இலங்கையில் மத்திய தர வர்த்தகத்தினரே மிக அதிகம். ஏழை மக்கள் மற்றும் அடித்தளத்தில் நாளாந்தம் உணவிற்கே சிரமப்படுகின்றவர்கள் இலட்சக் கணக்கானவர்கள். அவர்கள் அனைவரும் அன்றாடம் பயன்படுத்துகின்ற உணவுப் பொருட்களின் தரம் தொடர்பாக இப்போதெல்லாம் கூடுதல் கவனமெடுக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம். இன்றைய உணவுப் பொருட்கள் பலவற்றில் மறைந்திருக்கின்ற ஆபத்து தொடர்பாக மக்கள் தங்களது அவநம்பிக்கைகளை பொதுவெளியில் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்வதைக் காண்கின்றோம்.
வெகுஜன ஊடகங்கள் அடிக்கடி இது பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன. தரமற்றதும், ஆபத்தானதுமான உணவுப் பொருட்கள் அதிகாரிகளின் சோதனையின் போது அகப்பட்டுக் கொள்கின்ற செய்திகளும் ஊடகங்களில் அடிக்கடி செய்திகளாக வருகின்றன. ஆனால் அந்தக் குற்றங்கள் தொடர்பாக ஆதி முதல் அந்தம் வரை விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றங்களில் சம்பந்தப்பட்டோருக்கு சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டாலேயே மக்கள் நம்பிக்கையும் நிம்மதியும் கொள்ள முடியும்.
விசாரணைகள் தாமதம் அடைவதோ இல்லையேல் அவை அரைகுறையில் கைவிடப்படுவதோ பயனைத் தந்துவிடப் போவதில்லை. தண்டனை மீதான அச்சம், அலட்சியம் குற்றவாளிகள் மத்தியில் இருக்குமானால் குற்றங்களும் தொடர்ந்து கொண்டேயிருக்குமென்பதுதான் உண்மை.
நாட்டை தற்போது பரபரப்பாக்கியுள்ள செய்தி தேங்காய் எண்ணெய் தொடர்பானதாகும். நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் நச்சு இரசாயனப் பதார்த்தம் கலந்துள்ளதென்பது இரண்டாவது தடவை பகுப்பாய்வுப் பரிசோதனையின் போதும் உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த நச்சுப் பொருளானது மனிதருக்கு புற்றுநோய் போன்ற பேரபாயத்தை ஏற்படுத்தக் கூடியதென்று எமது வைத்திய நிபுணர்கள் உறுதியாகச் சொல்கின்றார்கள்.
அதேசமயம் எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட அந்த தேங்காய் எண்ணெய் இன்னுமே விநியோகத்துக்காக விடுவிக்கப்படவில்லையென்ற நிம்மதி தரும் செய்தியும் வந்துள்ளது. ஆனால் மறுபுறத்தில் அந்த தேங்காய் எண்ணெய் சந்தைக்குச் சென்று விட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன. ஊர்ஜிதப்படுத்தப்படாத அச்செய்தியை நம்பி விட முடியாது.
தேங்காய் எண்ணெய் விவகாரத்தை வைத்துக் கொண்டு அரசாங்கத்தின் எதிரணிகள் அரசியல் பிழைப்பு நடத்தத் தொடங்கியிருப்பதனால் வதந்திகளை நம்பலாகாது. ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு உண்டு. உறுதியான விளக்கம் இல்லாது போனால் மக்கள் வீணான அச்சத்துக்கு உள்ளாகக் கூடும்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்கையில், உணவுப் பொருட்களின் கட்டுப்பாடற்ற இறக்குமதியினால் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகள் தொடர்பாக சிந்திக்க வேண்டியவர்களாக நாம் இப்போது உள்ளோம். உணவுப் பொருட்களின் இறக்குமதி தொடர்பாக கண்டிப்பான கொள்கையை வகுக்க வேண்டிய அவசியம் தற்போது உருவாகியுள்ளது. இல்லாது போனால் இரசாயனம் கலந்த தேங்காய் எண்ணெயைப் போன்று வேறு பல ஆபத்தான உணவுப் பொருட்களும் எமது நாட்டுக்குள் வந்து சேர்ந்து விடக் கூடும்.
இலங்கையானது நிலவளம், நீர்வளம் கொண்ட அழகிய தேசம் ஆகும். விவசாயத்துக்கு ஏதுவான அத்தனை வளங்களையும் கொண்ட சிறப்பானதொரு தேசம் எமது நாடு. அதனால்தான் பண்டைக் காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு மிக்க நாடாக இலங்கை விளங்கியது. சுதேச முறையிலான விவசாயச் செய்கை மற்றும் சுதேச உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக எமது முன்னோர் தேகாரோக்கியம் உள்ளவர்களாக திகழ்ந்தனர். இன்று மக்கள் மத்தியில் பரவியுள்ள தொற்றாநோய்களெல்லாம் அன்று இருந்ததில்லை.
உணவுப் பொருட்களில் நச்சு இரசாயனங்களும், உணவுப் பொருட்களின் அநாவசிய இறக்குமதியும் படிப்படியாக அதிகரித்ததும் மக்கள் மத்தியில் ஆபத்தான வியாதிகளும் உருவாகத் தொடங்கின. புதிது புதிதான உணவுப் பழக்கங்களுக்கு மக்கள் அடிமையாகிப் போனார்கள். அந்த உணவுப் பழக்கங்களை மக்களுக்கு அடிமையாக்கும் கவர்ச்சியான விளம்பரங்கள் மறுபுறத்தில் பெருகி விட்டதனால் மக்கள் நச்சு இரசாயனங்களுக்கு ஆட்பட்டுப் போனார்கள்.
மக்கள் அவற்றிலிருந்து மீள்வதென்பது இலகுவான காரியமல்ல. எமது சிறுகுழந்தைகளும் கூட அவ்வாறான நவீன உணவுகளையே விரும்புகின்றன. பெற்றோரும் வாங்கிக் கொடுக்கின்றார்கள். உணவின் தரம் மற்றும் போசணை குறித்து கரிசனை கொள்ளாமல் சுவைக்காக மட்டுமே உணவுண்ணும் தவறான கலாசாரம் மோசமாகப் பெருகி விட்டது.
இதனால்தான் கட்டுப்பாடற்ற முறையில் பலவிதமான உணவுப் பொருட்களும் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மக்களும் அவற்றை உட்கொள்கின்றார்கள். புதிது புதிதாக கொடிய வியாதிகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. வர்த்தக மாபியாக்கள் பெரும் செல்வந்தர்களாக வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். எமது நாட்டுக்குள் விளைகின்ற சாதாரண உணவுப் பொருட்களையே இறக்குமதி செய்கின்ற அபத்தமாக காரியமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அவற்றின் சேர்மானங்கள் குறித்து மக்கள் சிந்திப்பதாக இல்லை.
இதற்கெல்லாம் ஒரேயொரு தீர்வுதான் உள்ளது. அநாவசிய இறக்குமதியானது நிறுத்தப்பட வேண்டும். அதேசமயம் அவசியமான உணவுகளின் உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்பட வேண்டும். மக்களின் ஆரோக்கியத்துக்கு தீங்கான எந்தவொரு உணவும் நாட்டுக்குள் வந்து விடாதபடி கண்காணிப்பு செலுத்த வேண்டியதும் அவசியமாகின்றது.
கொழும்பிலிருந்து ராஜபுத்ரன்