ் ஈழத் தமிழினம் எப்படி வாழ்வது? இப்படி ஆவணங்களை திருடுகின்ற ஸ்ரீலங்கா அரசு, ஈழத் தமிழ் இனத்தையே இனப்படுகொலை குழியில் தள்ளிவிட்டு எல்லோரும் ஒட்டுமொத்தமாக காணாமல் போய்விட்டனர் என்றும் சொல்லக் கூடியது.